கர்ப்பம் தரிப்பது தாமதமாகி வருகின்றது..???

எனது வயது 30 ஆகும். நான் திருமணம் செய்து 2 வருடங்களாகின்ற போதிலும் கர்ப்பம் தரிப்பது தாமதமாகி வருகின்றது. அண்மையில் மேற்கொண்ட தைரொயிட்ஹோர்மோன் பரிசோதனையின் படி எனது தைரொயிட் ஹோர்மோன் சுரப்பானது குறைவாகவுள்ளதாக குடும்ப வைத்தியர் கூறியிருந்தார். இது பற்றி விளக்கிக் கூறவும்.

கர்ப்பம் தரித்தல் தாமதமாவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். பெண்ணெருவரின் தைரொயிட் ஹோர்மோன் சுரப்பானது குறைவாக இருக்கும் போது கர்ப்பம் தரிப்பதில் பிரச்சினைகள் ஏற்பட நேரிடுகின்றது. தைரொயிட்சுரப்பானது குறைவாக இருக்கும் போது உடற்பருமன் அதிகரித்தல், சோம்பல், நித்திரைத்தூக்கம், மலச்சிக்கல், குளிரைத் தாங்கமுடியாமை மற்றும் மாதவிடாயின் போது அதிகளவு குருதி வெளியேறுதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

இவ்வாறான குணங்குறிகள் இருப்பவர் மற்றும் கர்ப்பம் தரிப்பதில் பிரச்சினைகளுடையவர்கள் தங்களது தைரொயிட் ஹோர்மோன் சுரப்பை பரிசோதிப்பது மிகவும் அவசியமாகும். இரத்தப் பரிசோதனையின் மூலம் இலகுவாக இதனை அறிந்து கொள்ளமுடியும்.

இப்பரிசோதனையை மேற்கொள்வதற்கு உணவு அருந்தாமல் இருக்க வேண்டியது அவசியமற்றதாகும்.

தைரொயிட் சுரப்பானது குறைவாக இருப்பவர்கள் தைரொக்ஸின் மருந்தை உள்ளெடுப்பது மிகவும் அவசியமாகும். உங்களை போன்ற கர்ப்பம் தரிப்பதில் பிரச்சினைகள் உள்ள பெண்கள் தைரொக்ஸின் குளிசையை மருத்துவர் கூறிய அளவில் உள்ளெடுக்கும்போது கர்ப்பம் தரிக்கின்ற வாய்ப்பு அதிகரிக்கின்றது. கர்ப்பம் தரிக்க விரும்புகின்ற பெண்ணொருவரில் TSH எனப்படுகின்ற தைரொயிட் ஹோர்மோனின் அளவை சாதாரணமான ஒருவரை விடக் குறைந்த நிலையில் பேணுவது மிக அவசியமாகும். தைரொக்ஸின் குளிசையை ( மருத்துவர் பரிந்துரை செய்த அளவில்) காலை வேளையில் வெறும் வயிற்றில் உள்ளெடுத்தல் வேண்டும் அதன் பின்னர் 30 நிமிடங்களுக்கு தேநீர் போன்ற ஆகாரங்களையோ, உணவையோ உள்ளெடுக்கலாகாது இருத்தல் அவசியம்.

நீங்கள் கர்ப்பவதியாகுவதை உறுதிப்படுத்திய பின்னர் ( சிறுநீரில் HCG பரிசோதனை மூலம்) உடனடியாகவே தைரொக்ஸின் குளிசையின் அளவை அதிகரித்துக் கொளவது மிக அவசியம் ( உதாரணம் 25Mg அளவால் அதிகரிக்க வேண்டும். 50Mg தைரொக்ஸின் மாத்திரை எடுப்பவர் அதனை 75Mg ஆக அதிகரிக்க வேண்டும்) நீங்கள் முடிந்தளவு விரைவாக மருத்துவரை சந்திப்பது அவசியமாகும்.

கர்ப்பத்திலுள்ள சிசுவின் உடல் மற்றும் மூளைவளர்ச்சியில் முதல் மூன்று மாதங்கள் மிக முக்கியமான கால கட்டமாகும். இச்சிசுவின் வளர்ச்சியானது தாயின் தைரொக்ஸின் அளவிலேயே தங்கியிருக்கின்றது. எனவே குறிப்பிட்ட அளவில் கர்ப்பவதியொருவர் தைரொக்ஸினை உள்ளெடுக்காது விடத்து குழந்தையின் உடல் மற்றும் மூளை வளர்ச்சியானது பாதிப்படைய நேரிடலாம்.

கர்ப்பகாலத்தில் குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை தைரொயிட் ஹேர்மோனின் அளவைப் பரிசோதித்து தைரொக்ஸின் குளிசையின் அளவைத் தேவையேற்படின் மாற்றுவது அவசியமாகும்.

கர்ப்பம் தரிக்க விரும்புகின்ற மற்றும் கர்ப்பிணியான பெண்கள் அவர்களுக்கு தைரொயிட் சுரப்புக் குறைபாடு இருக்குமிடத்து மேற்குறிப்பிட்ட விதத்தில் தங்கள்நோயின் மீது சிரத்தையாக இருத்தல் மிகவும் அவசியமாகும். இதன் மூலம் தங்களுக்கும் குறிப்பாக பிறக்கப் போகும் பிள்ளைக்கும் பாதிப்புக்கள் ஏற்படுவதைத் தவிர்த்துக்கொள்ள முடியும் – மருத்துவர்.M.அரவிந்தன். நீரிழிவு அகஞ்சுரக்கும் தொகுதியியல், சிறப்பு வைத்திய நிபுணர்.