பிளவுபட்டமனநோய் (Schizophrenia) – வைத்தியர் பி.மனோகரன்

பிளவுபட்ட மனநோய் எனப்படுவது ஒரு சிக்கலான மன நோயாகும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தர்க்கரீதியாக சிந்திக்க முடியாதவர்களாக இருப்பதுடன் தமக்கு ஏற்படும் போலியான அனுபவங்களை உண்மையானவற்றிலிருந்து வேறுபிரித்தறியும் ஆற்றலை இழந்தவர்களாகவும் காணப்படுவார்கள். இதனால் அவர்கள் தமது அன்றாட நடவடிக்கைகளைக்கூட ஒழுங்காக மேற்கொள்ள முடியாதநிலைக்குத் தள்ளப்படுகின்றார்கள். ஆனால் அவர்களில் பெரும்பாலானோருக்கு சூழ்நிலைக்கேற்ப பொருத்தமாக நடந்துகொள்ளவும் அதற்கேற்ப தமது உணர்வுகளை வெளிக்காட்டக் கூடியதாகவும் இருக்கும்.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஏறத்தாழ ஒரு வீதமானவர்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இது பொதுவாக எல்லா வயதினரையும் பாதிக்கக்கூடியதாக இருந்தாலும் பெரும்பாலும் 15 – 35 வயதுக்குட்பட்டோரையே அதிகம் பாதிக்கின்றது. இலங்கையில் இந்நோய் ஏனைய மனோவியாதிகளுடன் ஒப்பிடும்போது இளவயதினரிடையே கணிசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதென்பதுடன் அவர்களின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

இந்நோயானது பரம்பரைக் காரணிகளுடன் தொடர்புபட்டதென்றாலும் வாழும் சூழல், அதிகளவு மனஅழுத்தம்நி நிறைந்த வாழ்க்கை மற்றும் மூளையில் ஏற்படும் நிரந்தரமான பாதிப்புகளும் இதற்கு தூண்டுகோலாக அமைகின்றது. தாய் அல்லது தந்தைக்கு இந்நோய் இருக்குமானால் அவர்களது பிள்ளைகளுக்கு இந்நோய் வருவதற்கான சந்தர்ப்பம் 10 மடங்கால் அதிகரிக்கின்றது.

நோயின் அறிகுறிகள்

இந்நோயின் அறிகுறிகள் ஒருவருக்கு ஒருவர் பெருமளவில்வேறுபட்டதாக காணப்படும். பொதுவாக அவற்றை நேர்அறிகுறிகள், எதிர் அறிகுறிகள் என இரண்டுவகையாகப் பிரிக்கலாம்.

நேர் அறிகுறிகள் (Positive Symptoms)

இவ்வறிகுறிகளை உடையவர்களின் அன்றாட நடவடிக்கைகள் பெருமளவில் திரிவடைவதுடன் அவர்கள்மெய்யான புற உலகில் இருந்து விடுபட்டு ஒரு மாய உலகில் சஞ்சரிப்பவர்களாக காணப்படுவார்கள். அவர்களுக்கு பின்வரும் புலன் பிறழ்வு நிலையும் (Hallucination) போலியான நம்பிக்கைகள், கற்பனைகளும் ((Delusions) காணப்படும்.

புலன் பிறழ்வு நிலையானது ஐம்புலன்களில் எதனையும் பாதிக்கக்கூடியது. இதில் செவிப்புல பிறழ்வு நிலையே (Auditory Hallucination) பொதுவாக காணப்படும் புலன் பிறழ்வு நிலையாகும். இதன் காரணமாக இந்நோயாளிகள், தாம் எண்ணுவதெல்லாம் தமது காதுகளில் பலமாக ஒலிப்பதாகவும் (Thought Echo) சில அந்நியக் குரல்கள் தங்களுடன் நேரடியாக உரையாடுவதாகவும் அல்லது தம்மைப் பற்றி தங்களுக்குள் விவாதிப்பதாகவும் மேலும் தமது ஒவ்வொரு நடவடிக்கைகளையும் சில குரல்கள் வர்ணிப்பதாகவும் முறையிடுவதுண்டு.

அத்தோடு சிலர் தமது உடல் அவயவங்களே தம்முடன் உரையாடுவதாகவும் கூறுவதுண்டு. இதன்காரணமாக இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அக்குரல்களால் ஏற்படுத்தப்படும் இடையூறுகள் காரணமாக அவற்றுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதுமுண்டு. இதை நாம் அவதானிக்கும்போது அவ்நோயாளி தன்னுடனேயே தான் பேசுவது போன்று தோன்றும்.

இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செவிப்புல பிறழ்வுடன் ஒப்பிடும்போது பார்வைப்புல பிறழ்வு (Visual Hallucinations) ஏற்படுவது சற்றுக் குறைவு. பார்வைப்புல பிறழ்வு காரணமாக இந்நோயாளிகளுக்கு சிலமாயத் தோற்றங்கள் ஏற்படுவதுண்டு. அதனை அவர்கள் பெரும்பாலும் முற்றுமுழுதாக உண்மையான தோற்றப்பாடுகளாகவே நம்புவதுண்டு. பார்வைப்புல பிறழ்வு ஏனைய புலப்பிறழ்வுகளுடன் சேர்ந்தே பொதுவாகக் காணப்படும்.

மேலும் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இருக்கும் சில போலியான நம்பிக்கைகள் இவர்களது செயற்பாடுகளை முடக்குவதாகவும் அமையக்கூடியது. எவ்வாறெனில் உதாரணத்திற்கு, இவர்கள் தமது உறவினர்கள் அல்லது நண்பர்கள் தமக்கு கெடுதல் செய்ய முற்படுவதாகவும் வேறு பலர் தம்மை பின்தொடர்ந்து தமது ஒவ்வொரு நடவடிக்கையையும் கண்காணிப்பதாகவும் சில ஆதாரமற்ற கற்பனைகளைக்கொண்டிருப்பார்கள் ((Delusion of Persecution).

மேலும் தமது எண்ணங்களையும் செயற்பாடுகளையும் வேறு ஒருவர் அல்லது ஒரு சக்தி கட்டுப்படுத்துவதாகவும்முறையிடுவார்கள் (Delusion of Control). தமது உடலினுள் சில பாகங்கள் இல்லாமல் போனதாகவோ அல்லது பாம்புகள் போன்ற சில ஜந்துக்கள் தமது உடலுக்குள் வாழ்வதாகவும் நம்புவதுண்டு. அத்தோடு சில நோயாளிகள் அவர்களது கலாசாரங்களுக்கும் அப்பாற்பட்ட சில அபத்தமான விடயங்கள் தமக்கு ஏற்படுவதாகவும் கூறுவார்கள் (BiZarre Delusion). உதாரணமாக தான் வேற்றுக்கிரகத்தில் இருந்து பூமிக்கு வந்ததாகவும் வேற்றுக்கிரகவாசிகள் தம்மோடு நேரடித் தொடர்பில் இருப்பதாகவும் கூறுவதுண்டு. மேலும் தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்படும் சில விடயங்கள், புத்தகங்கள் மற்றும் பத்திரிகைகளை வாசிக்கும்போது அதில் காணப்படும் குறிப்புகள் தமக்கென சிறப்பாக கூறப்படும் விடயங்களெனவும் நம்புவார்கள் ((Delusion of Reference).

இவற்றை விட வேறு பல நம்பிக்கைகளும் அவர்களிடம் காணப்படும். தமது எண்ணங்களை யாரோ தம்மிடமிருந்து எடுப்பதாகவும் (Thought Withdrawal), மற்றவர்களது எண்ணங்கள் தங்களுடைய மூளையினுள் புகுத்தப்படுவதாகவும் (Thought Insertion), தாம் மனதில் நினைப்பவற்றை மற்றவர்கள் தெரிந்து கொள்வதாகவும் (Thought Broadcasting) சில போலியான நம்பிக்கைகளை கொண்டிருப்பார்கள்.

எதிர் அறிகுறிகள் (Negative Symptoms)

இவ்வறிகுறிகளை உடையவர்களின் செயற்பாடுகளும் உணர்வு வெளிக்காட்டும் தன்மையும் பெருமளவு மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கும்.

இவர்கள் உணர்ச்சிகளற்ற முகத்தையும் ஏற்ற இறக்கமற்ற ஒரே மாதிரியான பேச்சையுமே வெளிப்படுத்துவார்கள்.
இவர்களுக்கு ஏனைய விடயங்களில் ஈடுபடுவதற்கான ஆசையற்றிருப்பதுடன் ஒரு செயலை தொடங்குவதற்கும்அதனை செய்வதற்குமான ஆற்றலை இழந்தவர்களாகவும் இருப்பார்கள். மேலும் இவர்கள்குடும்பத்தினர் மத்தியிலும் வெளியிடங்களிலும் மற்றவர்களிடம் அதிகம் பேசாது ஒதுங்கியே இருப்பார்கள்.

மேற்கூறிய அறிகுறிகளில் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு, ஒரு மாதகாலத்திற்கு அதிகமாக ஒருவருக்கு இருக்குமானால் அவருக்கு பிளவுபட்ட மனநோய் இருப்பதாக உறுதிப்படுத்தப்படும்.

சிகிச்சை முறைகள்

இந் நோய்க்கான காரணங்கள் இதுவரை சரியாக இனங்காணப்படாததால் இந்நோய் வராமல் தடுப்பதற்கோஅல்லது பூரணமாக குணமாக்குவதற்கோ எவ்வித மருந்துகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நோயின் அறிகுறிகளை கட்டுப்படுத்தி அதிலிருந்து விரைவாக நோயாளிகளை மீட்டெடுப்பதே இந்நோய்க்கென வழங்கப்படும் சிகிச்சைகளின்முக்கிய நோக்கமாகும்.

நோயாளிகளை வீட்டிலோ அல்லது வைத்தியசாலையிலோ வைத்து சிகிச்சை அளிக்கமுடியும். ஆனால் தீவிரமான புலன் பிறழ்வு நிலையிலுள்ளவர்களையும் தற்கொலை எண்ணங்கொண்டவர்களையும் தமது போலியான நம்பிக்கைகளால் மற்றவர்களுக்கு கெடுதல் விளைவிக்க முனைபவர்களையும் வைத்தியசாலையில் வைத்தே சிகிச்சை அளிக்க வேண்டும்.

இவர்களுக்கு வழங்கப்படும் மருந்துகள் (Antipsychotic Medication) முக்கியமாக புலன்பிறழ்வு நிலையையும் போலியான நம்பிக்கைகளையும் கட்டுப்படுத்துவதற்கே ஆகும். இதன்போது நோயாளிகளுக்கு இம்மருந்துகளை முறையாக தொடரவேண்டியதன் அவசியத்தையும் அதை குறிப்பிட்ட காலத்திற்கு முதல் நிறுத்தினால் இவ்வறிகுறிகள் மீண்டும் ஏற்படுவதுடன் முன்னரைவிட அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் தெளிவாக விளக்கவேண்டும்.

சிகிச்சை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் பெரும்பாலானோர் தமக்கு ஏற்பட்டிருக்கும் நோய் தொடர்பாக தெளிவடைவதோடு தமக்கு ஏற்பட்ட அனுபவங்கள் போலியானவை என்று உணர்ந்து கொள்வார்கள். ஆனால் சிலர் தமக்கு ஏற்படும் அனுபவங்கள் உண்மையென்று ஆழமான நம்பிக்கை கொண்டிருப்பதால் அவர்கள் இச்சிகிச்சை முறைகளால் நல்ல முன்னேற்றத்தை அடைவதில்லை என்பதோடு சிகிச்சையை தொடரவும் மறுப்புத்தெரிவிப்பார்கள். இவ்வாறானவர்களுக்கு சில கடுமையானதும் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூ டியதுமான மருந்துகளை பாவிக்கும் தேவையும் ஏற்படுவதுண்டு.

சிகிச்சை முறைகளை சிறப்பாக கடைப்பிடிப்பவர்களில் பொதுவாக 20 வீதமானவர்கள் பூரணமாக இந்நோயிலிருந்து குணமடைவதுண்டு. மற்றைய 20 வீதமானவர்கள் மீண்டும் மீண்டும் இந்நோயின் தாக்கத்திற்கு ஆளாகுகின்றார்கள். ஆனால் 40 வீதமானவர்கள் இந்நோயுடன் நீண்டகாலம் போராடவேண்டியிருப்பதுடன் எஞ்சியவர்கள் தற்கொலையும் செய்துகொள்கின்றார்கள்.

கணிதவியலாளரான பேராசிரியர் ஜோன் போர்ப்ஸ் நாஷ் ((John Forbes Nash) கூட இந்நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆனாலும் அவர் அதனுடன் போராடி வென்ற ஒரு மேதையாவார். ஏனெனில் இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமக்கு ஏற்படும் அசாதாரணமான அனுபவங்கள் நோயின் காரணமாகவே ஏற்படுகின்றதென ஆழ்ந்தறியும் உள்நோக்கு ((Insight)) பெருமளவில் காணப்படுவதில்லை. அவ் அனுபவங்கள் உண்மையானவைதான் என்பதில் உறுதியாக இருப்பார்கள். ஆனால் நாஷ் தனது நோயுடன் போராடி தனக்கு ஏற்படும் அனுபவங்கள் தனது நோயின் கூறுகள் என்பதைக் கண்டு அவற்றுடன் தொடர்ந்து வாழ்ந்து வெற்றிகண்டவர் என்பதுடன் பொருளாதார விஞ்ஞானத்திற்கான நோபல் பரிசினையும் வென்றவர்.

பிளவுபட்டமனநோயினால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளி பற்றிய மருத்துவக்குறிப்பு

கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் 2008 ஆம் ஆண்டு நான் மனநல சிகிச்சைப் பிரிவில்பணிபுரிந்து கொண்டிருந்த போது சந்தித்த ஒரு நோயாளி பற்றிய சில விடயங்களை இங்கு பகிர்வது இந்நோய் பற்றிய சற்று விளங்கிக்கொள்ள பொருத்தமாக இருக்குமென எண்ணுகின்றேன்.

நோயாளி முப்பது வயதுடைய திருமணமாகாத பெண்ணாவார். இவர் போதனா வைத்தியசாலையின் நோயாளி முப்பது வயதுடைய திருமணமாகாத பெண்ணாவார். இவர் போதனா வைத்தியசாலையின்அவசர விபத்து சிகிச்சைப் பிரிவிற்கு ஒருநாள் காலை தனியாக வந்து, இரு வேற்றுலகவாசிகள் தன்னை தாக்கியதால் தனது இடதுபுற நெஞ்சுப்பகுதியில் பாரிய காயமேற்பட்டு குருதி பெருகுவதாக தெரிவித்து தனக்கு சிகிச்சை அளிக்குமாறு வேண்டினார். அவரை பரிசோதித்துப்பார்த்த வைத்தியர் அவருக்கு அவ்வாறான காயம் ஏதும் இல்லை என்பதை கண்டுகொண்டதோடு அவரது ஏனைய நோய் அறிகுறிகளை இனங்கண்டு அவரை உடனடியாக மனநல சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றினார்.

அங்கு இந்நோயாளியை சந்தித்து சில மணிநேரம் உரையாடியதன் பின்னர் அவரிடமிருந்து பின்வரும்தகவல்களை பெறக்கூடியதாக இருந்ததுடன் அவர் எவ்வகையான மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதையும் அறியக்கூடியதாக இருந்தது.

அந்நோயாளி கூறுகையில், தான் உண்மையில் ஒரு வேற்று ஒரு கிரகத்தில் வாழ்பவர் எனவும் தான் கடவுள் மீது அதீத பக்தி கொண்டதன் காரணமாக தனக்கு பிரத்தியேகமான ஒரு சக்தி அளிக்கப்பட்டதாகவும் அச்சக்தியின் உதவியுடன் இப்பூமியிலுள்ள மனிதர்களின் யேகமான ஒரு சக்தி அளிக்கப்பட்டதாகவும் அச்சக்தியின் உதவியுடன் இப்பூமியிலுள்ள மனிதர்களின் மனங்களிலுள்ள அழுக்குகளை நீக்குவதற்காக இங்கு பிறப்பெடுத்திருப்பதாகவும் கூறினார். மேலும் தன்னோடு எப்போதும் இரண்டு வேற்றுலகவாசிகள் தொடர்பில் இருப்பதாகவும் தனது மனவாற்றலால் அவர்களோடு தான் உரையாடுவதாகவும் அவர்கள் தன்னைக் கட்டுப்படுத்த முனைவதாகவும் தெரிவித்தார்.

மேலும் தனது நெஞ்சுக்கூட்டினுள் ‘மின்சுற்று’ ஒன்று இருப்பதாகவும் அது ஒரு நாள் தானாக அடிவயிற்றுப்பகுதிக்கு இறங்கிவிட்டதாகவும் தனக்கு அதன் பின்னரே பசியின்மை மற்றும் மூச்சுத்திணறல் போன்ற உபாதைகள் இடையிடையே ஏற்படத்தொடங்கின எனவும் கூறினார். அம்மின்சுற்று இவ்வுலகத்தையே கட்டுப்பாட்டில் வைத்திருக்கக்கூடிய ஆற்றலுடையதென அவர் தீவிரமான நம்பிக்கை கொண்டிருந்தார். தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டிருந்த வேற்றுலகவாசிகள் ஏதோவொரு காரணத்திற்காக தன்மீது கோபம்கொண்டு இன்று தனது நெஞ்சுப்பகுதியை ஒரு இயந்திரத்தால் வெட்டி தனது இருதயத்தில் ஒரு துளையை ஏற்படுத்திவிட்டதாகவும் அதிலிருந்து குருதி பெருகியதாலேயே தான் வைத்தியசாலைக்கு வந்ததாகவும் கூறினார்.

இவ்வாறாக அந்நோயாளியுடனான உரையாடல் மூலம் அவரது போலியான நம்பிக்கைகள் கூறினார். மேலும் அவரது பெற்றோர்கள் கூறுகையில், இதேபோன்ற அறிகுறிகள் இரண்டு வருடங்களுக்கு முன்னரும் ஏற்பட்டதென்றும் ஆனால் அவர் அதற்கென கொடுக்கப்பட்ட மருந்துகளை சரியான முறையில் எடுக்கவில்லை என்றும் கூறினார்கள்.பின்னர் வைத்தியசாலையில் வைத்து அந்நோயாளிக்கு சில நாட்கள் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அவரது போலியான நம்பிக்கைகள் பெருமளவு குறைவடைந்து முன்னேற்றமடைந்தார்.

வைத்தியர் பி.மனோகரன்