நாம் நாமாக வாழ – Dr.சி.சிவன்சுதன்

உள்ளத்தில் ஊற்றெடுக்கும் உண்மையான உணர்வலைகளும் உறவுகளும் மனிதத்துவப் பண்புகளும் உறங்கிப் போனது ஏன்? ஒருமாயையான போலித்தனங்கள் சேர்ந்த இயந்திர இயங்கு நிலையினுள் சிக்கி மனிதன் ஒருசிக்கலான வாழ்க்கை முறைக்குள் சிக்குண்டு போக காரணம் என்ன?

வாழ்க்கை செயற்கைத்தனமாகி‚இயந்திரமயமாகி‚ உணவுவகைகள் கூட பொதிகளிலும் பேணிகளிலும் வருகின்ற இரசாயன உணவுகளாக மாறி‚ பானங்கள் எல்லாம் போத்தலில் வருகின்ற செயற்கை சுவையூட்டிகளின் கலவையாகி எமது உடற்பயிற்சிகள் கூட இயந்திரங்களில் என்று ஆகி‚ எங்கள் புன்னகைகளும் நன்றி தெரிவிப்புகளும் உதட்டளவில் வரும் செயற்கை உபசாரமாக மாறி‚ இயற்கையிலிருந்து நாம் அந்நியப்பட்டு சென்று கொண்டிருக்கின்றோம்.

இயற்கையான காற்றுக்கு கதவடைப்பு செய்து பூட்டிய அறையினுள் செயற்கை மின்விசிறியை சுற்றவிட்டு‚ சுற்றிவரும் அசுத்தக்காற்றை சுவாசித்து நோயை விலைகொடுத்து வாங்கும் வில்லங்க வாழ்வு அரங்கேறிக்கொண்டிருக்கிறது.

எமது குடும்ப ஊர் மொழிப்பற்றுக்கள் அற்றுப் போய் உணர்வுகள் அற்ற ரோபோக்கள் போல வாழ்வை ஒட்ட முளைத் துக்கொண்டிருக்கின்றோம். நாம் மீண்டும் இயற்கையான இயல்பான வாழ்வை நோக்கி அடியெடுத்து
வைப்பது எப்படி? எது‚ எவை உண்மையில் மனிதனுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் அமைதியைக் கொடுக்கும்.

கலப்படமற்ற இயற்கையான உணவுவகைகள்‚ நோயைத் தடுக்கவும்‚ நோயைத்தீர்க்கவும் வல்லவை. ஊர்க்கோழி முட்டை‚ இளநீர்‚ இயற்கையான உணவு உண்ணும் பசுவினுடைய பால்‚ மோர்‚ பச்சையிலை உண்ணும் ஆட்டின் பால்‚ இயற்கை உரமிட்டு மருந்து தெளிக்காமல் வளர்க்கப்பட்ட மரக்கறி வகைகள்‚ ஊர்க்கோழி இறைச்சி‚ இயற்கையாக வளரும் அகத்தி‚ சண்டி‚ முருங்கை‚ தவசிமுருங்கை போன்றவற்றின் இலைவகைகள் வாழைப்பொத்தி‚ தானாகப் பழுத்த பழவகைகள்‚ கடலிலே பிடித்த உடன் மீன் வகைகள்‚ இறால் தேசிக்காய்‚ சுண்டங்கத்தரி என எத்தனை இனிமையான‚ இயற்கையான‚ இலகுவில் கிடைக்கக்கூடிய உணவு வகைகள் எம்மத்தியில் உள்ளன. உணவிலே இவற்றிற்கு முன்னுரிமை கொடுப்போம். இயற்கையுடன் ஒன்றி உணர்வுகளை மதித்து செயற்கைத்தனம் இல்லாமல் வாழும் ஏனைய உயிரினங்களைப் பார்த்துப் படிப்பதற்கு எமக்கு ஏராளம் இருக்கிறது. அவற்றைப் போல ஓய்வுக்கும் ஒன்று கூடல்களுக்கும் நேரம் ஒதுக்குவோம். ஏனையவர்களின் உணர்வுகளையும் புரிந்து மதித்து எம்மை சூழ ஒரு ஆரோக்கியமான மகிழ்ச்சியான சூழ்நிலையை கட்டி எழுப்புவோம்.

நாம் ஒவ்வொருவரும் இயற்கையோடு ஒன்றி நாமாக வாழக் கற்றுக் கொள்வோம். நாம் இன்னொருவர் போல வாழ முயற்சிக்க வேண்டிய அவசியமில்லை. நாம் நாமாக வாழும் வாழ்க்கை அர்த்தமுடையதாகவும் செயற்கைத்தனம் அற்றதாகவும் அமையும்.


Dr.சி.சிவன்சுதன்

பொது வைத்திய நிபுணர்.