எமது சுற்றாடல் காற்றை சுத்தம் செய்து சுகம் பெற.. – Dr.சி.சிவன்சுதன்

எமது சுற்றாடலில் வளிமண்டலத்தை சுத்தமானதாகவும் ஆரோக்கியமானதாகவும் வைத்திருப்பதன் மூலம் பல நோய்களை தவிர்த்து எமக்கு ஏற்கனவே இருக்கும் பல நோய்களிலிருந்தும் விடுதலைபெற முடியும்.

எமது சுற்றாடல் காற்று சுத்தமாகவும் குளிர்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்பதில் நாம் அக்கறை குறைந்தவர்களாக இருக்கிறோம்.

நோயுற்று மூச்சுத்திணறி உயிருக்காய் போராடும் மனிதர்களை மீட்டெடுக்க ஈரலிப்பு கலந்த ஒட்சிசன் வாயு தேவைப் படுகின்றது என்பதை நாம் அறிவோம். ஒட்சிசன் இன்றி உயிரினங்கள் உயிர் வாழ முடியாது என்றும் தெரிந்து வைத்திருக்கின்றோம். அசுத்தக்காற்றாலும் அசுத்தநீராலும் நோயுற்றுவிழும் மக்கள் தொகைபற்றியும் அறிந்து வைத்திருக்கின்றோம்.

தூயகாற்றுக்காகவும் நீருக்காக வும் போராடிக்கொண்டிருக்கின்றோம். சுற்றாடல் வெப்பமாகி எமது சொந்தப் பூமிவரண்டுபோய் மண்ணும் மனித மனங்களும் மரத்துப்போன நிலையில் ஒருகுளிர்ச்சியான நிழல் தேடி அலைந்து கொண்டிருக்கிறோம்.

ஆனால் இவை அனைத்தையுமே அள்ளி வழங்க ஆயத்தமாக இருக்கும் பசுமையான மரங்கள் பற்றி நாம் அக் கறைப்பட்டுக் கொள்வதில்லை. அதற்கும் ஒருபடி மேலே சென்று அவற்றை அழித்துவிடவும் ஆயுதம் தூக்கிநிற்கின்றோம்.

எம்மை சுற்றி பச்சைப்பசேல் என்று வளரும்தாவரங்கள்அனைத்தும் எமக்கு அனைத்தையும் வழங்கும் அட்சயபாத்திரங்கள் என்று கருதுவது மிகைப்படுத்தப் பட்ட சிந்தனைஆகாது. பசுமையான மரங்கள் ஒவ்வொன்றும் நித்தமும் பல்லாயிரக்கணக்கான லீற்றர் ஈரலிப்பான ஒட்சிசனை உருவாக் கிக்கொண்டிருக்கும் தொழிற்சாலை களாக விளங்குகின்றன.

அத்துடன் நாம் வெளியிடும் அசுத்தக்காற்றை உள்ளெடுத்து சுத்திகரிக்கும் வடிகட்டிகளாகவும் தொழிற்படுகின்றன. சுற்றாடலின் வெப்பநிலையைக் குறைத்து கழல் வெப்பநிலையை மனிதன் சுகமாக வாழக்கூடிய ஒருவெப்பநிலையில் சீர் செய்துவைக்கும் ஒரு வெப்பநிலை சீராக் கியாகவும் இந்த மரங்கள் தொழிற்பட்டுக் கொண்டிருக்கின்றன.

தாவரங்களில் துளிர்த்து வளரும் குருத்துக்களும் பசுமையும்,குளிர்ச்சியும் நிழலும் அதன் மலர்களும் மனித மனங்களுக்கு புத்துணர்ச்சியையும் அமைதியையும் அள்ளி வழங்குகின்றன.

மாதம் மும்மாரி பொழியாவிட்டாலும் போதுமான அளவுமழை வீழ்ச்சி கிடைப்பதற்கும் எமது தண்ணிர்த்தேவையை நிவர்த்திப்பதற்கும் மரங்கள் இன்றியமையாதவை என்பதும் மரம் இன்றி மழை இல்லை என்பதும் எமக்குத் தெரியும்.

எமக்கு உணவுப் பொருட்களையும் வருவாயையும் தரும் தாவரங்கள் தான் பயனுள்ள தாவரங்கள் என்று எண்ணிக் கொள்கிறோம். ஆனால்அனைத்து தாவரங்களுமே ஒருவகையில் பயனுடையவை தான் என்பதை மறந்து விடுகின்றோம். இந்த மரங்களையும் தாவரங்களையும் பாதுகாப்பதன் மூலம் எமது சுற்றாடலையும் வளிமண்டலத்தையும் ஆரோக் பேணமுடியும்.

மரங்கள் பல அநாவசியமாக வெட்டி எறியப்படுகின்றன. மரங்களால் சுத்திகரிக்கப்பட்ட ஆரோக்கிய காற்றுகளுக்கு வீடுதோறும் கதவடைப்பு போராட்டம் நடக்கிறது. ஜன்னல்கள் அனைத்தையும் அடித்து மூடி உள்ளேமின்விசிறிகள் போட்டு நாம் சுவாசித்து வெளிவிட்ட அசுத்தக்காற்றையே மீண்டும் மீண்டும் சுழல விட்டு சுவாசித்து பல நோய்களுக்கு ஆட்பட்டுக்கொண்டிருக்கின்றோம்.

அத்துடன் இவ்வாறான அசுத்தக்காற்றை சுவாசிப்பது மன அமைதிக் குறைவு, நித்திரைக்குறைவு, கற்றல் செயற்பாடுகளில் தாக்கம் போன்றவற்றையும் ஏற்படுத்தலாம்.

நாம் வெட்டிவீழ்த்திய ஒவ்வொரு மரங்களுக்காகவும் வேதனைப்படுவோம். அதற்கு பிராயச்சித்தமாக வீழ்த்திய ஒவ் வொருமரங்களுக்கு பதிலாகவும் ஒன்பது மரங்கள் நட்டுவளர்ப்போம். மரம் ஒன்றை நாட்டிவளர்ப்பது ஒரு உன்னதமான புண்ணிகா ரியம் மட்டுமல்ல மனித குலத்திற்கும் மருத்துவ உலகத்திற்கும் செய்யும் ஒரு மகத்தான சேவை என்பதை மனதில் நிறுத்துவோம்.

தாவரங்களிலும் அன்பு செலுத்து வோம். நாம் ஒவ்வொருவரும் எமது வாழ் நாளில் எத்தனை மரங்கள் நட்டு வளர்த் தோம் என்பதை கணக்கிட்டு வைத்துக் கொள்வோம்.அதைச்சொல்லிக் கொள்வதில் பெருமைப்பட்டுக் கொள்வோம்.

மனிதனுக்கு உணவு உடை உறைவிடம், மருந்து, சுவாசக்காற்று, நிழல், குளிர்ச்சி, மன அமைதி, மழை, நீர், எரி பொருள், மகிழ்ச்சி என அனைத்தையுமே தொடர்ந்து அள்ளி வழங்கிக் கொண்டிருக்கும் தாவரங்களையும் நட்டு வளர்ப்பதில் பெருமிதம் கொள்வோம்.

வீட்டுச் சுற்றாடலையும் பொது இடங்களையும் தாவரங்களால் பசுமைப் படுத்துவோம். பொது இடங்கள், கோயில்கள், தெரு ஓரங்கள், வீடுகள், அலுவலகங்கள், பாடசாலைகள் என அனைத்துபகுதிகளிலும் மரங்களை நாட்டிவளர்ப்பது எமது சுற்றாடல் காற்றையும் சுழலையும் வளப்படுத்தும் ஒரு புண்ணியகாரியமாகும்.

கோயில்கள் கோபுரங்கள் கட்டுவதில் எமக்கு இருக்கும் ஆர்வத்தைப் போல ஆயிரக்கணக்கில் மரங்கள் நாட்டுவதிலும் ஆர்வம் பிறந்தால் அது ஆரோக்கியமாக அமையும்.

Dr.சி.சிவன்சுதன்
பொது வைத்தியநிபுணர்