பற்களை இழக்க காரணம் என்ன? Dr.வ.தேவானந்தம்.

வாயை சுகாதாரமாக வைத்திருக்க பற்களை நன்றாக பராமரிக்க வேண்டும். காலை எழுந்தவுடனும் இரவு நித்திரைக்கு செல்ல முன்பும் நாளுக்கு இருமுறை பல்துலக்க வேண்டும். ஒவ்வொருமுறை உணவு உண்ட பின்பும், நன்றாக அலசி வாயைக் கொப்பளிக்க வேண்டும். அச்சமயம் வெறும் தூரிகை கொண்டு சுத்தம் செய்வது நன்று.

பற்தூரிகை வாங்கும்போது சிறிய தலையுடைய மிருதுவான வகையாக வாங்குவது நன்று. அப்போதுதான் பற்களின் வெளி மற்றும் உட்புறத்தை இலகுவாக சுத்தம்செய்ய முடியும். நான்கு மாதத்துக்கொருமுறை அதை மாற்ற வேண்டும். ஒரு கடலையளவு (Pea Nut) பற்பசையைத் தூரிகை மேல் வைத்து நீரில் நனைத்து இருமுறை தட்டும் பொழுது பற்பசை தூரிகையினுள் செல்லும் பிறகு பற்களை மேலும் கீழுமாக துலக்க வேண்டும். பக்கவாட்டில் துலக்கினால் பற்களின் மிளிரி (Enamel) தேய்மானமடையும். வலது கை பழக்கமுள்ளவர்களுக்கு இடது பக்க மேல் பற்களும் இடதுகை பழக்கமுள்ளவர்களுக்கும் வலது பக்க மேல்பற்களும், முரசுக்கு அண்மையாக வெளிப்புறத்தில் தேய்மானமடையும். எவ்வளவு கூடுதலாக அழுத்தம் கொடுக்கின்றோமோ அவ்வளவுக்கு பல் தேய்மானமடையும். புளோரைட் சேர்ந்த பற்பசைகளை உபயோகிப்பது சாலச்சிறந்தது. புளோரைட் பற்சூத்தை வருவதைத் தடுக்கும்.

நாக்கை சுத்தம் செய்ய நாக்கு சத்திகரிப்பான்களை ( Tongue Cleaners) உபயோகிப்பது நன்று. வாய் கொப்பளிப்பான்களை ( Mouth Wash) மருத்துவரின் பரிந்துரையுடன் உபயோகியுங்கள். தொடர்ச்சியாக உபயோகித்தால் உடலுக்கு தேவையான வாயிலுள்ள நுண்ணுயிர்களை கொன்றுவிடலாம். சமையல் உப்பை தண்ணீரில் கலந்து வாய்கொப்பளிப்பது சாலச் சிறந்தது.

பற்பொடி, மணல் உமி, சாம்பல், கரித்தூள், செங்கல் தூள் பல்லின் மிளிரியைத் (Enamel) தேய்த்துவிடும். இதை விளித்து நம் சான்றோர்கள் இவ்வாறு பாடியுள்ளார்கள்.

கல்லும் மண்ணும் கரியுடனே பாளையும்
வல்லதொரு வைக்கோலும் வைத்திழுத்து – பல்லதனைத்
தேய்த்திடுவாராயின் வாராளே தேவி. வாய்த்திடுவான் மூதேவி வந்து.

இதில் எவ்வளவு உண்மையிருக்கின்றது பார்த்தீர்களா? தாயின் கருவறையில் இருக்கும் போது டெட்ராசைகிளின் மாத்திரைகளை உட்கொண்டால் (Tettracycline) பற்கள் நிறம் மாறித் தோன்றலாம். அதிக புளோரைட் ( Floride) குடிக்கும் நீரில் இருந்தால் நிறம்மாறி உருவ அமைப்பும் மாறலாம். Vit.D. குறைபாடு பல்லின் வன்மையைப் பாதிக்கலாம். (Hypoplasia) இவை A, C, D கற்ப காலத்தில் நிச்சயமாக பல்லுருவாக்கத்திற்கு தேவைப்படும். எனவே பற்களைக் கருவறையிலிருந்து கல்லறைவரை பாதுகாக்க வேண்டும்.

பற்கள் வாயில் முறைத்தபின் கல்சியம் மாத்திரைகள் பாவிப்பதால் எந்திதமான பிரயோசனமும் இல்லை. கல்சியம் மாத்திரைகள் குடலினால் உறிஞ்சப்பட்டு இரத்தத்தில் கலந்தாலும் எனாமலில் இரத்த நாளங்கள் இல்லாமை எனாமலினுள் செல்லாது. பல் உருவாகிக் கொண்டிருக்கும் காலத்திலேயே பற்கள் கல்சியக் கனிமத்தை உள்வாங்க முடியும். ( பதின்மூன்று வயது வரை) வாயில் முளைத்த பற்களில் கல்சியம் படிய வேண்டுமானால் உமிழ் நீரிழிருந்து மட்டுமே படியமுடியும்.

(Topicalca absortion) மருத்துவரின் ஆலோசனைப் படியேபல் உருவாகும் காலத்தில் கல்சியம் பயன்படுத்துங்கள்.

நீங்கள் பற்களை இழப்பதற்கு முக்கிய காரணம் பற்சூத்தையும் முரசு வருத்தமுமே. நீங்கள் மேற்கூறிய முறையில் வாய் சுகாதாரத்தை பேணினால் வாழ்நாள் முழுக்க சொந்தப் பற்களுடன் வாழலாம். பற்கள் இருக்கும்வரை தான் வாய்விட்டுச் சிரிக்க முடியும். நீங்கள் ஒவ்வொருமுறை வாய்விட்டு சிரிக்கும்பொழுதும் ஸ்டீரொயிட் இரசாயன பொருள் இரத்தத்தில் குறைகின்றது. இந்த வேதிப் பொருள்தான் வலி (Pain) உண்டாவதற்கு அடிப்படைக் காரணம். இதன் வேகம் கட்டுப்படும்போது நோயின் வேகமும் குறையும். வாய் சுகாதாரத்தைப் பேணி வாய்விட்டுச் சிரியுங்கள் நோய்விட்டுப் போகும்.

Dr.வ.தேவானந்தம்.
பல் மருத்துவர்