முட்டை புற்று நோய் – Ovarian Cancer. கே. குருபரன் பெண்நோயியல் மகப்பேற்று நிபுணர்

65 வயதுப் பெண் ஒருவர் ஒருவருடகாலமாக வயிறு வீக்கம் பசியின்மை மற்றும் வயிற்றுப் புண் என பல மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று வந்தார். சடுதியாக ஏற்பட்ட சுவாசப் பிரச்சினையால் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போது வயிற்றில் கட்டி இருப்பது தெரியவந்தது. மேலதிக சோதனைகளில் சூலகப் புற்று நோய் இருப்ப தாகக் கூறப்பட்டது.

உலகில் பெண்களில் ஏற்படும் புற்று நோய்களில் ஏழாவது இடத்தை சூலகப்புற்றுநோய்வகிக்கிறது. சூலகப் புற்றுநோய் பெரும் பாலும் அறிகுறிகள் இன்றி மிகவும் மெதுவாகப் பரவுவதால் ஆரம்ப நிலைகளில் கண்டு பிடிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவாகும். இதனாலேதான் சூலகப் புற்று நோய்க்கு அமைதியான கொலைகாரப் புற்று நோய் (Silent Kille) எனப்பெயரும் இருக்கிறது.

எந்தப் புற்று நோயும் ஆரம் பத்தில் கண்டு பிடிக்கப்படும் போது புற்றுநோயின் தாக்கம் மிகவும் குறைவு புற்று நோய் வளர்ச்சி அடைந்த பின்பு கண்டு பிடிக்கப்படும் போது அறுவைச்சிகிச்சையைவிட(Surgery) கதிரியக்கசிகிச்சை (Radiotherapy)போன்ற மேலதிக சிகிச்சைகள் அவசிய மாகின்றன. இதனால் நோயாளிக்கு பல்வேறு அசௌகரியங்களும் பக்க விளைவுகளும் ஏற்பட வாய்ப்புண்டு.

பெண்களில் இரண்டு சூலகங்கள் கர்ப்பப் பைக்கு அருகில் உள்ளன. இனப்பெருக்க வயதுக்காலத்தில் மாதாமாதம் கருமுட்டை ஒன்றை உருவாக்குவதும் (Ovulation) பெண்களுக்குரிய ஹோர்மோன்களைச் சுரப்பதும் சூலகத்தின் முக்கிய தொழில் ஆகும். பெண்களுக்குரிய இயல்புகளை உருவாக்குவது சூலகமாகும்.

ஏன் சூலகப் புற்றுநோய் (முட்டைப்பை புற்றுநோய்) ஏற்படுகிறது?

சூலகப் புற்றுநோய் பெரும்பாலும் ஏற்படுவதற்கான காரணம் தெரியாது. ஆனால் பின்வரும் சந்தர்ப்பங்களில் கூடியளவில் உருவாகலாம்.

1. வயது அதிகரிக்கும் போது ஐம்பது வயதின் பின்னர் புற்றுநோய் ஏற்படுவதற் கான சந்தர்ப்பங்கள் கூடும்.
2. கர்ப்பம் தரிக்காதவர்கள் அல்லது குறைந்தளவு பிள்ளைகள் உள்ளவர்கள்.
3. உடல் பருமன் கூடியவர்கள்(Obesity)
4.மாதவிடாய் நின்ற பின் ஹோர்மோன் குளிசைகள் பாவித்தவர்கள் (HRT usage)

சில பரம்பரை அலகுகள் (Genes) இந்தப் புற்றுநோயுடன் தொடர்புபட்டுள்ளன. அந்தக் குடும்பத்திலுள்ள நெருங்கிய குருதி உறவினர்களுக்கு மார்புப் புற்றுநோய் / சூலகப் புற்றுநோய் இருப்பின் மற்றைய குடும்ப உறுப்பினர்களில் புற்றுநோய் வரும் சந்தர்ப்பங்கள் அதிகம் விழிப்புடன் இருப்பதால் ஆபத்தைத் தவிர்க்க முடியும்,

சூலகப் புற்றுநோய்-ஆரம்ப அறிகுறிகள்

பசியின்மை வயிற்றுப்பிரட்டு வயிறு வீங்குதல் வயிற்றில் கட்டி இருப்பதுபோன்ற உணர்வு உடல் மெலிதல் வயிற்றில் அசெளகரியமாக உணர்தல் இதுசில அறிகுறிகள் மட்டுமே பலரில் எந்தவித அறிகுறியும் இருக்காது.

ஆரம்பநிலையில் பெரும்பாலும் அறிகுறிகள் ஏற்படுவதில்லை. மிகவும் பரவிய நிலை எனில் மேற்கூறிய எல்லா அறிகுறிகளும் இருக்கலாம்.

வயிறு மற்றும் நெஞ்சில் நீர் கோர்ப்பதால் மூச்சுத்திணறலும் ஏற்படலாம்.

என்ன செய்ய வேண்டும்?

மேற் கூறப்பட்ட ஏதாவது அறிகுறிகள் இருப்பின் தாமதியாது உரிய வைத்திய ஆலோசனையை நாடவும்

எவ்வாறான சிகிச்சைகள் உள்ளன?

மேலதிக பாசோதனைகள் செயவதன் மூலம் நோயின்நிலைகண்டுபிடிக்கப்படும். அறுவைச் சிகிச்சையே முக்கியமான சிகிச்சைமுறை ஆகும். இத்துடன் புற்று நோய்க்குரிய மருந்துகளும் எடுக்கவேண்டும் ஒழுங்கான சிகிச்சை எடுத்தால் நோயிலிருந்து மீண்டு வரும் சந்தர்ப்பங்கள் மிகவும் அதிகம் சிலவேளைகளில் பரவியநிலையில் புற்று நோய் கண்டுபிடிக்கப்பட்டால் புற்றுநோய் சிகிச்சை நிபுணரின் (Oncologis) ஆலோசனைக் கேற்ப ஊசி மருந்து ஏற்றுதலும் கதிரியக்கச் சிகிச்சையும் (Chemora diation) தேவைப்படும்.

சூலகப்புற்றுநோயை முன்கூட்டியே கண்டு பிடிப்பதற்கு இன்னும் வழிகள் இல்லை. நெருங்கிய குடும்ப உறுப்பினர்களில் இருப்பின் சிலவேளைகளில் வருடாவருடம் சில பரிசோதனைகளைச் செய்வதால் ஆரம் பத்திலேயே தகுந்த சிகிச்சையைக் கொடுக்கலாம்.

சூலகப் புற்றுநோயை எவ்வாறு தடுக்கலாம்/தவிர்க்கலாம்?

புற்றுநோய் மிகவும் ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்கப்படும்போது அறுவைச்சிகிச்சையால் முற்றாகவே குணமாக்கமுடியும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஓரளவு இப்புற்றுநோய் வராமல் தவிர்க்கும். உடல் நிறையைக் கட்டுக்குள் வைத்திருப்பதும் கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பதும் அவசியம்.

மாதாந்திரம்பாவிக்கும் குடும்பக்கட்டுப்பாட்டுக் குயிசைகளை contraceptive pills பாவித்தால் அவை சூலகப் புற்றுநோயை சரி அரைவாசியாக தவிர்க்கும் என்பது ஆராய்ச்சிகள்மூலம்நிரூபிக்கப்பட்டுள்ளது.

பெண் குடும்ப உறுப்பினர்கள் மார்பு அல்லது சூலக புற்றுநோயால் பாதிக்கப்படும் போது அவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு சூலகப் புற்றுநோய் வரும் சந்தர்ப்பங்கள் அதிகம்

மருத்துவர் கே. குருபரன்
பெண்நோயியல் மகப்பேற்று நிபுணர்