தூக்கம் கலைத்த கனவு!  வேகம் தொலைத்த விவேகம்… சிவாணி பத்மராஜா

கடமைக்காக கொழும்பு சென்ற வேளை,
வீதி விபத்தில் பலியான 11 ம் அணி
வைத்தியர் திருமதி கௌரிமனோகரி
நந்தகுமாரின் நினைவாக …………..,
இன்று அவர் மறைந்து மாதம் ஒன்று ( 11/11/16 ).

வீதி விபத்தில்
விதி மாற்றிப் போன
தோழியுன்னைத்
தொலைத்த துயருடன்
தொடர்கிறேன்
வாகன விபத்துகள்
வகைக்கொன்றாய்
கணனிகள் கதை சொல்ல – இங்கு
கனத்துப் போகிறது நெஞ்சம்.

விண்ணிலிருந்து குண்டு விழும்
மண்ணிலிருந்து வெடி வெடிக்கும்
மண்ணெண்ணெய்  வாங்க
மணிக் கணக்கில் காத்திருந்து
மருத்துவமும் படித்தவர்கள்.

கழட்டிப் பூட்டிய
கிழட்டுச் சைக்கிளில்
காதம் கடந்தவர்கள் – இன்று
கார் கொண்ட காரணத்தால்
காலனை அழைப்பதுவோ?

தெல்லிப்பளை  இருந்து
தெற்காலே  சாவ, கச்சேரி  கடந்து
கிளாலி,  கிளிநொச்சி,
வன்னியென்ன, வான் பறந்து,  
தெறித்த தெறிப்பினிலே
திசையெங்கும் சிதறுண்டு
வாழ வரம் பெற்றோம் – இன்று
வாகனத்தால் வதை படவோ?

என்னவென்று  சொல்ல
ஏக்கமாய் இருக்கிறது – வீதிப்
பண்பொன்று பேணப்
பாடம் நடத்திடவோ?

நீ விழித்திருந்து படித்ததெல்லாம்
வழி பறித்துப் போக – இனி
விழி வழியும் நீர் துடைத்துப்  –  புது
வழி காணலாமோ?

வாழ்க்கை எனும் பயணம்
வழுவாமல் இருப்பதற்கு
வரை முறைகள் இருப்பது போல்
வழிப் பயணம் தொடர வீதி
விதி முறைகள் தெரியட்டும்.

பாலர் கூடத்தில்
படிப்பித்தல் தொடங்கட்டும்
பல்கலை கற்றவரும்
பாங்காய் நடக்கட்டும்.

வீதி விதி முறைகள்
விளம்பரம் பெற்றிடட்டும்  – இனி
விதி என்ற பேச்சு
வீண் பேச்சாய்ப் போகட்டும்.

திசை காட்டும் பலகைகள்
தொடர்பாடல் செய்யட்டும்
சைகை சமிக்கைகளை – வண்டிகள்
சரியாய்ப் புரியட்டும்.

வாகன விளக்கு வைக்க
ஆவன செய்யட்டும்.
பாவனையில் உள்ள வண்டி
பழுதின்றி இயங்கட்டும்.

வழி மேலே விழி வைத்து
வண்டிகள் போகட்டும்
வாகன ஓட்டிகள்
வழி பார்த்ததே செல்லட்டும்.
 

பாத சாரிகளும்
பண்பாடு பேணட்டும்
பட்டறிந்தே  கெடாமல்
பக்குவமாய் நடக்கட்டும்.

இருக்கைப் பட்டி
இதயங்களைக் காக்கட்டும்
இறுக்கும் பட்டி – வாழ்வின்
இருப்பைச் சொல்லட்டும்.

புத்தகங்கள் கூட
புது உறைகொள்ளும் போது
தலையை மட்டும் நாம்
தவிக்க விடலாமோ?
கவசம் அணிந்து
காப்பாறுவோமே.

அவசரம் என்றாலும்
அலை பேச வேண்டாம்
அருமந்த உயிரது
விலை பேச வேண்டாம்.

செல்லிடப் பேசியதை
செவிமடுக்க வேண்டாம் – பின்
கொல்லிடும் பேசி என்று
குறை சொல்ல வேண்டாம்

கண்ணிமைக்கும் பொழுதில்
கதை மாறிப் போகும்
தண்ணீர் குடிக்கையிலும்
தடம் மாறக் கூடும்

இசைத்தட்டை மாற்றி
இழு பட வேண்டாம்
வசையாகும் வாழ்வு – அந்த
வம்புகள் வேண்டாம்.

மதுவோ  வண்டிகளில்
மருந்துக்கும் வேண்டாம்.
மரணத்தை மதி மாறி
மாலையிட நேரும்.
பழி தேட வேண்டாம் – அந்தப்
பாவங்கள் வேண்டாம்
பாரில் ஒரு வாழ்வு – அதைப்
பழுதாக்க வேண்டாம்.

இறுதியில்
தூக்கம் உம் கனவுகளைக்  
கலைக்காது  இருக்கட்டும்.
வேகத்தில் உம் விவேகம்
தொலையாது இருக்கட்டும்  

11M அணி சார்பில்,
சிவாணி பத்மராஜா.