குடும்பவன்முறையால் பாதிக்கப்படுமிடத்து நட்பு நிலையங்களில் வழங்கப்படும் சேவைகள்.

பல்வேறு தரப்புகளும் இப்பொழுது கதைக்கும் ஒரு விடயமாக குடும்ப வன்முறை விளங்குகிறது. எங்களிடையே குடும்ப வன்முறை அதிகரித்துவிட்டதா அல்லது இப்போதுதான் நாம் விழிப்படைந்து இருக்கிறோமா? இதன் ஆதிமூலம் எப்போதும் முட்டையா அல்லது கோழியா போல விடை தெரியாத கதை

நிகழ்வு-1 65 வயது மதிக்கதக்க பாட்டியும்பேர்த்தியும் வைத்தியசாலைக்கு சேர்க்கபட்டார்கள். பாட்டியின் முகம் முழுக்கக் கண்டல் காயம். பேர்த்தியோ பலநாள் சாப்பிடாமல் இருந்தது போல் வாடிய சிறுபயிராக இருந்தாள். தாயில்லா பிள்ளையும் பாட்டியும் சிறுபிள்ளையின் தந்தையால் தினமும் துன்பத்துக்கு ஆளாக்கப்பட்டுவந்தார்கள். பிள்ளையின் தாய் நோய்வாய்ப்பட்டு ஒரு வருடத்தின் முன் இறந்துவிட்டார். தாங்க முடியாத துன்பத்தின் பின்பே இருவரும் வைத்தியசாலையின் உதவியை நாடினர்.

நிகழ்வு-2 30 வயது மதிக்கத்தக்க இரு பிள்ளைகளின் தாய் மூன்று மாதத்தினுள் வைத்தியசாலையின் பல பிரிவுகளிலும் பலமுறை சேர்க்கப்பட்டிருந்தாள். ஒவ்வொருமுறையும் புதிதாக ஒரு நோயை கூறிக்கொண்டு வருவார். இறுதியாக இரண்டு கால்களிலுமுள்ள எலும்புகள் முறிந்து அவசர சிகிச்சை விடுதிக்கு வந்திருந்தார். மிகவும் கடுமையான சமூக குடும்ப கட்டுப்பாடுகளால்வெளியில் சொல்லமுடியாத குடும்பவன்முறைக்கு ஆளாகிவந்தவர். தாங்கமுடியாத நோவினாலும் நடக்க முடியாத காரணத்தினாலும் தனக்கு நடந்த துன்பத்தை வைத்தியர்களிடம் கூறினார்.

மேலே கூறப்பட்டவை வெளியில் வந்த குடும்பவன்முறைக்கு சில உதாரணங்கள் மட்டுமே. குடும்ப வன்முறை என்பது மிக நெருங்கிய குடும்ப உறுப்பினர்களால் ஏற்படுத்தப்படும் நெருக்கீடுகள் ஆகும்.

இது பலவகைப்படும்

 1. உணர்வுரீதியாக அச்சுறுத்தல் (Emotional abuse)
 2. பொருளாதார ரீதியாக அச்சுறுத்தல் (Financial abuse)
 3. பாலியல்ரீதியாக அச்சுறுத்தல்(Sehua abuse)
 4. உணவளிக்காமை அல்லது பட்டினி போடுதல்
 5. பாதுகாப்புதராமைடு (No security)
 6. வீட்டைவிட்டு துரத்துதல் (No Shelter /  No housing)
 7. காதலித்து ஏமாற்றுதல்
 8. வீட்டுக்குள் பூட்டி வைத்தல்
 9. உடல் ரீதியான வன்முறை(Physical Abuse)

ஏன் குடும்ப வன்முறை நிகழ்கிறது?

குடும்ப வன்முறை ஏன் நிகழ்கிறது என்பதற்கு பல காரணங்களை சொல்ல முடியும்.

 1. எம் சமுதாயத்தில் முதியோரையும் பெண்களையும் சிறுவர்களையும் பாதுகாப்பது ஒரு சமூகக் கடமையாக இருந்தது. பல்வேறு சமூக மாற்றங்களால் இந்த சமூக பொறுப்புணர்ச்சி (Social Responsibility) சற்று குறைந்து வருவதன் வெளிப்பாடே இவ்வாறான குடும்ப வன்முறைகள் அதிகரிப்பதன் காரணம்.
 2.  மது போதைக்கு அடிமையாதல், போரால் ஏற்பட்ட சமூக பொருளாதார மாற்றங்கள் மற்றும் தொடர்ச்சியான இடப்பெயர்வுகள் காரணமாக நாம் ஒரு வேர் அற்ற பாசிச் சமுதாயமாக (Rootless Community)  விட்டதே முக்கியமாகும்.

ஏன் குடும்ப வன்முறை தொடர்பாக மருத்துவதுறையினர் முக்கியம் அளிக்கின்றார்கள்?

குடும்ப வன்முறை பற்றி பல்வேறு அரச நிறுவனங்களும், அரசசார்பற்ற நிறு வனங்களும் கதைக்கின்றன. பலநிகழ்ச்சி திட்டங்களை செயற்படுத்துகின்றனர்.

வைத்திய சமூகமாகிய நாம் இந்த வன் முறையால் பாதிக்கப்படுபவர் களை அடிக்கடி பார்க்கின்றோம். குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர் இலகுவில் எவரும் சந்தேகம் கொள்ள முடியாத வகையில் ஒரு வைத்தியசாலைக்கு வந்து தன்குறைகளை சொல்ல முடியும்.

மேலும் உலக சுகாதாரஸ்தாபனம் (World Health Organization) குடும்ப முறையை ஒரு மருத்துவ பிரச்சினையாக வரையறுத்துள்ளது. குடும்பவன்முறையால் பாதிக்கப்படுமிடத்து பாதிப்பை ஏற்படுத்தியவருக்கு எள்ளளவில் தானும் சந்தேகம் வராத முறையில் வைத்தியசாலைகளுக்கு வருவது மிக இலகுவானது. இதனால்தான் பல நோய்களை சொல்லி வைத்திய விடுதிகளில் அனுமதி பெறுகிறார்கள்.

குடும்பவன்முறையால் பாதிக்கப்படுமிடத்து

 1. உடல் உள ஆரோக்கியம்பாதிக்கப்படும்
 2. என்புமுறிவு
 3. காயங்கள்
 4. கருச்சிதைவு
 5. சிலவேளைகளில் மரணமும்நிகழலாம்

இவையாவும் நீண்ட நாள் சிகிச்சை தேவைப்படும்நிலையை உருவாக்கிவிடும். ஓர் ஆரோக்கியமற்ற உடல் மற்றும் மன அளவில் பலவீனமான ஒரு சமூகம் நீண்டநாள் நோக்கில் எம்மிடையே உருவாகலாம்.

வைத்தியசாலைகளிலுள்ள வசதிகள்

01. எமது வைத்தியசாலைகளில் இவ்வகையான வன்முறைக்கு உட்பட்ட வருக்கு ஆலோசனைகளையும் மேலதிக வழிகாட்டல்களையும் செய்வதற்கு சேவை நிலையங்கள் உள்ளன.

02.நட்பு நிலையங்கள் என்ற பெயரில் இவை இயங்குகின்றன. யாழ்ப்பாணம் போதனாவைத்தியசாலை, சாவகச்சேரி மந்திகை வைத்தியசாலைகளில் நட்பு நிலையங்கள் இயங்குகின்றன.

இங்கே சேவைகளை வழங்குவதற்கு பல்வேறு உத்தியோகத்தர்கள் தயாராக இருக்கிறார்கள் உங்கள் பிரச்சினைகளை செவிமடுத்து ஆறுதல்படுத்தி தேவையான வழிகாட்டல்கனை இவர்கள் செய்வார்கள்.

முக்கியமாக மருத்துவத்துறைக்கு உரிய முறையில் தகவல்களின் இரகசியம் பேணப்படுவதால் இப்போது பலர் இந்த சேவைகளைப் பெற்று தமது இடர்களுக்கான தீர்வுகளைப்பெறுகிறார்கள்.

நட்பு நிலையங்களில் வழங்கப்படும் சேவைகள்

 • பிரச்சினைகளை ஆறுதலுடன் செவிமடுத்தல் (Befriending)
 • தேவையான ஆலோசனைகளை வழங்குதல்
 • தேவையான வழி காட்டுதல்களை வழங்குதல் (Guidance)
 • சட்ட உதவி (Legal aid)
 • பொலிஸ் (Police) உதவி தேவைப்படின் அறிவித்தல்
 •  மருத்துவ சேவைகள்


நட்பு நிலையம்/யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை

 • பழைய வெளிநோயாளர் பிரிவில் (OPD) நீரிழிவு சிகிச்சை நிலையத்துக்கு அருகில் உள்ளது.
 • வார நாள்களில் காலை 8 மணி யிலிருந்து மாலை 4 மணிவரை
 • சனிக்கிழமை காலை 8 மணியிலிருந்து ந.ப 12 மணிவரை
 • தொலைபேசி இலக்கம் 0212221090

குடும்ப வன்முறை – தடுக்க என்ன செய்யலாம்?

 •  குடும்ப வன்முறை தொடர்பான விழிப்புணர்வை பாடசாலை மட்டத்தில் இருந்து தொங்க வேண்டும்.
 • ஆணும் பெண்ணும் சமமாக தம்மையும் தமது உறவுகளையும் மதிக்கத் தொடங்கும் போது அங்கே வன் முறைக்கு இடம் குறைகிறது.
 • ஒவ்வொருவரும் தனது சகமனிதனை மதிக்கும்போது அங்கே வன்முறைக்கு இடம் குறைகிறது.

மருத்துவர் க.குருபரன்
மகப்பேற்றியல் பெண் நோயியல் நிபுணர்,