பாரிசவாம் : தாக்கங்களை தவிர்ப்பது எப்படி? Dr.க.சிவசுகந்தன்

பாரிசவாதம் என்பது என்ன? எமது மூளைக்கு செல்லும் குருதியோட்டத்தில் சடுதியாக ஏற்படும் பிரச்சினையாகும். இது மூளைக்கு செல்லும் குருதி கட்டிபடலாகவும் இருக்கலாம் அல்லது மூளையில் குருதிப்பெருக்கு ஏற்படலாகவும் இருக்கலாம்

பாரிசவாதம் வந்ததற்கான அறிகுறிகள் என்னென்ன?

இது பலவகையான அறிகுறிகளுடன் வரலாம். உதாரணம்- கால் கை விளங்காமல் போதல், உடலின் சில பகுதிகளில் உணர்ச்சித்தன்மை அற்றுப்போதல், கண்பார்வையில் பிரச்சினைகள் ஏற்படல், திடீரென கதைக்க
முடியாமல் போதல், மறதிக்குணம், தன்னையறியாமல் மலம், சலம் கழித்தல், நினைவற்றுப்போதல்.

இந்நோய்க்கு மருந்துகள் உண்டா?

இதற்கான மருந்துகள் இரத்தம் கட்டிபட்டுள்ளதா அல்லது இரத்தம் கசிந்துள்ளதா என்பதை பொறுத்தது. மற்றும் பிரதானமாக இன்னுமொரு பாரிசவாதம் வராமலிருக்கவே மருந்துகள் வழங்கப்படும்.

இரத்தம் கட்டிபட்டிருப்பின், நீங்கள் நோயாளியை 3மணித்தியாலத்தினுள் வைத்தியசாலைக்கு கொண்டு வருவீர்களானால், கட்டியை கரைக்க மருந்து வழங்கலாம். இதற்கு பிறகு கொண்டுவருவீர்களேயானால் மேலும் இரத்தம் கட்டிபடாமலிருக்க மருந்து வழங்கப்படும். இரத்தம் கட்டிபட ஏதும் காரணங்கள் இருப்பின் அதற்கான மருந்தும் வழங்கப்படும்.

இரத்தக்கசிவு ஏற்படுமாயின் இரத்தக் கசிவை தூண்ட கூடிய மருந்துகள் நிறுத்தப்படும். மேலும் இரத்தம் கசியாமலிருக்க மருந்து வழங்கப்படும்.

இவர்களை பராமரிக்க யார்யாரின் உதவிகளை நான் நாட வேண்டும்?

வைத்தியர்கள், மருத்துவ தாதியர், இயன் மருத்துவர்கள், பேச்சு பயிற்சியாளர்கள், தொழில் பயிற்றுவிப்பாளர், மனநல வைத்தியர்கள்.

பாரிசவாதம் வந்த நோயாளியை நான் எவ்வாறு பராமரிக்க வேண்டும்?

நீங்கள் கவனிக்க வேண்டிய விடயங்கள்

 • இயலாத அங்கங்களைபராமரித்தல்
 • அவர்களின்தொடர்பாடலை மேம்படுத்தல்
 • உணவூட்டலை மேம்படுத்தல்
 • மனரீதியான பாதிப்புகளைகுறைத்தல்
 • சிறுநீரை சுயமாககழிப்பதை மேம்படுத்தல்.

இவர்களை எவ்வாறு படுக்க வைக்க வேண்டும்?

இயலாத கை நீட்டியவாறு இருக்க வேண்டும். இயலாத கால் மடித்து இருக்க வேண்டும்.இதை மனதில் கொண்டு பின்வரும் முறைகளில் அவர்களை படுக்க வைக்கலாம்.

எவ்வாறு இவர்களை இருத்த வேண்டும்?

 • ஒருபக்கம் சரியாமல் நேராக இருத்த வேண்டும்
 • மேசை ஒன்றை முன்னே வைத்து இயங்காத கையை அதில் நீட்டியவாறு வைக்க வேண்டும்.
 • இவர்களுக்கான விசேட கதிரைகளும் உண்டு.

இவர்களை தத்தமது வேலைகளை செய்யவைக்க என்ன செய்ய வேண்டும்?

 • கொஞ்சம் கொஞ்சமாக குளித்தல், உடைமாற்றல போன்ற வேலைகளை பழக்கலாம்.
 • இவர்களுக்கு ஆதரவளிக்க சில உபகரணங்கள் சந்தையில் உண்டு. அவற்றை வாங்கலாம்.
 • உங்கள்வீட்டில் அவர்களுக்கேற்றவாறு மாற்றங்களை செய்யலாம்.
  உதாரணம்-   Comed  வகையான மலசல கூடத்தை பாவித்தல், இல்லாதவர்கள்
  பிளாஸ்டிக் கதிரையை வெட்டி பாவிக்கலாம்.
  வீட்டில் நீர்திருகிகளுக்கு நீண்ட பிடியை போடலாம்.

இவர்கள் மீண்டும் நடக்கவும் இடம்பெயரவும் என்ன செய்ய வேண்டும்?

 • மூட்டுக்களுக்கும் தசைகளுக்கும் தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
 • அவர்கள் கட்டிலில் புரளவும், இருக்கவும், எழுந்து நிற்கவும் உதவ வேண்டும்.
 • அவர்கள் நடப்பதற்கு ஏதுவாக நீண்ட குச்சிகளை வாங்கி கொடுக்க வேண்டும்.


மனநிலை ரீதியாக என்ன பிரச்சினைகள் ஏற்படலாம்?

விரைவில் கோபமடைதல் , மறதித்தன்மை,தமது வேலைகளை செய்வதில் சிரமம், களைப்பு
போன்றன ஏற்படுகின்றன.

இவர்களுக்கு எவ்வகையான உடற்பயிற்சியை வழங்க வேண்டும்?

 • தினமும் குறைந்தது மூன்று முறையாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
 • உடலிலுள்ள எல்லா மூட்டுக்களுக்கும் பயிற்சி கொடுக்க வேண்டும்.
 • இவர்களை எப்போதும் பாதிக்கப்பட்ட பக்கத்தாலேயே அணுக வேண்டும்.
 • இவர்களுக்கு தேவையான பொருட்களையும் பாதிக்கப்பட்ட பக்கத்திலேயே வைக்க வேணடும்.

பாரிசவாதத்தால்இவர்களால் கதைக்க முடியாமல் போயிருப்பின் என்ன செய்யலாம்?

 • கை மொழிகளை பாவிக்கலாம்
 • காகிதத்தாளையும் பேனாவையும் வழங்கி எழுத சொல்லலாம்,
 • தேவையான போது கூப்பிட மணியை பாவிக்கலாம்.

இவர்களுக்கு எவ்வாறு உணவு வழங்குவது?

 •  நினைவில்லாமலிருப்பின் ஒருபோதும் உணவோ நீரோ கொடுக்கக்கூடாது. குழாய் மூலமே பருக்க வேண்டும்.
 • நினைவோடிருப்பின் இருத்திய நிலையில் சிறிதளவு நீரை கரண்டியால் கொடுத்து பாருங்கள்.
  அவர் விழுங்குகிறார், இருமல் வரவில்லையெனில் உணவு, நீராகாரத்தை வாய்மூலம் கொடுக்கலாம். இல்லையெனில் குழாய் மூலமே பருக்கலாம்.

இவர்களுக்கு சிறுநீர் கழிப்பதில் சிரமமிருப்பின் என்ன செய்யலாம்?
எல்லோருக்கும் இப்பிரச்சினை ஏற்படுவதில்லை. அவ்வாறு ஏற்படினும் பல நாட்களுக்கு இது நீடிப்
பதில்லை. முதலில் சிறுநீர் குழாய் மூலம் வெளியேற்றப்படும்.

பின் சிறுநீர் பையின் தொழிற்பாட்டை மேம்படுத்த பயிற்சி வழங்கப்படும். சிறுநீர்ப்பை சரியாக இயங்க தொடங்கியபின் குழாயை கழற்றலாம்.

வேறென்ன பிரச்சினைகள் இவர்களுக்கு ஏற்படலாம்?

 • முதுகில் படுக்கைப்புண் உருவாதல்
 • கால்களில் இரத்தம் கட்டிபடல்
 • அடிக்கடி நுரையீரல் தொற்றுக்கள் ஏற்படல்
 • எலும்புகள் தேய்வடைதல்
 • வலிப்பு ஏற்படல்

Dr.க.சிவசுகந்தன்
யாழ். போதனா வைத்தியசாலை