நீங்கள் புகைப்பதற்கு விரும்பினால்! – DR.சி.சிவன்சுதன்

புகைப்பது ஒவ்வொருவரினதும் தனி மனித உரிமை. ஒருவனைப் புகைக்க வேண்டாம் என்று வற்புறுத்துவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. புகைப்பதை நிறுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளலாம் அவ்வளவு தான்.

நீங்கள் புகைக்க விரும்பினால் சன நடமாட்டமற்ற நல்ல காற்றோட்டமான இடத்திற்குச் சென்று புகைத்துக் கொள்ளுங்கள்.

இதன் மூலம் உங்கள் குடும்பத்தையும் பிள்ளைகளையும் மற்றவர்களையும் நீங்கள் வெளிவிடும் புகையின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

ஏற்படும் பாதிப்புக்கள் உங்களுடன் மட்டும் மட்டுப்படுத்தப்படும். மற்றவர்கள் தப்பித்துக் கொள்வார்கள். ஏனையோர்களை நோயாளியாக்கி அவர்களின் வாழ்வை சிதைக்கும் பாவத்திலிருந்து நீங்கள் தப்பிக் கொள்ள முடியும்.

அத்துடன் புகைக்கும் ஒருவருக்கு தனது பிள்ளைகளை புகைக்க வேண்டாம் என்று வற்புறுத்தும் தார்மீக உரிமை
இல்லை.

புகைத்தலுக்கு அடிமையாகி இருக்கும் ஒருவர் அந்த அடிமைத்தன்மையினை உடைத்துக் கொண்டு வெளியே வருவாராக இருந்தால், புகைக்கும் பழக்கத்தை முற்றிலும் கைவிடுவாராக இருந்தால் அந்த பழக்கத்தினால் உடலில் ஏற்பட்ட தாக்கங்களில் பெரும் பகுதி திருந்தி வருவதற்கான சந்தர்ப்பம் இருக்கிறது.

புகைக்கும் ஒவ்வொருவரும் இப்பழக்கத்திலிருந்து வெளியே வர உண்மையாக விருப்பப்பட்டால் அதை நடைமுறைப்படுத்துவது கஷ்டமாக இருக்காது.

அதனை நடைமுறைப்படுத்த முயலும் பொழுது சில வேண்டத்தகாத அறிகுறிகள்தோன்றினால் வைத்தியரின் உதவியை நாட முடியும்.

புகைக்கும் பழக்கமுடைய ஒவ்வொருவரையும் சந்திக்கும் பொழுது அவரை இந்தப் படுகுழியிலிருந்து தூக்கிவிட நாம் கை கொடுப்போம். அவர்களுக்குப் பொருத்தமான அறிவுரைகளை வழங்கு வோம்.

தம்மையும் அழித்து தமது குடும்பத்தின் பொருளாதாரத்தையும் சேர்த்து அழித்து தம்மைச் சுற்றவுள்ளவர்களின்
சுகாதாரத்தையும் சீர்குலைக்கும் மனோ நிலை கொண்ட புகைப்பவர்களை சந்தித்தால் அதனை நிறுத்திக் கொள்ளுமாறு அவர்களிடம் ஒரு வேண்டுகோளை விடுப்போம்.

DR.சி.சிவன்சுதன்
பொது வைத்திய நிபுணர்.