எனது திருமண வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படுகின்றது. ஆலோசனை வழங்கவும்?

எனது வயது 32ஆகும். ஆண்குறி விறைப்படைவது குறைவாக இருப்பதனால் எனது திருமண வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படுகின்றது. இது தொடர்பாக ஆலோசனை வழங்கவும்?

ஆண்குறி விறைப்படையாமல் இருப்பது அல்லது குறைவாக விறைப்படைதல் என்பது சில ஆண்களுக்கு இருக்கின்ற ஒரு பிரச்சினையாகும். இவ்வாறு ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. உளவியல் சார்ந்த காரணங்கள். நரம்புகள் தொடர்பான பிரச்சினைகள், குருதிக் குழாய்களில் ஏற்படுகின்ற பிரச்சினைககள். நீரிழிவு போன்ற நோய்கள் மற்றும் ஆண்குறியில் உள்ள பிரச்சினைகள் போன்றன காரணமாக இருக்கலாம். இதேபோல பலவிதமான ஹோர்மோன் பிரச்சினைகளும் இதற்குக் காரணமாகவிருக்கலாம். இவ்வாறான பிரச்சினையுள்ளவர்கள் வைத்திய ஆலோசனையைப் பெறுவது மிகவும் அவசியமாகும். தேவையான தரவுகளைப் பெற்றுக் கொள்வதன் மூலமும் உடற் பரிசோதனையை மேற்கொள்வதன் மூலமும் இதற்கான காரணத்தை மருத்துவரால் ஊகித்துக் கொள்ள முடியும்.

ஒருவருக்கு திடீரெனவோ இடைக்கிடையோ இந்தப் பிரச்சினை காணப்படுமிடத்து, அது உளவியல் சார்ந்த காரணத்தைக் கொண்டிருக்கும் சாத்தியம் அதிகமாகும்.சிறிது சிறிதாக ஏற்பட்டு இந்தப் பிரச்சினையானது நிலைத்து நிற்கும் போது அது உடலியல் சார்ந்த காரன மாக (organic cause) இருக்கும் சாத்தியம் அதிகமாகும். சிலருக்கு மனப்பிரச்சினைகள், வேலை மற்றும் பிற காரணங்களால் ஏற்படுகின்ற மன அழுத்தம் (Stress) இதற்குக் காரணமாக அமைகின்றது. அதேபோல பல விதமான மருந்துகளின் பக்க விளைவாகவும் இந்தப் பிரச்சினை ஏற்படலாம். மதுபானம், புகைத்தல் மற்றும் போதைப் பொருள் பாவனையாளர்களுக்கும் இந்தப் பிரச்சினை ஏற்படும் வாய்ப்பு அதிகமாகும். நரம்பு. குருதிக் குழாய்கள் தொடர்பான நோய்களும் இதற்குக் காரணமாக அமையலாம்.

நீரிழிவு, தைரொயிட்குறைபாடு. சனணித் தொகுதிக் குறைபாடு (Hypogonadism) போன்ற ஹோர்மோன் பிரச்சினைகளும் இதற்குக் காரணங்களாக இருக்கலாம். எனவே இந்தப் பிரச்சினை இருப்பவர்கள் பல விதமான இரத்த ஹோர்மோன் பரிசோதனைகளுக்கும் தேவையேற்படின் மேலதிக பரிசோதனைகளுக்கும் உட்பட வேண்டியிருக்கும்.

இந்தப் பிரச்சினையிலிருந்து தீர்வு பெறுவதற்குப் பல விதமான சிகிச்சை முறைகள் உள்ளன. இந்தச் சிகிச்சை
முறைகள் பிரச்சினைக்கான காரணத்துக்கேற்பவேறுபட நேரிடும். உளவியல், மன அழுத்தப் பிரச்சினையுள்ளோருக்கு உளவளத் துணை (Councelling) போன்றவை தேவைப்படும்.

உடலியல்சார்ந்த நோய்கள் காரணமாக இருக்கும்போது அவற்றுக்குத் தேவையான சிகிச்சையை வழங்குவது அவசியமாகும். நீரிழிவு போன்ற நோய்கள் கட்டுப்பாட்டில் இல்லாமல் இருக்கும் போதும் இந்தப் பிரச்சினை இருக்கும்.

உடல், உள நோய்களுக்கு உள்ளெடுக்கும் சில மருந்துகள் குளிசைகளும் இதற்குக் காரணமாகவிருக்கலாம். எனவே மருத்துவரானவர் தேவைக்கேற்ப பக்க விளைவு குறைந்த மருந்தை மாற்றி வழங்க முடியும். மதுபானம். புகைத்தல் மற்றும்போதைப்பொருள் பாவனையுள்ளவர் கள் அதனைக் கைவிடுதல் மிக அவசியமாகும்.

தைரொயிட் சனணித் தொகுதிஹோர்மோன் தொடர்பான பிரச்சினையுள்ளோருக்கு அதற்கேற்ற விதத்தில் சிகிச்சை வழங்குவது அவசியமாகும்.

ஆண்குறி விறைப்படைவதை துண்டுவதற்கு பல வகையான குளிசைகள் உள்ளன. இதனை மருத்துவரின் சிபாரிசின் பேரிலேயே பயன்படுத்தவேண்டும். ஏனெனில் இந்த மருந்துகளினால் சில பக்க விளைவுகள் ஏற்படக் கூடும்.

இதேபோல சில மருந்துகளைப் பாவிப்போர் (உதாரணம் இருதய நோய்க்கான ISMN போன்ற நைத்திரேற் குளி கைகள்) இந்த மருந்துகளைப் பயன்படுத்துக் கூடாது. இது போன்று பல விதமான ஊசிமருந்துகளும் (injections) செயற்கை உபகரணங்களும் (vacuum.device) உள்ளன தேவையேற்படின் சத்திர சிகிச்சைக்கும் உட்படவேண்டியிருக்கும்.

எனவே இறுதியாக உங்களைப் போன்ற ஆண்குறி விறைப்படையாத தன்மை அல்லது குறைவாக விறைப் படையும் பிரச்சினை உள்ளவர்கள் வைத்திய ஆலோசனையைப் பெற்றுக் கொள்வது இன்றியமையாததாகும்.

இப்பிரச்சினைக்கு பல விதமான சிகிச்சை வழிமுறைகள் உள்ளன. இன்றைய காலகட்டத்தில் பல வகையான போலியான விஞ்ஞான ஆர்வமான அணுகுமுறையற்ற சிகிச்சை வழங்குபவர்கள் பெருகியுள்ளனர். எனவே போலியான தகுதியற்ற சிகிச்சை முறைகளை தவிர்ப்பது மிகவும் அவசியமாகும்.

தகுதியான வைத்தியரொருவரின் ஆலோசனைப்படி இப் பிரச்சினைக்கான மூலகாரணத்தை கண்டறிந்து அதற்கு தேவையான சிகிச்சையைப் பெற்றுக்கொள்வதன் மூலம் இப்பிரச்சினைக்கு தீர்வைக்காணலாம்.

–மருத்துவர்.M.அரவிந்தன். நீரிழிவு அகஞ்சுரக்கும் தொகுதியியல், சிறப்பு வைத்திய நிபுணர். யாழ் போதனா வைத்தியசாலை