பாவம் மனிதன் – சிவகாமி.G (Canada)

பாவம் மனிதன்
மகா கெட்டிக்காரன்
கன்றுக்கு கூட பால் வைக்க மாட்டான்
கறந்து எடுத்து விட்டு
பசு பால் தரும் என்பான்
தடக்கி விழும் போது கல்லைக் கண்டு விட்டால்
கல்லு அடித்தது என்பான்
வாசலிலே நாயைக் கட்டி வைத்து
நாய் வீட்டைக் காக்கும் என்பான்
காக்காவைத் திருடன் என்பான்
வடையைத் திருடி விட்டதென்பான்
மரத்தை வெட்டி விட்டு
மக்கள் பாவம் செய்கின்றனர்
மழை வரவில்லை என்பான்
கஷ்டம் வரும்கால்
காரணம் தேடான்
கடவுளுக்கு கண் இல்லை என்பான்
முருங்கை மரத்தின் மகத்துவம் அறியான்
முருங்கை இலையை உணவிலும் சேர்க்கான்-பின்
தாதுக்கள் உடலில் குறைந்தது என்பான்

முசுட்டை இலையும் முடக்கொத்தானும்
பொன்னாவரசும் பொன்னாங்கண்ணியும்
வாதநாராயணியும் வல்லாரையும்
மரமா ? செடியா ? கொடியா?- என்று
அவனே இன்று குழப்பத்தில் உள்ளான்
முரசு கரைகிறது என்பான்
மூச்சுக்கஷ்டம் என்பான்
முன்பு போல் ஓடி ஆட முடியவில்லை என்பான்
அயன் இல்லை என்பான்
அயன் குளிசை போடுகிறேன் என்பான் -பின்
மலச்சிக்கல் என்பான்
மலம் கறுப்பாகப் போகிறது என்பான்

புழுங்கல் அரிசியைத் தவிர்த்தே வருகிறான்
B12 புற்று நோயைத் தடுக்கும் என அறியான்
வெள்ளைப் பொருட்களை விரும்பியே ஏற்கிறான்
வெள்ளைச் சீனி போடாத தேநீரும் இல்லை
கோதுமையில் விடியாத காலையும் இல்லை
மத்திய உணவிலும் பொன்னியின் ஆட்சி
இடையிடையே இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்
பிஸ்சா, பெர்கர், கே.ப்.சி. ,,,,,,,
உடல் கொழுக்கிறது தொந்தி பெருக்கிறது
சர்க்கரை, பிரஷர், கொலெஸ்டெரோல் என
தொற்றாத நோய்களெல்லாம் வரமாய் கிடைக்கிறது

விறகடுப்பும் வீட்டில் இல்லை
தண்ணீர் ஊற்ற மண்பானையும் இல்லை
பனையோலை விசிறியம் பாட்டியுடன் போய்விட்டது
ஆட்டுக்கல்லில் அரைத்த தோசையும் இல்லை
அம்மியில் அரைத்த சம்பலும் இல்லை
தொட்டுக்க பொடி செய்ய உரலும் இல்லை
அம்மி, ஆட்டுக்கல், திருகை, உரல் எல்லாம் அம்மம்மாவுடன்
உடன்கட்டை ஏறிற்று
உணவில் மட்டுமா மாற்றம் கண்டான்?
உடுத்து உடையையும் மறுசீரமைத்தான்- இன்று
சரும நோயால் சஞ்சலப் படுகிறான்
டெனிம் என்பது குளிருக்கானது
வெப்ப வலயத்தில் வேண்டாம் என்றால்
உணர மறுக்கிறான் மானத் தமிழன்
மொழியில் கூட வெள்ளையன் மோகம்
தாய் மொழி பேச சங்கடப் பட்டு தங்கிலீஷ் பேசுகிறான் நவீன தமிழன்
இயற்கையை வெறுத்தான்
செயற்கையை வரவேற்றான் – இப்போ
ஒன்லைன்னில் பெண் தேடுகின்றான் -மனிதா
நீ ரோபோவைத் திருமணம் செய்யாதிருப்பாயாக!!!!!!!