நீரிழிவு உள்ளவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை – வைத்திய கலாநிதி சிவ.தியாகராஜா

உணவுக்கட்டுப்பாடு

நீரிழிவு நோயாளர்கள் உடல் நலத்துடன் ஆரோக்கியமாக வாழ வேண்டுமானால்  உணவுக்கட்டுப்பாடு அவசியம் என்பது ஏற்கனவே வலியுறுத்தப்பட்டுள்ளது.

 1. உணவில் கொழுப்பு 30 சதவீதமாகக் குறைக்கப்பட வேண்டும். எண்ணெயில் பொரித்த உணவுகள் வேண்டாம். கொழுப்புள்ள இறைச்சி வகைகள் தவிர்க்கப்பட வேண்டும்.
 2. தவிட்டு அரிசி, தவிட்டுப்பாண், பழங்கள், மரக்கறி வகைகள், பருப்பு, கீரை ஆகியன உகந்த
  உணவுகள்.
 3. மாமிசம் புசிப்பவர்கள் கொழுப்புக் குறைவுள்ள மீன்வகை, கோழி, வான்கோழி என்பன உபயோகிக்கலாம்.
 4. இனிப்புள்ள பானங்கள், ஐஸ்கிறீம், சொக்லட், லட்டு ,பலகாரங்கள் குறைக்கப்பட வேண்டும். தவிர்த்தல் நல்லது.
 5. உப்பு குறைக்கப்பட வேண்டும்.தகரத்தில் அடைத்த உணவுப் பண்டங்களில் உப்பு அதிகமா
  கையால் அவற்றைத் தவிர்க்கவும்.
 6. தினசரி சரியான நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.பசிக்கவில்லை என்று பட்டினி இருப்பது ஆபத்து.
 7. மது அருந்துவதை குறைப்பது நல்லது. தவிர்ப்பது மிகச்சிறந்தது.

உடற்பயிற்சி

உடற்பயிற்சியானது நீரிழிவு நோய்க்கட்டுப்பாட்டின் முக்கியமானதோர் அம்சமாகும். மாலைநேரங்களில் பூங்காக்களிலோ, திறந்த வெளிகளிலோ நடப்பது நல்லது. மெல்ல ஓடுவது, சைக்கிள் ஓடுவது, நீந்துவது,
நடனமாடுவது என்பன தேவையான பயிற்சிகள்.இக்காலத்தில் சனசமூக நிலையங்களில் குழுமப்பயிற்சி,
யோகாசனப்பயிற்சி வகுப்புக்களில் பங்கெடுத்துக் கொள்வது அவசியம்.

எடை குறைப்பு

நமது எடை நாம் உண்ணும் உணவு வகை, நாம் மேற்கொள்ளும் உடற்பயிற்சி என்பவற்றில் முக்கியமாக
தங்கியிருக்கிறது. உணவிலும், உடற்பயிற்சியிலும் முக்கிய கவனம் செலுத்தினால் எடையை சுலபமாகக்
குறைக்கலாம்.

நீரிழிவு நோயாளர்களின் எடை கூடும் போது இன்சுலின் தொழிற்பாடு ஒழுங்கு மீறிப் போகிறது. இன்சுலின்
சீராக வேலை செய்வதற்கு நமது உயரத்திற்கேற்ற எடையை நிர்வகிப்பது அவசியம்.

பிரயாண ஒழுங்குகள்

 1. நீரிழிவு நோயாளர்கள் நீண்ட பிரயாணத்தை மேற்கொள்ளும் போது தேவையான மருந்துகள், இன்சுலின், இரத்தப் பரிசோதனைக் கருவிகள் ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும்.
 2. தேவையான உணவும், தண்ணீரும் கைவசம் வைத்திருப்பது உபயோகமாக இருக்கும்.
 3. நீரிழிவு நோயாளர்களை தொற்று நோய்கள் சுலபமாகத் தாக்குகிறது. எனவே வெளிநாட்டுப் பிரயாணங்களை மேற்கொள்ளு முன் தேவையான தடையூசிகள், குடல் காய்ச்சல் (Typhoid), மலேரியா எதிர்ப்பு மருந்துகள் ஆகியவை பற்றி கவனமெடுக்க வேண்டும்.
 4. நீங்கள் ஒரு நீரிழிவு நோயாளி என்பதையும், நீங்கள் எடுக்கும் மருந்துகளின் விபரங்களையும்கொண்ட ஓர் அடையாள அட்டையை கைப்பையில் வைத்திருப்பது உபயோகமானது.

நீரிழிவு நோயாளர்கள்

 1. கண்டிப்பான உணவுக்கட்டுப்பாட்டையும்
 2. கட்டாய உடற்பயிற்சிகளையும்
 3. ஒழுங்கான இரத்தப்பரிசோதனைகளையும்,

அதற்கேற்ப தவறாது மருந்துகள் எடுப்பதையும் தொடர்ந்து மேற்கொண்டு வருவார்களேயானால் நீரிழிவினால்ஏற்படக்கூடிய சிக்கல் நிலையைத் தவிர்த்து உற்சாகமாகவும் ஆரோக்கியமாகவும் நீண்ட நாட்கள் வாழமுடியும்.

வைத்திய கலாநிதி சிவ.தியாகராஜா
(B.Sc, M.B.B.S . PH .d)
இலண்டன்