எனக்கு மலச்சிக்கல் உள்ளது. இதற்கு சரியான தீர்வு??

எனக்கு 40 வயது ஆகிறது. எனக்கு மலச்சிக்கல் உள்ளது இதனால் உடலில் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதற்கு சரியான தீர்வு சொல்லுங்கள்.

மலச்சிக்கல் எனப்படுவது ஒரு வாரத்தில் 03 தடவைகளுக்கு குறைவாக மலம்களித்தல் அல்லது மலத்தின் கடினத்தன்மை அல்லது மலம் கழித்தலிலுள்ள கடினத்தன்மை அல்லது பூரணமாக மலம் கழிக்கவில்லை என்ற உணர்வு என வரையறை செய்யலாம்.

பொதுவாக மலச்சிக்கலானது முறையற்ற உணவுப் பழக்கங்கள், நீர் அருந்துதல் போதாமை, ஒழுங்கற்ற முறையில் மலங்கழிக்க செல்லுதல் போன்றவற்றினால் ஏற்படலாம். இவற்றை விட சில மருத்துவ காரணங்களாலும் மலச்சிக்கல் ஏற்படலாம். உதாரணமாக தைரொக்சின் குறைபாடு, வேறு சில மாத்திரைகள் பயன்படுத்துதல் வேறு குடல் சம்பந்தமான நோய்கள் போன்றவையாகும்.

எனவே நீங்கள் மலச்சிக்கலை தவிர்ப்பதற்கு ஒவ்வொரு நாளும் குறைந்தது 2 லீற்றர் நீராவது அருந்த வேண்டும். உங்கள் உணவில் அதிகளவு நார்ப்பொருள்ள உணவுகளை, பழங்கள், மரக்கறிகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவற்றை விட நீங்கள் தினமும் குறித்த ஒரே நேரத்தில் மலங்கழிக்க செல்ல உங்களை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்துவர உங்கள் மலச்சிக்கல் நீங்கும். இவற்றை விட நீங்கள் வேறு ஏதாவது மலச்சிக்கலை ஏற்படுத்தக் கூடிய மாத்திரைகளை பயன்படுத்தினால் அவைபற்றி உங்கள் வைத்தியரிடம் கேட்டு அவற்றை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

இவற்றுக்கு உங்கள் மலச்சிக்கல் குணமடையாது விடின் வைத்தியரை நாடி உங்களிற்கு மேற்குறிப்பிட்டது போன்று வேறு ஏதாவது காரணங்கள் உண்டா என்று அறிந்து அவற்றிற்கு உரிய சிகிச்சையை பெற்றுக்கொள்ள வேண்டும்.

நீங்கள் உடலில் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றது. என குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் அவை என்ன என குறிப்பிடப்படவில்லை உங்களிற்கு மலச்சிக்கலுடன் நிறை அதிகரித்தல், பசியின்மை, குளிரை தாங்கமுடியாமை, தோல் உலர்வடைந்து காணப்படல், பகலில் நித்திரை தூக்கம், தலைமுடி உதிர்த்தல், போன்றன காணப்படின் இவை தெரொயிட் குறைபாட்டிற்குரிய அறிகுறிகளாகும். எனவே நீங்கள் வைத்தியரை நாடி அதற்கு உரிய சிகிச்சை பெற்றுக்கொள்வது சிறந்தது.