குளிசை மருந்துகள் செயற்படாத நிலையில் இன்சுலின் மருந்தை ஆரம்பிப்பதே சிறந்ததாகும்.

கேள்வி – எனது வயது 62 ஆகும். எனக்கு கடந்த 16 வருடங்களாக நீரிழிவு நோய் உள்ளது. எனது நீரிழிவு நோய்க்கு மெற்போமின், கிளிக்கிளசயிட் மற்றும் சிற்றகிளிப்ரின் ஆகிய மருந்துகளைப் பயன்படுத்தி வருகின்றேன். எனது குளுக்கோஸின் அளவு குருதியில் அதிகமாக இருப்பதாக குடும்ப வைத்தியர் கூறியிருந்தார். இதனைக் கட்டுப்படுத்துவதற்கு இன்சுலினை ஆரம்பிப்பதே சிறந்தது அவர் கூறுகின்றார். இது பற்றி விளக்கிக் கூறவும்?

பதில் – நீரிழிவு ( சலரோக) நோயைக் கட்டுப்பாடட்டினுள் வைத்திருப்பதற்கு சிறந்த உணவுக் கட்டுப்பாடும் மருந்துகளைக் கிரமமான முறையில் உள்ளேடுத்தலும் அவசியமாகும். உங்களைப் போன்ற நீண்டகாலமாக நீரிழிவுநோயுள்ளவர்களுக்கு காலப்போக்கில் குளிசை மருந்துகள் செயற்படாத நிலை ( Oral Hypogly caemic drugs failure) ஏற்பட நேரிடுகின்றது.. எனவே அவ்வாறான சந்தர்ப்பத்தில் இன்சுலின் மருந்தையே பயன்படுத்த வேண்டியேற்படுகின்றது. எனவே உங்களின் குடும்ப வைத்தியரின் ஆலோசனைப் படி இன்சுலின் மருந்தை ஆரம்பிப்பதே சிறந்ததாகும். இவ்வாறு இன்சுலின் மருந்தை ஆரம்பிக்கும்போது நாளொன்றுக்கு ஒருமுறை அல்லது இருமுறை பயன்படுத்துகின்ற இன்சுலினனை உங்கள் வைத்தியரின் ஆலோசனைப்படி பயன்படுத்த முடியும். இது தொடர்பான மேலதிக விளக்கங்களையும் அறிவுரைகளையும் உங்கள் வைத்தியரிடமிருந்து பெற்றுக் கொள்ளமுடியும்.

மருத்துவர் M.அரவிந்தன் நீரிழிவு அகஞ்சுரக்கும் தொகுதி சிறப்பு வைத்திய நிபுணர், யாழ்போதனா வைத்தியசாலை.