டெங்குக் காய்ச்சல் – வைத்தியர் A.Q.H.M.ஆஷிகியு

1) டெங்குக் காய்ச்சல் என்றால் என்ன?
டெங்குக் காய்ச்சல் என்பது வைரஸ் மூலம் பரவுகின்ற ஒரு தொற்றுநோயாகும். இதை ஏற்படுத்தும் வைரஸ்களாவன, DEN1, DEN2, DEN 3, DEN4 என்பனவாகும். இந்த வைரஸ்களின் காவிகளாக ஈடிஸ் வகையைச் சேர்ந்த ( Aedes Algypti, Aedes Albopictos) நோய்த் தொற்றுள்ள பெண் நுளம்புகள் செயற்படுகின்றன.

2) டெங்குக் காய்ச்சல் எவ்வாறு பரவுகின்றது? எவ்வாறு உண்டாகின்றது?

இது நுளம்புக்கடியின் மூலமாக மட்டுமே ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும். ஈடிஸ், ஜிப்டி வகை நுளம்புகள் ஒரு வகை வெள்ளை நிற உடம்பு மற்றும் கால்களுடன் இருக்கும். இந்த நுளம்பு டெங்கு நோயாளியினுடைய இரத்தத்தை உறிஞ்சும் போது டெங்கு வைரஸையும் பெற்று விடுகின்றது. பின்பு இதே நுளம்பு இன்னொருவருடைய இரத்தத்தை உறிஞ்சும் போது இந்த டெங்கு வைரஸை அவருடைய இரத்தத்தில் பாய்ச்சுவிடுகின்றது.

டெங்கு வைரஸானது இரத்தத்திலிருந்து நிணநீர் நாளங்களுக்கு சென்று அங்கு பெருக்கம் அடைகின்றன. போதிய எண்ணிக்கையில் பெருக்கம் அடைந்தவுடன் அறிகுறிகளை தோற்றுவிக்கின்றன.

3)டெங்குத் தொற்று ஏற்பட்ட எல்லோருக்கும் அறிகுறிகள் ஏற்படுமா? ஏற்படுமாயின் வைரஸ்
தொற்றிய தினத்திலிருந்து எத்தனை நாட்களுக்குப் பின் அறிகுறிகள் ஏற்படும்?

சிலருக்கு இது எவ்வித அறிகுறியையும் உண்டாக்குவதில்லை. மேலும் சிலருக்கு சில அறிகுறிகள் மட்டுமே
இருக்கும்.டெங்கு நோயின் அடைப்புக்காலம் ((Incubation Perid ) அதாவது வைரஸ் தொற்றிய தினத்திலிருந்து நோய் அறிகுறிகள் உண்டாகும் தினம் வரையான காலம் 3-14 நாட்களாகும்.

4) நோய் அறிகுறிகளை கொண்ட நபர்களுக்கு எவ்வாறான நோய் நிலைமைகள் ஏற்படலாம்?

 • சாதாரண வைரஸ் காய்ச்சல் நிலைமை (undifferentieted fever )
 • டெங்குக் காய்ச்சல் (dengu fever -DF )
 • டெங்கு குருதிப்பெருக்கு நிலைமை (dengue heamorhagic fever – DHF )
 • அசாதாரண நோய் அறிகுறியுடன் கூடிய டெங்கு நோய் நிலைமை (Expended dengue syndrome)

இவற்றுள் கூடுதலாக ஏற்படுவது டெங்குக் காய்ச்சல் (DF) மற்றும் டெங்கு குருதிப்பெருக்கு நிலைமை (DHF) ஆகும்.  இறுதியில் குறிப்பிடப்பட்ட அசாதாரண நோய் அறிகுறியுடன் கூடிய டெங்கு நோய் நிலைமை மிக அரிதாகவே ஏற்படு கின்றது. (<1%)

5)டெங்குக் காய்ச்சல் (DF) மற்றும் டெங்கு குருதிப் பெருக்கு (DHF) என்பவற்றின் அறிகுறிகள் என்ன?

டெங்குக் காய்ச்சல் (DF)

ஒரேடியாக ஏற்படும் காய்ச்சல்,கடுமையான தலைவலி,பின்புறக் கண்களில் வலி, மூட்டுக்களிலும் தசைகளிலும் வலி (இதனால் எலும்பு முறிவு, காய்ச்சல் எனவும் அழைக்கப்படும்), சில நோயாளிகளுக்கு சிவப்பு நிற கொப்புளங்கள் ஏற்படுவதுடன் சில வேளைகளில் முரசு, மூக்கு, தோல் மற்றும் சளி என்பவற்றிலிருந்து குருதிக்கசிவு ஏற்படலாம்.

டெங்கு குருதிப்பெருக்கு (DHF)

இந்நோய் நிலைமை சில நோயாளர்களுக்கு ஏற்படும். இது எற்படுமாயின் 3 கட்டங்களாக ஏற்படும்.

 • காய்ச்சலுடன் கூடிய கட்டம் (febrile phase)
 • 2-7 தினங்கள் வரை காணப்படும்.
 • தொடர்ச்சியான கடுமையான காய்ச்சல், முகம் சிவந்து போதல், உடம்பில் சிவப்பு நிற கொப்புளங்கள் தோன்றல், மூட்டுவலி, தசை வலி, தலைவலி, குமட்டல், வாந்தி
  மற்றும் வயிற்றோட்டம் என்பன ஏற்படலாம்.

நெருக்கடியான கட்டம் ((critical phage/leakage phage)

 • இது 1-2 தினங்களுக்கு காணப்படும்.
 • இக்கட்டம் சிறு குருதிக்கலன்களிலிருந்து குருதித்திரவவிழையம் கசிய ஆரம்பிக்கும் வேளையிலும் காய்ச்சல் தணிய ஆரம்பிக்கும் வேளையிலும் ஆரம்பமாகும்.
 • சிறு குருதிக்கலன்களிலிருந்து குருதித்திரவ விழையம் கசிந்து நெஞ்சறைக்குழி, வயிற்றுக்குழி என்பவற்றை அடைவதால் மூளை, சிறுநீரகம், ஈரல் போன்ற அத்தியாவசிய
  அங்கங்களுக்கு செல்லும் குருதியின் அளவு குறைந்து நோயாளி அதிர்ச்சி (shock) நிலைமைக்கு ஆளாகக்கூடும்.
 •  இந்நிலைமையை இனங்கண்டு சிகிச்சை அளிக்காவிடின் நோயாளி மரணிக்கவும் வாய்ப்புண்டு.

குணமடையும் கட்டம். (convelescent/ Recovery phage)

 • இது 2-5 தினங்கள் வரை காணப்படும்.
 • குணமடைவது போன்ற அறிகுறிகள், அதிகமான பசி, (சிலருக்கு) இதயத்துடிப்பு குறைவடையும், குணமடைவதற்கான கொப்புளங்கள் (சிவப்பு நிற பின்னணியில் வெள்ளை
  நிற கொப்புளங்கள் ) ,உடல் பூராகவும் அரிப்புணர்ச்சி காணப்படும் (உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில் அதிகமாக காணப்படும்), அதிகமாக சிறுநீர் கழித்தல் போன்ற அறி
  குறிகள் ஏற்படும்.

6) டெங்குக் காய்ச்சல் வந்த நோயாளிக்கு மீண்டும் அந்த நோய் வர வாய்ப்புள்ளதா?

ஆம் வாய்ப்புள்ளது. ஏனெனில் 4 வகையான டெங்கு வைரஸ்கள் உள்ளன. ஒரு வகை டெங்கு வைரஸால் ஏற்
படும் டெங்குக் காய்ச்சல் மறுமுறை வேறொரு வகை டெங்கு வைரஸால் ஏற்படலாம். எனவே ஒரு மனிதனுக்கு வாழ் நாளில் ஒரு முறைக்கு மேல் டெங்குக்காய்ச்சல் ஏற்படலாம்.

7) டெங்குக் காய்ச்சல் ஏற்பட்ட நோயாளர்களுக்கான அறிவுறுத்தல்கள் என்ன?

 • நோயாளிக்கு ஓய்வு வழங்கவும்
  • கஷ்டமான வேலைகளையோ அல்லது பாரமான பொருட்களை தூக்கவோ இடமளிக்க வேண்டாம்.
 • திரவ வகைகளை பருகக் கொடுக்கவும்.
  • பால், பழச்சாறு, தோடம்பழச்சாறு, ஜீவனி, தெம்பிலி சூப் போன்றவற்றை கொடுக்கலாம்.
  • சிவப்பு மற்றும் கபில நிற பானவகைகளை தவிர்க்கவும்.(சிவப்பு நிற குளிர்பானம், கோப்பி)
  • வழக்கமான திண்ம உணவுகளை வழங்கலாம்.
 • நோயாளி சிறுநீர் கழிக்கும் தடவைகளின் எண்ணிக்கை பற்றி கவனத்திற் கொள்ளவும்.
  • எண்ணிக்கை குறைவாக இருப்பின் உடனடியாகவைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லவும்.
 • காய்ச்சல் காணப்படின்
  • சாதாரண நீரினால் மேனியை நனைக்கவும்.
  • பரசிட்டமோல் (paracitamol ) உரிய அளவு 6 மணித்தியாலங்களுக்கு ஒரு முறை வழங்கவும்.
  • விசேடமாக கடுமையான காய்ச்சலுக்கு வழங்கப்படும் மருந்து வகைகள் (diclofenec / ibuprofen/ mefenemic acid/aspirin) வழங்க வேண்டாம்.
 • காய்ச்சல் 2 நாட்களுக்கு மேலாக காணப்படின் 3 ஆவது தினத்தில் குருதிப்பரிசோதனையொன்று மேற்கொள்ளவும்.

8 பின்வரும் அறிகுறிகள் காணப்படின் நோயாளியை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கவும்

  • திரவ வகைகளை பருக முடியாதிருத்தல்.(அடிக்கடி வாந்தியெடுத்தல்)
  • உணவு, பான வகைகளை நிராகரித்தல்.
  • கடுமையான தாகம்.
  • நோயாளி சிறுநீர் கழிக்கும் தடவைகள் குறைவடைதல். (6மணித்தியாலங்களுக்கு மேலாக சிறுநீர்வெளிவராமை.)
  • கடுமையான வயிற்று வலி
  • தூக்க நிலைமை
  • நடத்தையில் மாற்றம் ஏற்படல்.
  • சிவப்பு / கறுப்பு / கபில நிற வாந்தியெடுத்தல்.
  • கறுப்பு நிற மலம் வெளியாதல்
  • குருதி வெளியாதல் (முரசிலிருந்து குருதி வெளியாதல், சிறுநீர் சிவப்பு நிறத்தில் வெளியாதல்.)
  • தலைச்சுற்று
  • கை,கால்கள் குளிராதல்.

9) டெங்கு வைரஸை பரப்பும் நுளம்புகள் எங்கு வாழ்கின்றன?

ஈடிஸ், ஜிப்டிஸ் மற்றும் ஈடிஸ் அல்போபிக்டஸ் பல்வேறு விதமான கொள்கலன்களுக்குள் முட்டையிடுவதன் மூலம் தன் இனத்தை பரப்புகின்றன. பரவும் இடங்களாவன,

 • இலகுவில் உக்காத பொருட்கள் (வாகன டயர், பொலித்தீன் பைகள் )
 • உக்கும் பொருட்கள் (சிரட்டை,மூங்கில் கம்புகள்)
 • மழை நீர் தேங்கி நிற்கக்கூடிய இடங்கள், (தடைப்பட்டுள்ள கூரைப்பீலிகள், கொங்றீட் கூரை
  கள்.)
 • மறைக்கப்படாத நீரைச் சேகரித்து வைக்கும் பாத்திரங்கள், நீர்த்தொட்டிகள்
 • விசேடமான வீட்டு உபகரணங்கள், குளிர்சாதனம், குளிரூட்டி தட்டுக்கள்
 • மிருகங்கள் பருகுவதற்கு வைக்கப்பட்டுள்ள சிறிய பாத்திரங்கள்.

10) இவ்வகையான நுளம்புகளிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி?

 • மேற்கூறப்பட்ட நுளம்புகள் பரவக்கூடிய இடங்களை முற்றாக ஒழித்தல்.
 • இவ்வகையான நுளம்புகள் பகல் நேரங்களில் கடிக்கும்.சூரியன் உதித்து 2 மணி நேரத்தின் பின்பும் சூரியன் மறையக்கூடிய மாலை வேளைகளிலும் கடிக்கும். எனவே முழுக்கை, முழுக்கால் ஆடைகளை அணிந்து உடலை நன்றாக மூடுவதன் மூலம் நுளம்புக்கடியை
  தவிர்க்கலாம்.
 • நுளம்புவலை, நுளம்புக்கொயில், நுளம்பு விரட்டி மற்றும் மின்சாரத்தில் ஆவியாகக்கூடிய மேட்டுக்களை உபயோகிக்கலாம்.(குழந்தைகள், முதியவர்கள் இருந்தால் கவனமாக இருக்க வேண்டும்.)
 • வீட்டில் டெங்கு நோயாளி இருந்தால் அவரையோ அல்லது வீட்டிலுள்ளவர்களையோ நுளம்புக்கடியிலிருந்து பாதுகாக்க வேண்டும்.

11) நுளம்புகள் பரவக்கூடிய இடங்கள் தொடர்பாக எவ்வாறு முறைப்பாடுகள் செய்யலாம்?

முறைப்பாடுகள் செய்வதற்கு முன் இடத்தின் உரிமையாளருடன் கலந்துரையாடி ஓர் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். திருப்திகரமாக பதில் கிடைக்காவிடின் உங்கள் பிரதேசத்திலுள்ள பொதுச் சுகாதார பரிசோதகர் அல்லது சுகாதார வைத்திய உத்தியோகத்தர் உள்ளிட்ட பிரதேசத்திலுள்ள பிரதேச சபை / நகர சபை என்பவற்றுக்கு
அறிவித்தல் வேண்டும்.

வைத்தியர் A.Q.H.M. ஆஷிகியு