சுத்தமான பாதுகாப்பான உணவுகளை உட்கொண்டு ஆரோக்கியமாக வாழ்வோம்

 • எமது சுற்றுப்புறத்தில் நோய்களை உருவாக்கக் கூடிய சில நுண்ணங்கிகள் காணப்படுகின்றன.
 • நுண்ணங்களினால் உணவு பழுதடைந்தால் அவை உணவின் தரத்தை குறைப்பதுடன் உணவு நஞ்சாவதற்கும்காரணமாகின்றது.
 • உணவின் தோற்றத்தை சிலநுண்ணங்கிகள் மாற்றிவிடுகின்றன.
 • உணவின் தரம் குறைவடைவதை நிறம்‚ சுவை மற்றும் உணவின் உள்ளடக்கம் போன்றவற்றில் மாற்றம் ஏற்படுவதை வைத்து இலகுவில் அடையாளம் காணலாம்.

எல்லா சந்தர்ப்பத்திலும் உணவு பழுதடைந்துள்ளது என்பதை சுவை‚ மணம் மற்றும் தோற்றம் போன்றவற்றை மட்டும் வைத்து கூற முடியாது.

அத்துடன் அவை நோய்களை உருவாக்குமோ உருவாக்காதோ என்பதையும் கூற முடியாது. எனவே சுத்தமான பாதுகாப்பான உணவுகளை உட்கொள்வதற்கு நாம் முயற்சிக்கவேண்டும்.

சுத்தமான உணவை எவ்வாறு தயாரிப்பது

 • எப்பொழுதும் சமையலறையும் சுற்றுப்புறமும் துப்புரவாக இருக்கவேண்டும்.  அத்துடன் செல்லப் பிராணிகள் பூச்சிகள் மற்றும் கொறித்துத் தின்னும் பிராணிகள் இல்லாது இருக்கவேண்டும்.
 • நோய்களை உருவாக்குகின்ற நோய்க்கிருமிகள் உற்பத்தியாவதற்கும் பெருகுவதற்கும் காரணமான ஈக்கள் மற்றும் ஏனைய பூச்சிகள் வராதவகையிலும் சமையலறைக் கழிவுகளை ஒழுங்காக வெளியேற்றவேண்டும்.
 • எல்லாமேற்பரப்புக்கள் சுத்தம் செய்யும் துணிகள் பாத்திரங்கள் விசேடமாக வெட்டும் பலகைகள் மற்றும் கத்திகள் போன்றவற்றை பாவித்தபின் நன்றாக சுத்தம் செய்யவேண்டும். மீன்‚ கோழி இறைச்சி மற்றும் இறைச்சிகள் போன்றவற்றை தயாரிக்கும் போதுமிகவும் துப்புரவாக இருப்பது முக்கியமானதாகும்.
 • உணவுகளை தயாரிப்பவர்கள் சுத்தமான ஆடைகளை அணிந்திருத்தல் வேண்டும் மற்றும் காயங்கள்‚ சீழ்புண்கள் இல்லாமல் இருத்தல் வேண்டும். நகங்களை குட்டை யாக வெட்டி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
 • உணவுகளை தயாரிப்பதற்கு முன்பு உண்பதற்கு முன்பு கைகளை சவர்க்காரமிட்டு நன்றாக கழுவுதல் வேண்டும்.
 • மலசலகூடப் பாவனையின் பின்னர் கைகளை சவர்க்காரம் இட்டு தண்ணீரினால் நன்றாக கழுவுதல் வேண்டும்.
 • சமைத்த பாத்திரங்களை நன்றாக  கழுவிக் காயவைக்க வேண்டும். ஏனெனில் கிருமிகள் ஈரலிப்பில் வளரக் கூடியவை. மட்பாண்டங்களை நன்றாக காயவைக்க வேண்டும். இல்லையேல் பங்கசுக்கள் வளர்வதுடன் அடுத்தவேளை உணவுகளை இந்த பாத்திரங்களில் தயாரிக்கும் போது உணவுகள் பழுதடை யக் கூடும்.