மூத்தோரின் உரிமைச் சுடரை யார் ஏற்றுவது? – Dr. சி. சிவன்சுதன்

ஒரு மனிதன் சிசுவாக கருத்தரித்த நாளிலிருந்து மரணிக்கும் வரை பல விடயங்களை புதிது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கிறான். அன்னையினுடைய கருப்பையிலே சிசுவாக இருக்கும் அந்த சிறிய மனிதன் கிரகித்துக் கொண்டிருக்கும் விடயங்கள் ஏராளம். அதே போல மரணப்படுக்கையிலும் முன்பு தெரிந்திராத பல விடயங்களையும் அனுபவங்களையும் அவன் கற்றுக் கொள்கிறான்.

ஒரு மனிதன் தன் வாழ்க்கை காலத்திலே பெற்றுக் கொண்ட அனுபவத்தையும் அறிவையும் இன்னொரு மனிதன்அப்படியே உள்வாங்கி அறிந்து வாழ்க்கையை அதிலிருந்து தொடர முடியுமாக இருந்தால் மனித சமுதாயம் எவ்வளவோ முதிர்ச்சி பெற்று முன்னேறியிருக்கும்.

ஆனால் எமது முன்னோர்கள் தமது வாழ்க்கையிலே பெற்ற அனுபவத்தை உள்வாங்கிக் கொள்ளும் வல்லமையை நாம் வளர்த்துக் கொள்ளவில்லை, வளர்த்துக் கொள்ள நாம் விருப்பப்படவுமில்லை. நாம் புதிதாக அனுபவப்பட்டு, பட்டுத் தெளியவே ஆசைப்படுகிறோம்.

மனிதன் இந்த பூவுலகிலே தோற்றம் பெற்று 50 ஆயிரம் வருடங்கள் நிறைவடைந்திருக்கின்றன. அதாவது 2 ஆயிரம் தலைமுறையினர் வாழ்ந்து முடித்திருக்கிறார்கள். இந்த 2 ஆயிரம் தலைமுறையினரும் வாழ்க்கையில் பெற்ற அறிவும் அனுபவமும் நம்மிடம் இருக்கிறதா? அவற்றிற்கு என்ன நடந்தது. இதனால் தான் கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு என்று சொல்வார்கள்.

எமது முன்னோர்களினது வாழ்க்கை அனுபவங்களையும் அறிவையும் அப்படியே நாம் பெற்றிருந்தால் நாமகற்றுக் கொண்டது உண்மையிலேயே உலகளவாக கூட இருந்திருக்கலாம். எம்மை சுற்றி வாழ்ந்து கொண்டிருக்கும்முதியவர்கள் ஒவ்வொருவரும் அனுபவ பொக்கிஷங்கள். அவர்களிடம் குவிந்திருக்கும் அனுபவ அறிவு அளவு கடந்தது. அது எமக்குத் தெரியாது. அதை நாம் முற்றாக பயன்படுத்திக் கொள்வதில்லை.

இன்றைய கால கட்டத்திலே இந்த அனுபவம் மிக்க முதியவர்களுக்குரிய இடமும் கௌரவமும் வழங்கப்படுகிறதா? ஏட்டிலும் எழுத்திலும் இலக்கியங்களிலும் இந்த பெரியவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கௌரவம் நடைமுறை வாழ்க்கையில் வழங்கப்படுகிறதா? அவர்கள் ஆரோக்கியமாக வாழக்கூடிய சூழ்நிலை இருக்கிறதா?

ஆரோக்கியம் என்றால் என்ன?

உலக சுகாதார விற்பன்னர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை என்பது ஒருவர் உடல் ,உள, சமூக, ஆன்மீக நன்னிலையுடன் வாழும் வாழ்க்கை என்று வரைவிலக்கணப்படுத்தியிருக்கிறார்கள்.

எமது முதியவர்கள் உடல் ரீதியாகவும் மனநிலை ரீதியாகவும் ஆரோக்கியமாக வாழ்கிறார்களா? சமூகத்திலே அவர்களுக்கு உரியநிலை வழங்கப்படுகிறதா? அவர்களின் ஆன்மீக சிந்தனைகள் திருப்திகரமாக இருக்கின்றதா? அவர்களின் சிந்தனைகள் மதிக்கப்படுகின்றனவா? சிறு குழந்தைகள் போலவே வயதானவர்களும் இலகுவில் நோய்வாய்ப்படும் தன்மை உடையவர்கள். சிறுவர்களுக்கு வழங்கப்படும் அதே கவனிப்பு முறைகள்முதியவர்களுக்கும் வழங்கப்படுகிறதா? அவர்களுக்கு பாலையும் முட்டையும் கொடுக்க நாம் ஏன் பயப்படுகின்றோம்.

சிறுவர்களின் உணவுமுறையில் காட்டப்படும் அக்கறை முதியவர்களின் உணவுமுறையில் கடைப்பிடிக்கப்படுகிறதா? அல்லது அவர்கள் மிஞ்சிய உணவைத்தான் உண்ணுகிறார்களா? முதியவர்களுக்கு நேரத்திற்கு மருந்தெடுத்து கொடுப்பதற்கு போதுமான ஆளுதவி இருக்கிறதா? அல்லது அவர்கள் தாமாகவே எடுக்கும் மருந்துகள் சரியான முறையில் எடுக்கப்படுகிறதா என்பதை சரிபார்ப்பதில் ஆர்வம் காட்டுகிறோமா? தேவை ஏற்படும் பொழுது அவர்களை மருத்துவ நிலையத்திற்கு அழைத்துச் செல்ல, ஆதரவளிக்க போதுமான ஆளுதவி இருக்கிறதா? போக்குவரத்தின் பொழுது முதியவர்களுக்கு நாம் என்ன உதவிகளை செய்கிறோம். அவர்களுடன் ஆற அமர இருந்து பேசி அவர்களின் மன உணர்வுகளை பகிர்ந்து கொள்ள எவ்வளவு நேரத்தை ஒதுக்கிக் கொள்கிறோம்? இந்த மனப் பகிர்வுகள் அவர்களின் உள ஆரோக்கியத்திற்கு இன்றி அமையாதது என்பதை புரிந்து வைத்திருக்கிறோமா? அவர்களின் சொந்த விருப்பு வெறுப்புகள் மதிக்கப்படாமல் நாம் இட்ட சட்டவரையறைக்குள் அவர்கள் வாழ்ந்து முடிக்க வேண்டும் என்று எண்ணிக் கொள்கிறோமா?

இவ்வாறாக தொடர்ச்சியான பல வினாக்கள் எம் மனதிலே எழுந்த வண்ணமே இருக்கின்றன. பல விடயங்களை கவனித்து பலரை வழி நடத்தி இந்த பரந்த பூமியிலே வாழ்ந்தவர்களின் உலகம் சொந்த வீடும் அதன் சுற்று வட்டாரமும் என சுருங்கிவிட அவர்களின் மன உணர்வுகளை புரிந்துகொள்ளாது வீட்டு விடயங்களில் கூட தலையிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்வது எவ்வளவு தூரம் நியாயமானதாகும் அப்படியென்றால் அவர்கள் எதைப்பற்றி பேசிக் கொள்வது. சிறுவர்கள் போலவே முதியவர்களும் பிடிவாதத்தன்மை உடையவர்கள். இது கடவுளின் இயற்கை எனவே இந்த யதார்த்தத்தை விளங்கிக் கொண்டு சிறுவர்களை புரிந்து கொள்வது போல எமக்கு பெரியவர் களையும் புரிந்து கொள்ள முடியாமல் போனதன் காரணம் என்ன?

சிறுவர் பாதுகாப்பு , மாணவர் உரிமை, பெண்கள் உரிமை என பல தரப்பினரையும் பாதுகாப்பதற்கு பல அமைப்புக்கள் உதயமாகி இருக்கும் இன்றைய கால கட்டத்திலே முதியவர்களின் உரிமைக்கும் பாதுகாப்பிற்குமென பலமான அமைப்புக்கள் எதுவும் உதயமாகாமல் போனதன் காரணம் என்ன?

இவர்களை பிரயோசனங்கள் அனைத்தையும் பிழிந்து எடுத்த பின் வீசி எறியும் சக்கைகளாக கருதுகிறோமா?இவற்றுக்கெல்லாம் எப்போது விடை காணப்போகிறோம்.

இவை அனைத்தையும் ஒட்டுமொத்தமாக சிந்திக்கும் பொழுது எங்கோ தவறு நடந்து கொண்டிருக்கிறது போல தோற்றப்படுகிறது. இவற்றுக்கு யார் பொறுப்பு? இவற்றை நிவர்த்திக்க எங்கிருந்து ஆரம்பிப்பது எங்கே முடிப்பது. இன்றைய நிலையிலே முதியவர்கள் அனைவரும் சுற்றவாளிகளாக இருக்க மற்றைய அனைவரையும்கு ற்றவாளிக்கூண்டில் ஏற்றுவதா? என்று சிந்திக்க வேண்டும்.

தொடரும்..

Dr. சி. சிவன்சுதன்
பொது வைத்திய நிபுணர்
யாழ்.போதனா வைத்தியசாலை.