திரன்சியன் ஸ்கீமிக் அற்ராக் (Transient Ischaemic Attack – TIA) – வைத்தியர் ஜெயராசா சஞ்ஜெயன், வைத்தியர் கலாநிதி அஜினி அரசலிங்கம்.

இது பாரிசவாதத்தை போன்றதும் பாரிசவாதத்தின் ஆபத்துக்காரணியும்ஆகும் எனினும் இதனால் ஏற்படும் குணங்குறிகள் சில நிமிடங்கள் முதல் மணித்தியாலங்கள் வரையே நீடிக்கும். அத்துடன் இது முழுமை யாக 24 மணித்தியாலத்தினுள் சாதாரண நிலைக்கு திரும்பி விடும்.

இது பாரிசவாத்தின் ஒரு முன் எச்சரிக்கையாக கருதப்படுவதால் இதன் ஆபத்தான நிலையை விளங்கிக் கொண்டு நோயாளிக்கு சரியான முறையில் சிகிச்சையளிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு ஏற்பட்ட ஒரு வருக்கு முழுமையான பாரிசவாதம் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகரிக்கிறது. இவ்வாறான 12 பேரில் ஒருவருக்கு ஒரு கிழமைக்குள் பாரிசவாதம் ஏற்படுகிறது. ஆகவே இந்நிலைமையை புறக்கணிக்காது சரியாக கவனிக்க வேண்டும்.

இதன் குணங்குறிகளாவன

  • முகத்தில் ஏற்படும் அமைப்பு மாற்றம் வாய் ஒரு பக்கமாக செல்லுதல் அல்லது கண் மூடிய நிலையில் இருத்தல்.
  • கைகளை இயக்க முடியாத நிலை.
  • பேச்சு தொடர்பான பிரச்சினைகள் (சரியாக பேச முடியாதமை மற்றும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் பேசாமை.)
  • கணிபார்வை திடீரென மங்குதல் அல்லது பார்வையற்றுப் போதல்.
  •  திடீரென அங்கங்கள் செயலிழந்து போதல் மற்றும் உணர்ச்சிஅற்றுப்போதல்.
  • திடீரென ஏற்பட்ட நினைவிழப்பு மற்றும் மகனநிலை குழப்பம்.
  •  திடீரென ஏற்படும் தலைச்சுற்று சம நிலையின்மை மற்றும் திடீரென விழுதல்

இவை பொதுவாக ஏனைய குணங்குறிகளுடன் சேர்ந்து ஏற்படும்.

இவற்றுள் ஏதாவது குணங்குறிகள் தென்படுமாயின் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவும். ஏனெ னில் இது பாரிசவாதத்திற்குரிய முதல் அறிகுறியாகக் கூட இருக்கலாம். நீங்களோ அல்லது உங்கள் உறவினரோ TLA தொடர்பான குணங்குறிகள் ஏற்கனவே ஏற்பட்டு வைத்தியரிடம் அறிவுரை பெறாது இருந்தால் வைத்திய ஆலோசனையை உடனடியாக பெற ஏற்பாடுகளை மேற் கொள்ளவும். ஆனால் குருதியில் குளுக் கோஸ் அளவு குறைதல், ஒற்றைத் தலை வலி, உட்காதுப்பிரச்சினைகள் மற்றும் வலிப்பு போன்ற நிலைமைகளும் மேற் குறிப்பிட்ட சில குணங்குறிகளை வெளிப்படுத்தலாம். எவ்வாறாயினும் வைத்தியரை நாடுவது சாலச்சிறந்தது.

குருதிக்குழாய்கள் தற்காலிகமாக ஏற்படும் அடைப்பானது மூளைக் கான குருதி வழங்கலை தடை செய்வதால் இது ஏற்படுகிறது. குருதிக்குழாயில் ஏற்படும் அடைப்பானது கரைவதாலோ அல்லது அவ்விடத்திலிருந்து நகர்வதாலோ இதன் குணங்குறிகள் தற்காலிகமானதாக அமைவதுடன் குணமடைந்தும் விடுகிறது.

பாரிசவாதத்தை போன்றே இதிலும் குருதிக்குழாய் அடைப்பானது சுருங்கிய மற்றும் கொழுப்புப்படிவுகளைக் கொண்ட குருதிக்குழாய்களிலேயே ஏற்படுகிறது. இருதயத்தில் அல்லது இருதய பெருநாடிகளில் ஏற்படும் குருதிக்கட்டிகளானது மூளை வரை நகர்ந்து செல்வதாலும் ஏற்படலாம். அரிதாக மூளையில் ஏற்படும் சிறு இரத்தக்கசிவும் இதை ஏற்படுத்தும்.

சிலவேளைகளில் TIA கண்ணைமட்டும்பாதிக்கலாம். இது கண்ணிற்கு இரத்தத்தை வழங்கும் குழாயில் ஏற்படும் அடைப்பால் தற்காலிகமாக பார்வை இழப்பை ஏற்படுத்தும். இந்த நோயாளிகளை பார்க்கும் வைத்தியர் நோய்நிலைமை பற்றி முழுமையாக விசாரிப்பது மற்றும் தேவையான உடற் பரிசோதனைகளை மேற்கொள்வது மட்டு மல்லாது எதிர்காலத்தில் பாரிசவாதம் வருவதற்கான சந்தர்ப்பங்கள் தொடர்பிலும் ஆராய்வார். அத்துடன் நோயாளியை விசேட வைத்திய நிபுணர்களான நரம்பியல் வைத்திய நிபுணர் அல்லது பாரிசவாதம் தொடர் பாக தேர்ச்சிபெற்ற பொது வைத்திய நிபுணர்களிடம் அனுப்பி வைப்பார்.

60 வயதிலும் அதிகமாக இருத்தல், 140/90mmHg ற்கும் அதிகமாக குருதி அமுக்கம் காணப்படல். ஒரு மணித்தியாலத் திற்கு அதிகமான நேரம் நீடித்த கை.கால்களின் இலக்கற்ற நிலை அல்லது பேச்சு தொடர்பான பிரச்சினை காணப்படுதல் மற்றும் நீரிழிவு நோயாளியாக இருத்தல் என்பவை TIA ஏற்பட்ட ஒருவருக்கு முழுமையான பாரிசவாதம் வருவதற்கான சந்தர்ப்பத்தை அதிகரிக்கும்.ஒரு கிழமைக்குள் இரண்டு TLAஏற்படல், ஒழுங்கற்ற இதயத் துடிப்பு காணப்படல், குருதி உறைதலை தடுப்பதற்கான மருந்துகளை பாவித்தல், மூளைக்குக் குருதி வழங்கும் நாடியில் சுருக்கம் காணப்படல் என்பன பாரிசவாதம் வருவதற்கான சந்தர்ப்பத்தை மேலும் அதிகரிக்கும்.

உங்களுக்கு TIA ஏற்பட்டால் சில மருந்துகள் தொடக்கப்படும் இவ்வாறான மருந்துகளை பாவிக்க முடியாத வேறு நோய்நிலைமை இல்லாதவிடத்து வாழ்நாள் முமுவதும் இம் மருந்துகள் பாவிக்கப்பட வேண்டும். மேலும் நீங்கள் ஆபத்துக் காரணிகள் (உயர் குருதி அமுக்கம், நீரிழிவு, புகைப்பிடித்தல் மற்றும் ஏனையவை) காணப்படின் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, அவற்றைக்கட்டுப் படுத்தும் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப் படுவீர்கள்.

விசேட வைத்திய நிபுணர் தேவையெனில் மூளையை படமெடுப்பதற்கான (CT or MRI Scan) ஒழுங்கை ஏற்படுத்தி தருவார். இவை பிரதானமாக ஏனைய மூளை தொடர்பான பிரச்சினைகள் இல்லை என்பதை உறுதிப்படுத்தவே செய்யப்படும். சிலர் தொடர்ச்சியான இருதயத்துடிப்பு பதிவிற்கோ அல்லது இருதயத்தை ஸ்கான் செய்வதற்கோ (Echocardiogram) அனுப்பப்படுவார்.

ஆரோக்கியமான உணவை உட்கொள்வதுடன் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழுங்கள். புகைப்பிடிப்பதை நிறுத்துங்கள். அதிக மதுபாவனையை நிறுத்துங்கள். கிரமமாக குருதியின் குளுக்கோஸ் அளவை பரிசோதியுங்கள். பொதுவாக TIA ஏற்பட்ட ஒருவர் ஒரு மாத காலத்திற்கு வாகனம் செலுத்துவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுவார். ஏனெனில் அவருக்கு மீண்டும். TIA ஏற்படும் சந்தர்ப்பம் அதிகமாக உள்ளதனால் ஆகும்.

TIA இன் பின்னர் சிலர் அதிக கோபமாக, கவலையாக அல்லது பயமுடையவர்களாக காணப்படலாம். இவற்றுக்கும் தகுந்த சிகிச்சை வழங்கப்பட வேண்டும். இது தமக்கு பாரிசவாதம் ஏற்பட்டால் அது தமது குடும்பம் வேலை மற்றும் உறவுகளை பாதிக்கும் என்ற பயத்தினால் ஏற்படுவதாகும். இவ்வாறான உணர்வுகள் இயற் கையானவை. எனினும் அவை எல்லை மீறும் பொழுது அல்லது தொடர்ந்து காணப்படும்போது வைத்திய உதவியை பெறுவது நல்லது.

வைத்தியர் ஜெயராசா சஞ்ஜெயன்,
வைத்தியர் கலாநிதி அஜினி அரசலிங்கம்.