மதநூல்களிலே காலத்துக்கு ஒவ்வாத பிழையான பல கருத்துக்களும் கலந்து காணப்படுகின்றனவா? சி. சிவன்சுதன் வைத்திய நிபுணர்

எமது அடுத்த சந்ததியினருக்கு மத நம்பிக்கையும் அதிலிருக்கும் பற்றுறுதியும் குறைவடைந்து செல்வது ஒரு வேதனையான விடயம். இதற்கு காரணம் என்ன?. மதநூல்களிலே காலத்துக்கு ஒவ்வாத பிழையான பல கருத்துக்களும் கலந்து காணப்படுகின்றனவா? என்று சிந்திக்க வேண்டிய தேவை இருக்கின்றது. உதாரணமாக சிறுத்தொண்டநாயனார் தனது 5 வயது பிள்ளையை வெட்டி ஒரு துறவிக்கு கறிசமைக்கிறார். அந்தப் பச்சிளம் பாலகனை கொல்லும் உரிமையை அவருக்கு யார் கொடுத்தது. மனித உரிமைகள் பற்றியும் சிறுவர் துஷ்பிரயோகம் பற்றியும் பேசப்படும் இந்தக் காலத்திலே இந்தக் கதையை எவரது மனம் ஏற்றுக்கொள்ளும்.
மனிதனை இறைவன் பகுத்தறிவுடன் படைத்திருக்கிறான் எனவே மதக்கருத்துகளும் மனிதனின் பகுத்தறிவால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தால் மட்டுமே அவை மனிதனை வழிநடத்தும். எனவே மதக்கருத்துக்களும் விஞ்ஞானமயப்படுத்தப்படவேண்டும் என்ற ஒரு தேவை எழுந்திருக்கின்றது. சொல்லப்படும் ஒரு கருத்தை எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் மனம் ஏற்றுக்கொள்ளமாட்டாது. ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கவும் முடியாது. காரணம் அப்படிப்பட்ட ஒரு மனதுடன்தான்கடவுள் மனிதனைப் படைத்திருக்கிறான். எதற்கும் காரணத்தையும் விளக்கத்தையும் ஆதாரத்தையும் தேடும் மூளைதான் மனிதனுக்கு அமயப்பெற்றிருக்கிறது.

கடவுள் மனிதனுக்கு பகுத்தறிவை கொடுத்தது அதனை பத்திரமாக வைத்திருப்பதற்கு அல்ல. மதநூல்களில் சொல்லப்பட்டிருக்கும் விடயங்கள் சம்பந்தமாக அலசுவது தெய்வக்குற்றம் ஆகாது. பகுத்தறிவை பாவிப்பது பாவமாகாது. மதநூல்களில் உள்ள காலத்திற்கு ஒவ்வாத கருத்துக்களை களைவது அதன் அடிப்படை கருத்துக்களும் விஞ்ஞானவடிவம் கொடுப்பதும் தவறான செயலாகாது.

சிந்துவெளியிலே இருந்த வழிபாட்டு முறைகளுக்கும் வேதகாலத்து வழிபாட்டு முறைகளுக்கும் இடையே பெரும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. உபநிடத காலத்திலே சமயக்கருத்துக்கள் மீள ஒழுங்கமைக்பட்டிருக்கின்றன. சங்க காலத்திலே மதக்கருத்துக்கள் மீளாய்வு செய்யப்பட்டு பல விடயங்கள் புதிதாக சேர்க்கப்பட்டு தொகுக்கப்பட்டிருக்கின்றன. எனவே காலத்திற்கு காலம் காலத்திற்கு ஏற்றாற் போல மீளாய்வு செய்யப்பட்டுவரும் சமயக்கருத்துக்கள் தற்போதய காலத்திற்கு ஏற்றவகையிலும் மிளாய்வு செய்யப்பட்டு விஞ்ஞானமயப் படுத்தப்படுவது தவறான செயலாகாது.

கடவுள் எமது சிந்தனைக்கு அப்பாற்பட்ட உண்மையான பெரும் சக்தி. அதில் சந்தேகமில்லை ஆனால் அவர் சம்பந்தமான விடயங்களை நூல்களாகவும் இலக்கியங்களாகவும் பதிர்ந்து வைத்தவர்கள் மனிதர்களே. எனவே அவற்றில் இருக்கும் சில மாறுபாடுகள் எமது மதநம்பிக்கைகளை குலைப்பதற்கு இடம்கொடுக்கமுடியாது. மதநூல்களில் இருக்கும் அரிய மருத்துவக் கருத்துக்கள் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்படவேண்டிய தேவையும் இருக்கிறது.

சி. சிவன்சுதன் வைத்திய நிபுணர்