பனையின் உன்னதமான சத்துணவுகளை உதாசீனப்படுத்தப்படுவது ஏன்? (பகுதி2) – Dr.சி.சிவன்சுதன்

எம்மத்தியிலே ஒரு கோடிக்கும் அதிகமான பனைகள் இருந்தும் அவற்றில் இருந்து கிடைக்கும் பனம்பழங்களில் 5 வீதமான பனம்பழங்கள் கூட உபயோகப்படுத்தப்படுவதில்லை. வண்டுகளிடமிருந்தும் புழுக்களிடமிருந்தும் அவற்றை முற்றாகக் காப்பாற்றி அனைத்துப்பழங்களையும் முழுமையாகப் பயன்படுத்துவது எப்படி என்பது சம்பந்தமான வழிமுறைகளை நாம் ஆராயவில்லை.

புரதச்சத்தது நிறைந்த விற்றமின்கள்,கனியுப்புக்கள் நிறைந்த எமது அரும் சொத்தான பனம்பழங்கள் வீணடிக்கப்பட்டு மண்ணுக்கு உரமாகிக்கொண்டிருக்கின்றன.

பனம்பழங்களின் உலர்நிறையில் 11 வீதம் புரதமும் பெருமளவு பீட்டா (β) கரோட்டினும் ஏனைய விற்றமின்களும் இரும்பு, கல்சியம் போன்ற கனியுப்புக்களும் அதிகமாகக் காணப்படுகின்றன. இந்தப் பனம்பழங்களை மக்கள் விரும்பி உண்ணக்கூடிய வகையில் எவ்வாறு மாற்றங்கள் செய்வது என்பது சம்பந்தமான பல ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். சோடாவுக்கு மாற்றீடாக பனம் பழங்களிலிருந்து பலவகையான சுவையான பானங்கள் உற்பத்தி செய்யப்பட வேண்டும். இடியப்பத்தினுள்ளும் பிட்டினுள்ளும் பனங்களி சேர்த்து சமைப்பதன் மூலம் அவற்றின் சுவையும் நிறமும் ஊட்டச்சத்தும் மெருகு பெறும் என்பது சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும். பனங்களிகளை இலகுவில் பிரித்தெடுப்பது பாதுகாக்கும் பொறிமுறைகள் கண்டறியப்பட வேண்டும்.

பனம்பழங்களின் மருத்துவக் குணங்களும் அதிலே காணப்படும் நோய் எதிர்ப்புத்தன்மையும் விஞ்ஞானபூர்வ ஆராய்ச்சிகள் மூலம் உறுதி செய்யப்பட வேண்டும். இந்த முயற்சி வெற்றி அளிப்பின் நாம் பனம்பழங்களை ஈய உறைகளில் சுற்றி அவற்றில் ஸ்ரிக்கரும் ஒட்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய நிலையும் ஏற்படலாம்.

பலவிதமான விளம்பர யுத்திகளுடன் இறக்குமதியாகி அதிக விலையில் விற்பனையாகும் ஓட்ஸ் வகைகள் எமது அன்றாட உணவுகளில் ஒன்றாக மாறும் நிலை காணப்படுகிறது. ஆனால் எமது சொந்த மண்ணில் விளையும் ஓட்ஸி லும் சிறந்த அதிக நார்த்தன்மை கொண்ட மலிவான இயற்கையான பனங்கிழங்குகளை நாம் புறக்கணித்து விடுகின்றோம். பனங்கிழங்குகள் அதிகளவு நார்த்தன் மையும் மிகக்குறைந்தளவு கொழுப்பும் கொண்டிருப்பதுடன் உலர்நிறையில் 12 வீத புரதத்தையும் பல விற்ற மின்கள் கனியுப்புக்களையும் கொண்டிருக்கின்றன.

பனங்கிழங்குகளில் இருக்கும் மாப்பொருளானது குறைந்த வேகத்திலே உடலினுள்அ கத்துறிஞ்சப்படுவதால் இது நீரிழிவு நிலை உள்ளவர்களுக்கும் ஒரு சிறந்த உண வாக காணப்படுகின்றது. பனம்பழங்களின் பயன்கள்அனைத்தையும் எடுத்த பின்பு அதன் கொட்டைகளை பனம்பாத்தி போடுவதன் மூலம் பனங்கிழங்குகளை பெற்றுக்கொள்ள முடியும். இதன் மூலம் பனம்பழங்களும் பனம் விதைகளும் பயனுடையவையாக மாற்றம் பெறும். அத்துடன் பனங்கிழங்குகளை பதப்படுத்தி பனங்கிழங்குகளாகவே பாதுகாக்கும் பொறிமுறை கண்டறியப்பட வேண்டும்.

Dr.சி.சிவன்சுதன்
பொது வைத்திய நிபுணர்.

பனையின் உன்னதமான சத்துணவுகளை நாம் உதாசீனப்படுத்ப்படுவது ஏன்? பகுதி 1