எக்ஸிமா ( Eczema ) தோல் பராமரிப்பு. Dr. அன்ரூ அருணன்

எக்ஸிமா என்பது தோலில் ஏற்படும் ஒரு வகையான ஒவ்வாமை நோயாகும். இது கிருமித் தொற்றால் ஏற்படும் நோய் அல்ல. இந்நோயானது சில நபர்களுக்கு மட்டுமே ஏற்படும். இது ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவுகளை உண்ணுவதாலும் இறப்பர் பாதணிகளை அணிதல் போன்றவற்றாலும் ஏற்படலாம்.

இந்நோயானது நபருக்கு நபர் வேறுபடும். சிலருக்கு இது வெறுமனே தோல் கடியை மட்டும் ஏற்படுத்தும். சிலருக்கு இது தோல்கடியுடன் சேர்த்து அந்தப் பகுதியில் நீர் போன்ற திரவம் வடிதலையும் ஏற்படுத்தும். இத்தோல் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியர்கள் வழங்கும் மருந்தினை பாதிப்புளான பகுதியில் பிரயோகிக்கப்படுவதுடன் வீடுகளில் சில முறையான நடைமுறைகளை கையாளுவதன் மூலம் இந்நோயின் தாக்கத்தில் இருந்து விடுபடமுடியும்.

இதற்கு முதன்முதலாக எக்ஸிமாவை ஏற்படுத்தும் மூல காரணியைக் கண்டறிந்து அதனைத் தவிர்த்து வருதல் அவசியமாகும். உதாரணமாக நீங்கள் பாவிக்கும் சலவைத்தூள், சவர்க்காரம், செருப்பு என்பவற்றை மாற்றிப்பாருங்கள்.

மற்றும் தோல் உலர்வாக இருப்பதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் இதற்கு நீங்கள் இளஞ்சூடு நீரில் குளியல் செய்யலாம். குளிக்கும் போது குறைந்தளவு சவர்க்காரத்தை சருமத்திற்கு இடுதல்.

குளித்த பின் சருமத்தினை நன்கு உலர்வாக்கும் வரை துடைத்து பின்னர் ஈரலிப்பாக வைத்திருக்கும் Skin Lotion இனை உங்கள் சருமம் முழுவதும் பிரயோகியுங்கள் சருமத்தில் எரிச்சல் ஊட்டும் பதார்த்தத்தை பாவிக்கவேண்டாம்.

உடலுக்கு இறுக்கமான சொர சொரப்பான உடைகளைத் தவிருங்கள் மற்றும் எக்ஸிமா உள்ள தோல் பகுதியில் நகங்களால் சொறிவதைத் தவிருங்கள். மற்றும் ஏற்படும் தோல் பாதிப்பினைத் தடுப்பதற்கு உங்களது விரல் நகங்களை நன்கு வெட்டுங்கள்.

இரவிலே உறங்கும் போது கைகளுக்கு கையுறையினை அணிந்து கொண்டு உறங்குங்கள். வியர்வையானது எக்ஸிமா உள்ள தோல் பகுதியில் கடி ஏற்படுவதை அதிகப்படுத்தும். எனவே நீங்கள் எக்ஸிமாவால் பாதிக்கப்பட்டுள்ள காலங்களில் அதிகளவு உடற்பயிற்சியில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

உடல் உள உழைச்சலுக்கு உள்ளாவதைத் தவிர்த்தல், ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவுகளைத் தவிர்த்து சரியான உணவுகளை உட்கொள்ளுதல், போதுமான அளவு உறக்கும் போன்றவற்றை எக்ஸிமா நோய் மீண்டும், மீண்டும் ஏற்படுவதைத் தவிர்க்கின்றன.

இவ்வாறு செய்வதன் மூலம் எக்ஸிமாவின் தாக்கத்தில் இருந்து எமது தோலினைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். இந்தத் தோல் நோயானது கட்டுப்பாட்டிற்குள் வருவதற்கு காலம் தேவைப்படும்.

எனவே உடனடியாக மாற்றத்தினை எதிர்பார்க்க வேண்டாம். மேற்படி விடயங்களைத் தொடர்ந்து கையாளுவதன் மூலம் நாளடைவில் மாற்றம் ஏற்படுவதனை நீங்கள் அவதானிக்க முடியும்.

உங்களுக்கு இந்த நோய் மாறாமல் இருக்குமேயானால் தோல் வைத்தியரின் உதவியை நாடி அதற்குரிய மருந்தினைப் பெற்று இந்த நோயினை குணப்படுத்திக் கொள்ளலாம்.

Dr. அன்ரூ அருணன்