உடற்பயிற்சி ஆரோக்கியத்தின் திறவுகோல் – Dr. சி.சிவன்சுதன்

ஒவ்வொரு மனிதனும் கருவறையிலே தன் உடற்பயிற்சியை ஆரம்பிக்கிறான். பிறந்தபின்னரும் கூட துடியாட்டத்துடன் தனது பயிற்சியை தொடருகிறான். ஆனால் வளர்ந்து வரும் பொழுது பல்வேறு கருழ்நிலை களால் உடற்பயிற்சி செய்வது குறைவடைந்து பல நோய் நிலைகளுக்கு ஆளாகிறான்.

உடற்பயிற்சி என்பது எமது அனைத்து ஆரோக்கியங்களுக்குமான திறவுகோல் என்று தெரிந்திருந்தும் இதனை நாம் தொடர முடியாமல் இருப்பதற்கு காரணம் என்ன? இவற்றை தொடருவதற்கான தடைகளை கண்டறிந்து அவற்றை தகர்த்தெறிய வேண்டிய தேவை எழுந்திருக்கிறது.

உடற்பயிற்சி மூலம் எமது ஆயுளை அதிகரிக்க முடியும். அதாவது நாம் வாழும் காலத்தை அதிகரிக்க முடியும் என்பது தெளிவாக அறியப்பட்டிருக்கிறது. அத்துடன் எமது வாழ்க்கைத்தராதரமும் மேம்படும். அதாவது மனதின் மகிழ்ச்சிநிலை உடல் ஊக்கம், மன ஊக்கம் என்பன மேம்பட்டு ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு ஒழுங்கான உடற்பயிற்சி வழிசமைக்கும் என்று ஆய்வுகள் தெளிவுபடுத்தி இருக்கின்றன.

இதற்கு மேலதிகமாக ஒழுங்கான உடற்பயிற்சியானது பல நோய்களிலிருந்து எம்மைக் காக்கும் காவலரணாக திகழ்கிறது. உதாரணமாக உயர்குருதி அமுக்கம், நீரிழிவு, கொலஸ்ரோல், மாரடைப்பு, பாரிசவாதம், எலும்பு சம்பந்தமான நோய்கள் போன்றவற்றிலிருந்து எம்மை பாதுகாக்கின்றது.

அத்துடன் உடல்நிறையை குறைத்து உடல் அழகையும் ஆளுமையையும் மெருகேற்ற உடற்பயிற்சி உறுதுணையாக அமைகின்றது.

உடல் நலத்தை மாத்திரமல்ல மனநலத்தை மேம்படுத்துவதற்கும் உடற்பயிற்சி உறுதுணையாக அமைகின்றது என பல ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

மனச்சோர்வைக் குறைத்து சிந்தனை ஆற்றலையும் கற்கும் திறனையும் மேம்படுத்தி ஞாபக மறதி தன்மையை குறைப்பதற்கும் உடற்பயிற்சி உதவும் என்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

ஒழுங்கமைக்கப்பட்ட உடற்பயிற்சிகளை செய்து வருவோமாயின் எமது மருத்துவச் செலவுகள் பெருமளவில் குறைவடையும். ஏற்கனவே நோய் நிலை உள்ளவர்கள் பொருத்தமான உடற்பயிற்சிகளை செய்து வந்தால் அவர்களின் நோயின் தீவிரம் பெருமளவு குறைவடைவதுடன் அவர்கள் பாவித்துக் கொண்டிருக்கும் மருந்தின் அளவையும் குறைத்துக் கொள்ள முடியும்.

நாம் உடற்பயிற்சியில் ஆர்வம் செலுத்துவது எமக்கு மாத்திரமல்ல எமது அடுத்த சந்ததியினருக்கும் பயனுடையதாக அமையும். தாய் தந்தையரை பார்த்துத் தான் அவர்களது பிள்ளைகள் பழகிக் கொள்கிறார்கள். தாய் , தந்தையர் ஒழுங்காக உடற்பயிற்சி செய்து வருவார்களாக இருந்தால் அவர்களின் வளர்ந்து வரும் பிள்ளைகளின் மனதிலே உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற உணர்வு ஆழமாக பதியும். அவர்கள் பெரியவர்களான பின்பும்அந்தப்பழக்கத்தைதொடர்ந்துகொள்வர்கள்.

சிறுவயதிலிருந்தே உடற்பயிற்சி செய்துவருவார்களாக இருந்தால் இருதயம், நுரையீரல், மூட்டுகள், மூளை, ஈரல் என்பன ஆரோக்கியமாக விருத்தியடையும். அத்துடன் இதன் மூலம் அவர்கள் பல நண்பர்களை சம்பாதித்துக் கொள்வார்கள். அவர்களின் தொடர்பாடல் திறன் மேம்படும். இவ்வாறாக எண்ணற்ற பயன்கள் உடற்பயிற்சியினால் ஏற்படுகின்றன என்று தெரிந்தும் நாம் அவற்றை செய்யாமல் இருப்பதன் காரணம் என்ன? உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்று சொல்லிக் கொள்கிறோம்.

எமது நேரத்தை சரியான முறையில் திட்டமிடும் திறனை வளர்த்துக் கொள்வோமாக இருந்தால் எமக்கு அனைத்து நடவடிக்கைகளுக்கும் நேரம் மிஞ்சும். அப்படிச்செய்தும் நேரம் போதாமல் இருந்தால் முக்கியமில்லாத வேலைகளை கைவிடலாம். ஆனால் உயிர் காக்கும் உடற்பயிற்சியை கைவிடுவது உகந்ததாகாது.

“காலை தொடக்கம் மாலை வரை தொடர்ந்து வீட்டு வேலை, கந்தோர் வேலை. இந்தப் பயிற்சி கானும்” என்று சொல்லி திருப்திப்பட்டுக் கொள்கிறோம். எமது வழமையான வேலைகளுக்கு மேலதிகமாக உடற் பயிற்சிக்கும் நேரத்தை ஒதுக்கிக் கொள்வது அவசியம்.

பஞ்சி, களைப்பு, இளைப்பு என்று சொல்லி சோம்பேறித்தனமாக சும்மா இருந்து விடுகிறோம். ஒழுங்காக பயிற்சி செய்து வருவோமாக இருந்தால் பஞ்சி.களைப்புத் தன்மைகள் அனைத்தும் பறந்தோடி விடுவதை நீங்கள் அனுபவ ரீதியாக உணரமுடியும்.

எமக்கு பொருத்தமான உடற்பயிற்சி எது என்பதை தெரிவு செய்வதில் காணப்படும் குழப்ப நிலையும் உடற்பயிற்சி செய்வதை நாம் பிற்போட காரணமாக அமைகிறது. எமக்கு பிடித்த பொருத்தமான பயிற்சியை தெரிவு செய்து அதனைத் தொடருவோம். உங்கள் உடற்பயிற்சிக்கு நீங்கள் பயனுடைய விடயங்களை செய்ய ஆரம்பித்தால் உதாரணமாக வீட்டுத்தோட்டம் செய்தல், ஆடு, மாடு வளர்த்தல், போக்குவரத்துக்கு துவிச்சக்கரவண்டிகளை பாவித்தல், பயன் தரும் மரங்களை நாட்டி நீரூற்றி வளர்த்தல் போன்றவற்றை செய்து வந்தால் மனதுக்கு புத்ததூக்கமும் தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற ஆர்வமும் ஏற்படுவதுடன் சூழல் பாதுகாப்பிற்கும் உறுதுணையாக அமையும்.

நாம் மாத்திரம் உடற்பயிற்சி செய்வதுடன் நின்று விடாது எம்மைச் சார்ந்தவர்களையும் செய்யுமாறு ஊக்கப்படுத்த வேண்டும்.

உடற்பயிற்சியை எமது வாழ்வின் ஒரு அங்கமாக மாற்றுவோம். அதனை இன்றே ஆரம்பிப்போம். ஆரோக்கியத்தின் திறவுகோல் எங்கள் கைகளிலேயே இருக்கிறது.

Dr. சி.சிவன்சுதன்
பொது வைத்திய நிபுணர்