மூத்தோரின் உரிமைச் சுடரை யார் ஏற்றுவது? (நிறைவு பகுதி) – Dr. சி. சிவன்சுதன்

இன்று முதியவர்களாக இருப்பவர்கள் அன்றொரு நாள் மாணவர்களாகவும், பெற்றோர்களாகவும், பெரியவர்களாகவும் இருந்தவர்கள்தான். அவர்கள் தான் இன்றைய இளைய சமுதாயத்தை செதுக்கி எடுத்திருக்கிறார்கள். அவர்களைப் பார்த்துத்தான் இன்றைய இளைய சமுதாயம் வளர்ந்து வந்திருக்கிறது.

தெரிந்தோ,தெரியாமலோ,அறியாமையினாலோ அல்லது அனுபவமின்மையினாலோ தவறுகள் நடக்கலாம். ஆனால் எமது இளம் சமுதாயத்தினர் முதியவர்களை வேண்டுமென்றே துன்புறுத்துமளவிற்கு மோசமானவர்கள் அல்ல.

எமது மக்கள் தமது தாய்,தந்தையர், பேரன், பேர்த்தி மற்றும் ஏனைய முதியவர்களிடத்தில் உண்மையான அளவு கடந்த அன்பும் பாசமும் வைத்திருக்கிறார்கள். ஆனால் அவர்களிற்கு அதனை வெளிக்காட்ட தெரிவதில்லை.

‘கண் தெரியாமல் ஏன் ரோட்டிலே வெளிக்கிட்டனி நல்லாய் வாகனத்திலே அடிபட்டு சா’ என்று முதியவர்களிற்கு பேச்சு விழும். பேசுபவரின் உண்மையான மனநிலை சில சமயம் எமக்கு புரியாமல் போகும். ‘அப்பா பாவம் உனக்கு கண்ணும் தெரியாது உனக்கு வாகனம் ஏதும் அடிச்சுப்போட்டால் என்னால தாங்க முடியாது. ஏதும் தேவையென்றால் கேள் நான் செய்து விடுகிறேன்’ என்று நயமாக சொல்ல எமக்கு தெரியாது. அதனை நாம் வெளிப்படுத்தும் விதம் வித்தியாசமானது.

ஒவ்வொரு முதியவரும் மரணப்படுக்கையிலே இருக்கும் பொழுது சுற்றி நின்று கதறும் சுற்றத்தை பார்த்து ஜீரணித்துக் கொள்வது மிகவும் வேதனையானது. அவர்களின் இந்த கதறல் போலியானவை அல்ல. இவ்வளவு நாளும் இந்த பாசத்தையும் அக்கறையையும் எங்கே பூட்டி வைத்திருந்தார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கும்.

மேலைத்தேய நாடுகளிலே இதனை நாம் காண முடியாது. மேலைத்தேய நாடுகளிலே முதியவர்களுக்கு பல வசதிகளும் சட்ட ரீதியான பாதுகாப்புக்களும் அதிகளவில் இருக்கின்ற பொழுதும் இவ்வாறான உண்மையான அன்பும் இறுக்கமான பாசப்பிணைப்பும் அவர்களுக்கு இருக்கிறதா என்றொரு கேள்வி எழுகிறது. முதியவர்களின் கவனிப்பிலே ஒரு தனி மனிதனின் பங்களிப்பு எமது சமுதாயத்திலே மிகவும் அதிகமாக காணப்படுகிறது.

எமது மக்கள் ஒவ்வொருவரும் பல முதியவர்களை ஏதோ ஒரு வகையில் பொறுப்பெடுத்து கவனித்து வருகிறார்கள். இத்தகைய பொறுப்பு மேலைத்தேய மக்களிடையே இல்லை. அங்கே அரசாங்கமே முக்கியமாக அவர்களை பொறுப்பெடுத்து பார்த்துக் கொள்கிறது.

இங்கே ஒவ்வொரு மனிதனும் தனது சொந்த வேலைப்பழுக்களுக்கும் கடமைகளுக்கும் மத்தியில் பல பெரியவர்களை தம்மால் இயன்ற அளவு பராமரித்துத்தான் வந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒரு புரிந்துணர்வற்ற நிலை காரணமாக பல சந்தர்ப்பங்களிலே ஒரு மனக்கசப்பு நிலை தோன்றி வருகிறது.

உலகம் தொடர்ச்சியாக மாறிக் கொண்டே இருக்கிறது. நேற்று சரியாக இருந்த பல விடயங்கள் இன்று பிழையாகிப் போகலாம். இன்று நாம் புனிதமென்று போற்றிக் கொண்டிருக்கும் பல விடயங்களை நாளைய சமுதாயம் ஏற்றுக் கொள்ளாமல் போகலாம். இதனை சமுதாய இடைவெளி (Generation Gap) என்று சொல்வார்கள். நாம் சிந்திப்பது போலவே எமது அடுத்த சந்ததியும் சிந்திக்க வேண்டும் என்று நினைத்துக்கொள்வது எவ்வளவு தூரம் சாத்தியமானது என்பது சிந்திக்கப்பட வேண்டிய விடயமாகும்.

இந்த சமுதாய இடைவெளி சிந்தனை மாற்றத்தை முதியவர்களினால் சில சமயம் சகித்துக்கொள்வது கடினமானதாக இருக்கும். எனவே சமுதாய இடைவெளி சிந்தனை மாற்றங்களை ஏற்றுக் கொள்வதற்கு நாம் எமது மனதை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். எமது கலாசார பாரம்பரியங்களை விட்டுக் கொடுக்காது சில மாற்றங்களை ஏற்றுக் கொள்வதை தவறென கருத முடியாது.

அதுபோலவே இளைய தலைமுறையினரும் முதியவர்களின் சில அன்றாட நடவடிக்கைகளை மாற்றி அமைப்பதற்கு கடும் முயற்சி எடுப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. முதியவர்களின் வாழ்க்கை நடைமுறைகளை மாற்றி அமைக்க முயற்சி எடுப்பது பலவிதமான மனக்கசப்புக்களை ஏற்படுத்தும். அவர்களின் மனப்பதிவுகளையும் நடைமுறைகளையும் ஒரு புதிய ஒழுங்கிலே மாற்றி அமைப்பது நடைமுறை சாத்தியமற்றது.

முதியவர்களுடைய மூளையின் தொழிற்பாட்டு கட்டமைப்பு இவ்வகையான நடைமுறை மாற்றத்துக்கு இலகுவில்
இடம் தராது. எனவே நல்ல நோக்கத்திற்காகவேனும் அவர்களின் அன்றாட நடவடிக்கைகளையும் சிந்தனைகளையும் மாற்றி அமைக்க முயல்வது அநாவசியமான மனக்கசப்புகளுக்கு வழிவகுக்கும்.

எனவே சமுதாயத்திலே ஒப்பீட்டளவில் முதியவர்களின் எண்ணிக்கை மிகப்பெரியளவிலே அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. இதற்கு காரணங்கள் பல. ஒன்று எம் மக்கள் பெற்றெடுக்கும் குழந்தைகளின் வீதம் குறைந்து வருகிறது. பல இளம் சமுதாயத்தினர் பிற நாடுகளுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. யுத்தத்திலே எமது இளம் தலைமுறையினர் பலர் கொல்லப்பட்டு விட்டார்கள். எனவே தற்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் இளம் சமுதாயத்தினர் ஒவ்வொருவரும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பல முதியவர்களை பராமரிக்க வேண்டிய பெரும் பொறுப்பிலே இருந்து கொண்டிருக்கிறார்கள். எனவே அவர்களை தொடர்ச்சியாக குற்றம் சொல்லிக் கொண்டிருக்க முடியாது.

நாம் எவ்வாறு முதியவர்களை கவனித்துக் கொள்கிறோம் என்பதை எமது அடுத்த தலைமுறை பார்த்துக் கொண்டிருக்கிறது. இதனைப் பார்த்துத்தான் எமது அடுத்த தலைமுறை முதியவர் கவனிப்பு சம்பந்தமாக கற்றுக் கொள்ளப் போகிறது.

எனவே நாம் எமது முதியவர்களுக்கு வழங்கும் அதே கவனிப்பையே எமக்கும் எமது அடுத்த தலைமுறையினர் வழங்குவார்கள் என்பது உறுதி. வாழும் காலத்திலே எமது கல்வியிலே அக்கறைசெலுத்துகிறோம். எமது பிள்ளைகளின் கல்வியிலும் முன்னேற்றத்திலும் அக்கறை செலுத்துகிறோம். எமது சமுதாயத்தின் நல்வாழ்வில் அக்கறை செலுத்துகிறோம். சுற்றாடல் பாதுகாப்பில் அக்கறை செலுத்துகிறோம். ஆனால் எமது முதுமைக்காலத்தை திட்டமிடுவதில் அக்கறை அற்றவர்களாக இருந்து விடுகிறோம்.

எனவே எமது முதுமை காலத்தை திட்டமிடுவதுடன் முதியவர்கள் ஒவ்வொருவரினது கவனிப்பிலும் எம்மால்இயன்றவரை பங்களிப்பை செலுத்த வேண்டும். முதியோரின் கவனிப்பையும் சுகாதாரத்தையும் மேம்படுத்த அனைத்து தரப்பினரதும் ஒன்றுபட்ட முயற்சி தேவையாக இருக்கிறது.

(முற்றும்)

 

Dr. சி. சிவன்சுதன்
பொது வைத்திய நிபுணர்
யாழ்.போதனா வைத்தியசாலை.

முன்னைய பகுதியை பார்வையிட