பாரிசவாதம் ஏன் ஏற்படுகிறது? – வைத்திய கலாநிதி அஜந்தா கேசவராஜ்

பாரிசவாத நோயானது மருத்துவரீதியில் குணப்படுத்தக் கூடிய நோயாக இருப்பதாலும் பாரிசவாத நேயாயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதாலும் இந்த நோய் பற்றிய தகவல்களை அனைவரும் அறிந்திருத்தல் அவசியமாகும்.

பெரும்பாலும் தங்களுக்கு பாரிசவாத நோய் ஏற்படும் போதோ அல்லது தமது குடும்பத்தினருக்கு ஏற்படும்பொழுது மட்டுமே இந்த நோய் பற்றி அறிந்துகொள்வதில் பலர் ஆர்வம் செலுத்துகின்றனர். பொதுவாக நோக்குமிடத்து இந் நோய் பற்றிய விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே உள்ள காரணத்தினால் தகுந்த நேரத்தில் சிகிச்சை வழங்கப்படாத நிலை இன்னமும் காணப்படுகின்றது.

எனவே இந்த நோய் தொடர்பாக ஏற்கனவே அறிந்திருப்பின் நோய் ஏற்படும் சந் தர்ப்பங்களில் உருவாகக்கூடிய பதற்ற நிலையைத் தவிர்த் துக்கொள்ள முடியும்.

1. பாரிசவாதம் என்றால் என்ன?

நமது மூளையின் சில பகுதிகளுக்குரிய குருதி வழங்கலில் இடையூறு ஏற்படுத்துவதால் உருவாகும் நிலையே பாரிசவாதம் (Stroke) எனப்படும். இந்நிலை திடீரென உருவாவதால் இதனை மூளையில் ஏற்படும் விபத்து எனவும் அழைப்பர் (Cerebrovascular Accident CVA).

2. பாரிசவாதம் ஏன் ஏற்படுகிறது?

மூளைக்குக் குருதியை வழங்குகின்ற குருதிக்குழாயில் அடைப்பு ஏற்படுதல் (Cerebral thrombosis) மூளையில் உள்ள குருதிக்கலன்களில் வெடிப்பு காரணமாக ஏற்படும் இரத்தப்பெருக்கு ஏற்படுதல் (Cerebral haemorrhage) மேற் கூறிய இருகாரணிகளிலும் மிகவும் பொதுவான காரணியாக குருதிக்குழாயில் ஏற்படும் அடைப்ப (Cerebral thrombosis) விளங்குகின்றது.

மூளையிலுள்ள குறிப்பிட்ட ஒரு பகுதிக்கு இரத்தத்தை கொண்டுசெல்லும் இரத்தக்குழாயில் ஏற்படும்தடை காரண மாகவே இது உருவாகின்றது. குருதிக் குழாயின் சுவரில் கொழுப்பு படிவதனால் குருதிக்குழாயின் உள்விட்டம் படிப்படியாகக் குறைவடைந்து செல்கின்றது.

இவ்வாறு ஏற்படும் பொழுது ஒரு சமயத்தில் குருதியோட்டத்தில் தாமதம் ஏற்பட்டு இதன் விளைவாக குருதியுறைவும் ஏற்படும். இதனை குறுதியடைப்பு (Thrombosis) என்பர். இதேபோன்ற நிகழ்வு இருதயநாடிகளில் ஏற்படும்பொழுது இதனை மாரடைப்பு என்று நாம் அழைக்கின்றோம்.

இதைவிட சில சந்தர்ப்பங்களில் இருதயம் மற்றும் இருதயத்திலிருந்து வெளியேறும் பெரிய குருதிக்குழாய்களில் பல்வேறு காரணங்களினால் குறுதிக்கட்டிகளும் உருவாகிறது. இக் கட்டிகள் பொதுக்குறுதிச்சுற்றோட்டத்தில் கலந்து மூளைக்குரிய நாடிகளினூடாக செல்லும்பொழுது குருதிக் குழாய்களிலேயே தங்கிவிடுவதனால் திடீரென குருதிச்சுற் றோட்டம் தடைப்படுகின்றது. இவ்வாறாக காவிச்செல்லப்படும் செயன்முறையானது EMBOLISM எனவும் அழைக்கப்படுகிறது.

மேலும் சில சந்தர்ப்பங்களில் மூளை நாடிகள் வெடித்து இரத்தப்பெருக்கும் ஏற்படலாம். இதன் காரணமாக மூளையின் தொழிற்பாட்டில் திடீர் ஸ்தம்பித நிலை ஏற்பட்டு பாரிசவாதத்தின் குணங்குறிகள் ஏற்படுகின்றன. இரத்தப்போக்கின் காரணமாக ஏற்படும் பாரிசவாதமானது குருதியுறைவினால் ஏற்படும் பாரிசவாதத்தை விட தீவிரமானதும் ஆபத்தானதுமாகும். அதிர்ஷ்டவசமாக ஏறத்தாழ 15% ஆனோர் மாத்திரமே இந்தக் காரணத்தினால் நோய்வாய்ப்படுகின்றனர். உயர் குருதியமுக்கம் இதற்கொரு முதன்மைக் காரணியாக அமைகின்றது. உயர் குருதியமுக்க நோயாளிகள் அதற்குரிய மருந்துகளை ஒழுங்காக எடுக்காதவிடத்து குருதியமுக்கம் கட்டுப்பாடின்றி உயர்வடைந்து குருதிக்குழாய் வெடிப்பினை ஏற்படுத்துகின்றது.ஆகவே பாரிசவாதத்திற்குரிய மேற்கூறிய இரு காரணி களையும் வேறுபடுத்த CT/MRIScan போன்ற பரிசோதனைகள் பயன்படுத்தப்படுகின்றன.

3. தற்காலிக பாரிசவாதம் (Transient schemic Stroke – TIA)என்றால் என்ன?

தற்காலிக பாரிசவாதம் என்பது பாரிசவாதத்திற்குரிய குணங்குறிகள்ஏற்பட்டு 24 மணித்தியாலங்களுக்குள் மீண்டும் இயல்பு நிலையை அடைவதைக் குறிக்கும். இதற்கு குருதிக்குழாய்களில் ஏற்படும் நிரந்தரமற்ற குருதியடைப்பு ஒரு காரணமாக அமையலாம்.

இதற்கு குருதிக்குழாய்களில் ஏற்படும்நிரந்தரமற்ற சுருக்கம் அல்லது குருதிக்குழாய்களில் ஏற்படும் சிறிய குருதிக் கட்டிகள் (Microembolism) காரணமாக இருக்கலாம்.

இதன்மூலம் தற்காலிக பார்வையின்மை, பேச்சில் பாதிப்பு மற்றும் உடலின் ஒரு பக்கத்தில் பலவீனம் போன்றவை ஏற்படினும் இதனால் பாரதூரமான இயலாமை ஏற்படுவது மிகவும் அரிதாகவே காணப்படுகின்றது.

இதற்குரிய குணங்குறிகள் தற்காலிகமானவையாக இருப்பினும் இவை ஆபத்தான பாரிசவாதம் ஏற்படப்போகின்றது என்பதற்கான பொதுவான ஒரு முன்னெச்சரிக்கையாகவும் விளங்குகின்றது. தற்காலிக பாரிசவாதத்திற்கு உட்பட்டவராயினும் சிகிச்சை அவசியம். ஏனெனில் இவர்களில்

  • 0 10% ஆனோர் அடுத்த ஒருவாரகாலத்தினுள்ளும்
  • 20%ஆனோர்ஒருமாத காலத்தினுள்ளும்
  •  50% ஆனோர் ஒரு வருட காலத்தினுள் ளும் நிரந்தர / பாரதூரமான பாரிசவாத நோய்க்கு உள்ளாவதற்கு வாயப்புகள் உண்டு.

4. பாரிசவாதம் ஏற்படு வதற்குரிய காரணிகள் எவை?

உயர் குருதியமுக்கம், உயர் குருதிக் கொலஸ்ரோல் மட்டம், அதிகரித்த உடற்பருமன் மற்றும் நீரிழிவு போன்ற
நோய் நிலைகளே பாரிச வாதம் ஏற்படும் சாத்தியக் கூறுகளை அதிகரிக்கவல்லன.

வைத்திய கலாநிதி அஜந்தா கேசவராஜ்
விசேட நரம்பியல் நிபுணர்