எனது மகனின் உயரமானது வகுப்பில் உள்ள மாணவர்களுடன் ஒப்பிடும் போது குறைவாக உள்ளது. இதுபற்றிஆலோசனை வழங்கவும்.

ஒருவரின் உயரமானது பெற்றோரின் உயரம், உள்ளெடுக்கும் போசணையின் அளவு போன்ற பல காரணங்களில் தங்கியுள்ளது. நீண்ட காலமாக சிறுபிள்ளையொருவர் உள்ளெடுக்கும் உணவு குறைவா இருக்கும் போது Chronic Malnutrition அவரது உயரமும்உடல்நிறையும் சாதாரண அளவை விடக் குறைவாக இருக்கநேரிடுகிறது.

இவ்வாறு உயரம் தொடர்பான பிரச்சினையுள்ள சிறுவர்கள் வைத்திய ஆலோனையை விரைவாகப் பெற்றுக் கொள்வது அவசிய மாகும்.நோய்கள் தொடர்பான வினாக்கள் மற்றும் உடற்பரிசோதனை History taking and Examination மூலம் உயரக் குறைவான காரணத்தை மருத்துவரினால் ஊகித்துக்கொள்ளமுடியும்.

பெற்றோருடைய உயரத்தை அளவிட்டு அதன் மூலம் சராசரியான பெற்றோரின் உயரக் கணிப்பின் மூலம் Mid Parental Height குறித்த சிறுவன் அல்லது சிறுமியின் உயரத்தில் பிரச்சினை இருக்கிறதா இல்லையா எனக் கண்டறிய முடியும்.

இவ்வாறு உயரம் குறைவாக இருப்பதற்கு நீண்டகாலமாக உடலிலுள்ள நோய்கள் தைரொக்ஸின் உயர வளர்ச்சி ஹோர்மோன் போன்றவற்றின் குறைபாடும் காரணமாக இருக்கலாம் எனவே உயர வளர்ச்சி குறைவுக்கான காரணத்தைக் கண்டறிவதற்கு சில வகையான குருதிப்பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியமாகும். இதேபோல Xray பரிசோதனை மூலம் எலும்பு வயதை (Bone age) அறிந்து கொள்வது அவசியமாகும்.

இவ்வாறு உயரக்குறைபாடு இருப்பதற்கான காரணத்தைக் கண்டறிந்து கொண்டால் அதற்கான சிகிச்சையை வழங்குவதன் மூலம் குறைபாடு உள்ள சிறுவர்கள் சாதாரண உயரத்தை அடையக் கூடியதாக இருக்கும் உயர வளர்ச்சி ஹோர்மோன் (Growth Hormone) குறைபாடு இருப்பதாக உறுதிப் படுத்தப்பட்டால் அதனை நிவர்த்தி செய்யும் விதத்தில் உயர வளர்ச்சி ஹோர்மோனை வழங்குவதன் மூலம் குறைபாடுள்ள சிறுவர்கள் எதிர்காலத்தில் சாதாரணமான உயரத்தை அடையக் கூடியதாக இருக்கும். இவ்வாறான குறைபாட்டை எவ்வளவு சிறுவயதில் இனங்காணுகின்றோமோ அதற்கேற்ப தரமான சிகிச்சையை வழங்கக்கூடியதாக இருக்கும்.

வடக்கு- கிழக்கு மாகாணங்களிலேயே முதற்தடவையாக உயர வளர்ச்சி ஹோர்மோன் (Growth Hormone) சிகிச்சை வசதியானது யாழ். போதனா வைத்திய சாலையில் மிக அண்மையில் ஆரம்பிக்கப்பட்டிருப்பது எமது மக்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகும்.மருத்துவர் M.அரவிந்தன் நீரிழிவு அகஞ்சுரக்கும் தொகுதி சிறப்பு வைத்திய நிபுணர், யாழ்போதனா வைத்தியசாலை.