நாம் தொலைத்துவிட்ட அமைதியை மீண்டும்பெற -Dr. சி.சிவன்சுதன்

அன்றைய காலத்திலே இயற்கையான ஒலிகளுடன் அமைதியாக இருந்த எமது சுற்றாடல் பல்வேறுபட்ட தேவையற்ற சத்தங்களினால் குழப்பம் அடைந்து, மாசுபட்டு இன்றுமனிதர்களை நோயாளிகளாக மாற்றும் அளவிற்கு மாற்றம் பெற்று இருக்கிறது.

இயற்கையை அன்னையுடனும் கடவுளுடனும் ஒப்புநோக்குவது எமது மரபு. அந்த இயற்கையை நாம் மாசுபட அனுமதித்தது ஏன்? உலக சுகாதார ஸ்தாபனத்தின்கணிப்பீட்டின்மூலம்மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களில் 25 சத வீதமான நோய்கள் நேரடியாகவோ அல்லது மறை முகமாகவோ சுற்றாடல் மாசடைவதனால் ஏற்படுகின்றது என்பது அறியப் பட்டிருக்கின்றது.

இந்த சதவீதம் எமது பிரதேசங்களில் இன்னும் அதிகமாக காணப்படுகிறது. சுற்றாடல் மாசடைவதற்கு தேவையற்ற சத்தங்கள் ஒரு முக்கியகாரணியாக அமைகின்றது. சூழல் மாசடைவதற்கு பலவகையான ஒலிகள் காரணமாக இருக்கின்றன. உதாரணமாக வாகன இரைச்சல், வாகனங்களில் இருந்து ஏற்படுத்தப்படும் கோன் ஒலி, வீடுகளில் தொலைக்காட்சி பெட்டிகளில் இருந்து வெளிவரும் சத்தங்கள், வீட்டு உபகரணங்கள், ஜெனரேட்டர்கள் போன்றவற்றினால் ஏற்படும் சத்தங்கள், ஒலிபெருக்கிகளினால் ஏற்படுத்தப்படும் சத்தம், இயந்திரங்களின் சத்தம், சில மனிதர்களினால் எழுப்பப்படும் ஆரோக்கியமற்ற வார்த்தைகள், AC, குளிர்சாதனப்பெட்டி என்பவற்றிலிருந்து தொடர்ச்சியாக வரும் ஒலிகள் போன்றவற்றை குறிப்பிடலாம்.

இவ்வாறான சத்தங்களினால் எமது சுற்றாடலில் அமைதித்தன்மை குலையும் பொழுது இது மனிதர்களில் பல்வேறுபட்ட தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. இத்தாக்கங்களினால்ஏற்படும் விளைவுகளில் முக்கியமானவையாக மன அழுத்தம், மனச்சோர்வு, ஞாபகமறதிநித்திரைக் குழப்பம், உயர்குருதி அமுக்கம், இருதய நோய்கள், மாரடைப்பு, கேட்கும் திறன் குறைவடைதல், கல்விகற்றல்திறன் குறைவடைதல், இலகுவில் நோய்வாய்ப்படுதல், இலகுவில் கோபப்படும் தன்மை போன்ற வற்றை குறிப்பிடலாம்.

அமைதியான சூழல் ஒரு ஆரோக்கியமான உலகின் திறவுகோல். இத்தகைய அமைதியான சூழலை ஏற்படுத்த நாம் என்ன செய்யமுடியும்?

தெருக்களிலே எமது வாகனங்களில் இருந்து எழுப்பப்படும் கோன் ஒலிகளில் 95 சதவீதமானவை அநாவசியமாக எழுப் பப்படுகின்றன. நல்லமுறையில் வாகனத்தைக் கட்டுப்படுத்தும் திறனும் மன அமைதியும் சுயநலமற்ற மனப்பாங்கும் இருந்தால் நாம் தேவையற்ற கோன்களை தவிர்த்துக் கொள்ளலாம்.

எமதுகோபத்தையும் மனப்பதற்றத்தையும் அவசரத்தன்மையையும் வெளிக்காட்ட சிலசமயம் கோன் அடித்தபடியே செல்கின்றோம். ஒவ்வொரு தடவையும் கோனில் கைவைக்க முன்பு எமது மனதில் கை வைத்துப் பார்ப்போம். நிச்சயமாக எம்மால் அநாவசிய கோன்களைத் தவிர்த்துக் கொள்ள முடியும்.

எமது வாகனங்களில் சைலென்சர்களை நல்லமுறையில் பேணுவோம். இதன் மூலம் இரைச்சல்களைக் குறைக்க முடியும். ஒவ்வொரு மனிதனும் தெருக்களிலே பல மணிநேரங்களைச் செலவிடுகின்றான். பல மக்கள் தெருவோரம் குடியிருக்கிறார்கள். எனவே தெருக்களில் ஏற்படும் சத்தங்களைக் குறைப்பதன் மூலம் மக்களுக்கு ஏற்படும் தாக்கங்களைக் குறைத்துக் கொள்ளமுடியும்.

வீடுகளில் தொலைக்காட்சி, வானொலி போன்றவற்றின் சத்தங்களை இயலுமான வரை குறைத்துவைத்துக் கொள்வோம். தேவையற்ற நேரங்களில்அவற்றைநிறுத்தி விடலாம். வீட்டு உபகரணங்கள் உதாரணமாக கிரைண்டர், மோட்டர் மின்பிறப்பாக்கி போன்றவற்றைத் தெரிவுசெய்யும் பொழுது அவற்றின்விலை, தராதரம் என்ப வற்றைக் கருத்தில் கொள்வதுபோன்று அவைபோடும் சத்தத்தினையும் கருத்தில் எடுத்து குறைந்த சத்தத்துடன் இயங்கும் உபகரணங்களைத் தெரிவு செய்து கொள்வோம்.

மின்விசிறிகள் இயங்கும் பொழுது அவற்றிலிருந்து சத்தம் வெளிப்படின் அவற்றை நல்ல முறையில் திருத்திக் கொள்வோம். வணக்கஸ்தலங்களிலும் பொது இடங்களிலும் அநாவசியமாக ஒலி பெருக்கிகளை இயங்க வைப்பதன் மூலமும் அச்சுற்றாடல் மாசுபட்டு மக்களுக்கு தாக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. மக்களை நோயாளிகளாக்கும் எந்த நடவடிக்கைகளையும் இறைவன் விரும்பமாட்டான் என்பதை மனதில் நிறுத்துவோம். கடவுளின் பெயரால் கடவுளுக்கு ஒப்பான சுற்றாடல் அசுத்த மாகிவருவது வேதனையானதே.

சிறுபிரச்சினைகளுக்கும் சத்தம் போட்டுப் பேசுவதைத் தவிர்த்துக் கொள்வோம். மற்றவர்களை குறை கூறுவதை விடுத்து எம்மில் இருக்கும் தவறுகளை அறிந்து நிவர்த்திசெய்ய முயலுவோம். தீய கடுமையான வார்த்தைகளை அன்றாடம் பாவிக்கும் பழக்கத்தை நிறுத்துவோம்.

நாம் தொலைத்துவிட்ட அமைதியும் ஆரோக்கியமும் எமக்கு மீண்டும்கிடைக்து அனைவரும் ஒன்றுபட்டு உழைப்போம்.

Dr. சி.சிவன்சுதன்
பொதுவைத்திய நிபுணர்.