தம் உயிரைப் பணயம் வைத்து ஒரு நோயாளி பொய் சொல்லத் துணிவதன் காரணம் என்ன? சி.சிவன்சுதன்

சிகிச்சைக்காகச் சொல்லும் பல பொதுமக்கள் மருத்துவத்துறையினருக்குப் பல பிழையான பொய்யான தகவல்களை வழங்கிவருவது மிகவும் வேதனையானதும் ஆபத்தானதுமான விடயமாக இருந்துவருகின்றது.

கொடுக்கப்படும் மருந்துகளைச் சரிவரப்பாவிக்காத பொழுதும் பாவித்துவருவதாகச் சொல்லும் பொய்கள், பழைய மருத்துவத் தகவல்களை மறைத்துச் சொல்லும் பொய்கள், நல்ல மருந்து கிடைக்கும் என்று நம்பி அறிகுறிகளைக்கூட்டிச் சொல்லும் பொய்கள், பல மருத்துவர்கள் கொடுக்கும் மருந்துகளைத் தகுந்த ஆலோசனையின்றிக் கலந்து பாவித்துக்கொண்டு உண்மை நிலையை மறைக்கச் சொல்லும் பொய்கள் எனப் பொய்களின் வகைகள் பல்கிப்பெருகி மருத்துவத்துறை எங்கும் வியாபித்து நீக்கமற நிறைந்திருக்கின்றன.

ஒவ்வொருவரும் மருத்துவரைச் சந்திக்கும்பொழுது தான் பாவித்துக்கொண்டிருக்கும் மருந்துகளின் சரியான உண்மையான விவரங்களை மருத்துவருக்குத் தெரியப்படுத்தவேண்டும். ஒவ்வொரு மருந்தும் எவ்வாறு வேலைசெய்கிறது என்பதைக் கணிப்பிட்டே தொடர்ந்து வழங்கப்படவேண்டிய மருந்துகளும் சிகிச்சை முறைகளும் தீர்மானிக்கப்படுகின்றன. எனவே மருந்துகளைக் கூட்டிக் குறைத்து அல்லது மாற்றிப் பாவித்துவிட்டு ஒழுங்காக மருந்து எடுப்பதாகச் சொல்லும் பொய் உண்மையிலேயே மிகவும் ஆபத்தானது.

முன்னைய மருத்துவத் தகவல்கள், முன்பு இருந்த நோய்கள் என்பன ஒருவரின் தற்போதைய சிகிச்சை முறைகளைத் தீர்மானிப்பதற்கு முக்கியமானவை. இதைத் தெரிந்திருந்தும் பலர் பழைய மருத்துவத் தகவல்களை மறைக்க முயல்வதன் காரணம் என்ன?

உண்மையை வரவழைக்க வைத்தியர்கள் சட்டத்தரணிகள் போலவும், துப்புத்துலக்கும் அதிகாரிகள் போலவும் வாதாடித்தான் வைத்தியம் செய்ய வேண்டும் என்ற துர்ப்பாக்கிய நிலையே இங்கு நிலவுகின்றது. துப்புக்கள் துலங்காத பொழுது சில சமயம் துயரமான சம்பவங்கள் நோயாளர்களுக்கு நிகழ்ந்துவிடுகின்றன.

தம் உயிரைப் பணயம் வைத்து ஒரு நோயாளி பொய் சொல்லத் துணிவதன் காரணம் என்ன? அவர்களைப் பொய் பேச வைப்பவர்கள் யார்? இதற்குப் பதில் மிகவும் தெளிவானது துல்லியமானது.

மருத்துவர்களும் மருத்துவத்துறை சார்ந்தவர்களுமே நோயாளர்களைப் பொய் சொல்லவேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்குள் தள்ளிவிடுகிறார்கள். இதற்கான காரணங்களைப் பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்.

உண்மையைச் சொன்னால் வைத்தியர் கோபித்துக்கொள்வார் அல்லது பேசுவார் என்ற பயம் காரணமாகப் பலர் பொய் சொல்லுகிறார்கள். உயிரைப் பணயம் வைக்கும் அளவுக்கு வைத்தியரின் பேச்சுக் கடுமையானதுதானா?
தாம் சொல்லும் பொய் எவ்வளவு ஆபத்தானது என்று தெரியாமல் பலர் பொய் சொல்கிறார்கள். அதாவது நோய் பற்றிய போதுமான அளவு அறிவு இன்மையால் சொல்லப்படும் பொய் நோயாளர்களுக்கு இது சம்பந்தமான அறிவைப் புகட்டவேண்டியது மருத்துவக் குழுவின் கடமையே. எனவே இதற்கான பொறுப்பையும் மருத்துவக் குழுவே ஏற்கவேண்டி இருக்கிறது.
உண்மை நிலையை மனம்விட்டுப் பேசும் சூழ்நிலை வைத்தியசாலைகளில் இல்லை. சொல்லப்படும் உண்மை பலருக்குத் தெரிந்துவிடும் என்ற மனப்பயம். இதன் இரகசியத்தன்மை பேணப்படுமா என்ற ஏக்கம். இதன் காரணமாக உண்மையை மறைக்கவேண்டிய நிலை ஏற்படுகின்றது.
பதற்றம் அல்லது பயம் காரணமாக ஏற்படும் தடுமாற்றத்தினால் சொல்லப்படும் பொய்கள் நோயாளர்களைப் பதற்றப்படுத்தும் குற்றமும் மருத்துவக் குழுமீதே விழுகிறது.

மருத்துவர்களோ, தாதியர்களோ அல்லது வைத்தியசாலை உத்தியோகத்தர்களோ நோயாளர்களுடன் கோபித்துக்கொள்ள முடியாது. அவ்வாறு செய்தால் அது தவறானது என்பதில் சந்தேகம் இல்லை. எனவே நோயாளர்கள் பயமின்றி, பதற்றமின்றி உண்மையான மருத்துவத் தகவல்களை சொல்ல முன்வர வேண்டும். நோயாளர்களில் ஒருவர் தனிமையில் வைத்தியருடன் கதைக்க விரும்பினால் அதற்கான சந்தர்ப்பத்தைக் கேட்டுப் பெற்றுக்கொண்டு உண்மையான தகவல்களை மருத்துவருடன் பகிர்ந்து கொள்ளலாம். இதன் இரகசியத் தன்மை பேணப்படும்.

சில உண்மைகளைப் பேசுவதால் நோயாளர்களுக்கு சில சங்கடங்கள் ஏற்படலாம். ஆனால் அரிச்சந்திரன் உண்மையை மட்டும் பேசியதால் ஏற்பட்ட சங்கடங்கள் போன்று பாரதூரமாக இருக்காது. எனவே உண்மையை மறைத்து உயிரைப் பணயம் வைப்பது சரியானதா எனச் சிந்திக்க வேண்டும்.

தவறுகளைத் தவிர்க்க முயல்வோம். பொய்யாமொழிப்புலவரின் வழிநின்று பொய் பேசுவதைத் தவிர்ப்போம்.

சி.சிவன்சுதன்
மருத்துவ நிபுணர்.