முதன்முறையாக ஒருவருக்கு வலிப்பு வந்தி ருந்தால் அவரை எவ்வாறு அணுகி ஆராய வேண்டும்? Dr.அஜந்தா கேசவராஜ்

 1. அந்த வலிப்புவர ஏதுவாக இருக்கக்கூடிய காரணிகள் பற்றி ஆராய வேண்டும். காய்ச்சல் (குறிப்பாக சிறு பிள்ளைகளிற்கு 1-6 வயதுவரை), நித்திரையின்மை, உரிய நேரத்தில் உணவு உண்ணாமை,
 2. வலிப்பு எவ்வாறு தொடங்கி-எவ்வாறு முடிகின்றது என்பது பற்றி ஆராயவேண்டும்.
   1. ஆரம்பவலிப்பின் அறிகுறிகள் (aura)
    • கைகள்/கால்கள் இறுக்கமடைதல்
    • தலை/கண்கள் ஒருதிசையை நோக்கித் திரும்பிச் செல்லுதல்
    • கைகள்/கால்கள் உதறுதல்
    • வெறுமனே ஒர் இடத்தை பார்த்தல்
    • வேறுபட்டு கதைத்தல்
    • செய்யும் செயல்களில் தடைஏற்படுதல்
    • வாயைச்சப்புதல்
    • கைகளால் ஆடைகளைப் பிசைதல்
    • மூக்கைத் துடைத்தல்
    • காரணமின்றி நடந்து திரிதல்
   2. வலிப்பின் போதுகவனிக்கவேண்டியவைகள்
    • அறிவிழத்தல்
    • கைகள்/கால்கள் இரண்டும் உதறல் எடுத்தல்
   3.  வலிப்பின் பின்னால் இடம்பெறும் நிகழ்வுகள் பற்றி அறிதல்
    • மயக்கமடைந்தநிலையில் இருத்தல்
    • வாந்திஎடுத்தல்
    • தலையிடி
    • கதைப்பதில் தடுமாற்றம் /பேச்சு அற்று இருத்தல்
    • உடலின் ஒருபகுதிசெயலற்று இருத்தல்

சிறுவயதில் குறிப்பாக 1-8 வயதினருக்கு வரும் காய்ச்சலுடனான வலிப்பு பாரதுரமானதா?

இல்லை.இதைக் காய்ச்சல் வலிப்பு என்றே கூறுவோம். இது அநேகமாக 6 வயதிற்கு பின் ஏற்படமாட்டாது. உடலின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இதனைமுழுமையாகக் கட்டுப்படுத்தலாம்.

வலிப்புநோயினால் அதிகளவில் பாதிக்கப்பட்ட வர்களது உடல் அமைப்பில் காணப்படும் நோயின் அறிகுறிகள் எவை?

 • தலையின் சுற்றளவு சிறிதாக இருக்கலாம்.
 • தோலின் கீழ் கட்டிகள் தென்படலாம் அல்லது தோல் வெளிறிக் காணப்படும்.
 • கண்கள்/காதுகளில் குறைபாடுகள் இருக்கலாம்.
 • முகத்தின் அமைப்பில் மாற்றம் இருக்கலாம்

வைத்தியருக்கு நோய் பற்றி அறிவிக்க நோயாள ரின் பாதுகாவலரான நீங்கள் எவ்வாறு உதவி புரிய வேண்டும்?

 1. கேள்வி இல. 3 இன் விடயங்களை கவனமாக உற்றுநோக்கி வைத்தியரிடம் தெரிவிக்கலாம்.
 2. வலிப்பை அதன் ஆரம்ப நிகழ்வில் இருந்து முடியும் வரை தொலைபேசிகாணொலியில் பதிந்துவைத்தியரிடம் காட்டலாம்.
 3. வலிப்புநோய் அடிக்கடி வருமாயின் உடனடியாக மருத்துவ உதவிக்காக அருகில் உள்ள வைத்திய சாலைக்கு எடுத்துவரலாம்.

சிறு பிள்ளைகளிற்கு வலிப்பு ஏற்படின் எவ்வகை யான முக்கிய தகவல்களை வைத்தியரிடம் தெரிவிக்கவேண்டும்?

 1. கர்ப்ப காலத்தில் தாய்க்கு ஏற்பட்டநோய்கள்
 2. தலையில் அடிபடுதலும் அதன் தொடர்ச்சியானதுமானவிடயங்கள்
  1. மயக்கமடைதல்
  2. வாந்தி எடுத்தல்
  3. வலிப்பு
  4. ஞாபகசக்தியின்மை
 3. குடும்பத்தின் ஏனைய அங்கத்தவர்களின் வலிப்புநோய் பற்றிய தகவல்கள்.
 4. குழந்தைகளின் வளர்ச்சிப் படிகளில் காணப்படும் ஏதாவதுபின்னடை வகள்.
 5. தோலில் ஏற்படும் மாற்றங்கள் (தோலில் கட்டிகள் ஏற்படுதல்/ தோலின் நிறம் குன்றுதல்)

வலிப்பு நோயாளிக்கு அடிக்கடி வலிப்பு வருமாயின் என்ன காரணங்களை இனங்காணுதல் முக்கியமானது?

 1. முன்னர் இனங்காணப் பட்டவலிப்பு நோயின் வகை தவறானதாக இருக்கலாம்.
 2. இதுஒருபோலியானவலிப்பாக இருக்கலாம்.
 3. உடல் அனுசேபத்துடன் தொடர்பான நோயாகவும் இருக்கலாம்.
 4. வலிப்பு மாத்திரைகள் செயலிழந்திருக்கலாம்.
 5. தகாத மருந்து வழங்கப்பட்டிருக்கலாம்.

எனது பிள்ளைகளுக்கு காக்கை வலிப்பு இருந்தால் என்ன செய்வது?

காக்கை வலிப்பிற்கு முன்னர் குறிப்பிடப்பட்ட குணங் குறிகள் இருக்குமாயின் உடனடியாக தகுந்த வைத்தியரிடம் ஆலோசனை பெறுதல் இன்றிய மையாதது.

ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டு விட்டால் எவ்வாறு அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்?

 1. வலிப்பு வந்தமைக்கான காரணிகளை ஆராய வேண்டும்.
 2. வலிப்பானது 30 நிமிடங்கள் வரைநீடிக்குமாயின் வலிப்பிற்கான மருந்துகளை உபயோகிக்க வேண்டி ஏற்படலாம்.
 3. தலைப்படம், தலைப்பட்டி என்பன தேவைப்படின் எடுக்க வேண்டி ஏற்படும்.

ஒருமுறை ஏற்பட்ட வலிப்பு மீண்டும் ஏற்படுமா என்பதை எவ்வாறு இனங்காணலாம்?

இதன் போது சோதிக்கப்படும் தலைப்பட்டி அல்லது தலைப்படம் என்பவை சாதாரணமானவையாயின் அந்நோயாளிக்கு மீண்டும் வலிப்பு ஏற்படாமல் இருப்பதற்கான வாய்ப்புக்கள் ஏறத்தாழ 70% ஆக இருக்கலாம்.

காக்கை வலிப்பை முற்றாககுணப்படுத்த முடியுமா?

வேறுபட்ட மருந்து மாத்திரைகளால் 75% மான வலிப்பு நோயாளிகளிற்கும் சத்திர சிகிச்சை மற்றும் விசேட தூண்டல் முறைகள் மூலம் மேலும் 10% மான நோயாளிகளுக்கும் வலிப்பினை குணப்படுத்த முடியும். இதன்படி பார்க்கையில் ஒட்டுமொத்தமாக 85-90% மான நோயைக் குணப்படுத்த வாய்ப்புக்கள் உள்ளன.

எல்லா வலிப்புக்களிற்கும் மருத்துவ சிகிச்சை அவசியமானதா?

இல்லை பின்வரும் வலிப்பு வகைகளிற்கு பொதுவாக மருந்து மாத்திரைகள் தேவையில்லை

 • காய்ச்சலுடனான வலிப்பு
 • நீண்டகாலத்திற்கு ஒருமுறை ஏற்படும் வலிப்பு

காக்கை வலிப்புள்ள பிள்ளைகள் சாதாரண பிள்ளை களைப் போன்று கல்வி கற்க முடியுமா?

ஆம்,இவர்கள் சாதாரண பிள்ளைகளைப் போன்று விளையாடவும் கல்வி கற்கவும் முடியும். இவர்களை சாதாரண பிள்ளைகளைப் போன்று எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி விளையாட்டிலும் கல்வியிலும் ஊக்கப்படுத்துதல் வேண்டும்.

வலிப்பு வியாதியினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகள் அதிக கவனத்துடன் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமா?

இல்லை. அளவுக்கு அதிகமாக இப் பிள்ளைகள் பாதுகாக்கப்பட்டால் இவர்களின் மனவளர்ச்சி குன்றிவிடும். இவர்களினால் சாதாரண வாழ்க்கைச் சவால்களை எதிர்கொள்ள இயலாமல் போய்விடும். இந்நிலைக்கு காக்கை வலிப்பு நேரடிக்காரணமாகாது.

இந் நோயை பேய், பிசாசு விரட்டுதல், மாந்திரீகம் பார்த்தல் போன்ற முறைகள் மூலம் குணப்படுத்த
முடியுமா?

இவை விஞ்ஞான ரீதியான சிகிச்சை முறைகள் அல்ல.

வகுப்பறையில் மாணவன் ஒருவனுக்கு வலிப்பு வந்தால் என்ன செய்யவேண்டும்?

 1. காயம் ஏற்படாதவாறு அருகில் இருக்கும் கதிரை மேசைகளை விலக்கிவிட வேண்டும்.
 2. நோயாளியை ஒருபக்கமாக படுக்கவைக்க வேண்டும்.
 3. ஏனைய மாணவர்கள் வலிப்புடையவருடன் நிற்பதை தடுக்க வேண்டும்.
 4. வலிப்பு நீண்டநேரத்திற்கு நீடிக்குமாயின் அவரை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவேண்டும்.

காக்கை வலிப்புடைய பிள்ளையை பாடசாலையில் வைத்திருப்பது ஆபத்தானதா?

வீட்டிலும் சரி பாடசாலையிலும் சரி எதிர்பாராதசந்தர்ப்பங்களிலேயே ஏற்படுகின்றது. பாடசாலை செல்லும் வயதுடைய மாணவர்கள் வீட்டில் இருப்பதால் அவர்களின் கல்வி பாதிப்படைகின்றது. ஆசிரியர்கள் பிள்ளையை பூரணமாக குணமாக்கிய பின்புதான் பாடசாலை அனுப்பும் படி பெற்றோரிடம் வலியுறுத்து வதை தடுக்கவேண்டும்.

காக்கை வலிப்புள்ள மாணவனை பாடசாலைக்கு அனுப்ப முன் பெற்றோராகிய நீங்கள் என்ன அறிந் திருத்தல் அவசியம்?

 1. வலிப்பு நோய்க்குரிய மருந்தினை வைத்திய ஆலோசனைப் படி நேரத்திற்கு பிள்ளைகளுக்கு வழங்க வேண்டும்
 2. நேரம் தவறாது நிறையுணவு வகைகளை பிள்ளைகளுக்கு வழங்குதல் வேண்டும்.
 3. பாடசாலைக்கு பிள்ளைகளை அனுப்புவதை தவிர்க்க வேண்டும்.
 4. வகுப்பாசிரியர்களுக்கும் சக மாணவர்களுக்கும் இது பற்றி தெரிவிக்க வேண்டும்.
 5. நீச்சல் அடித்தல் மற்றும் மரம் ஏறுதல் தவிர்ந்த ஏனைய விளையாட்டுக்களில் பிள்ளைகளை அனுமதிக்க வேண்டும்.
 6. பிள்ளைகளை குறைந்தது 6 மணித்தியாலங் களாவது உறங்கவிட வேண்டும்.

காக்கை வலிப்புடைய திருமணவயதினருக்கு எவ்வாறான ஆலோசனைகளை வழங்க விரும்பு கிறீர்கள்?

அவர்கள் சந்தோசமான திருப்திகரமான திருமண வாழ்க்கையை வாழலாம். இதற்கு வலிப்பு ஒரு தடை அல்ல. அத்துடன் சாதாரண தம்பதிகள் போல் பிள்ளை களையும் பெறலாம். ஆனால் குறிப்பாக பெண் பிள்ளைகள் திருமணத்திற்கு முன் இது சம்பந்தமாக வைத்திய ஆலோசனை ஒன்றை பெற்றிருத்தல் இன்றியமையாதது.

வலிப்பு நோய் உடையவர்கள் கர்ப்பம் தரிப்பது பற்றி உங்கள் ஆலோசனைகள் என்ன?

 1. இவர்கள் கர்ப்பம் தரிக்க எந்தவித தடையும் இல்லை. ஆனால் கருத்தரிக்க முன் வைத்தியரின் ஆலோசனை ஒன்றை பெற்றிருத்தல் இன்றியமையாதது.
 2. எதிர்பாராதவிதமாக கருத்தரித்திருந்தால் மருந்தை நிறுத்தாமல் கூடிய விரைவில் வைத்திய ஆலோசனையை பெறுங்கள்.
 3. நீங்கள் மகப்பேற்று மருத்துவரை முதலில் சந்திக்கும் போது உங்களுக்கு வலிப்பு வியாதி இருப்பதைப் பற்றி தெரிவியுங்கள்.
 4. கர்ப்பம் தரிக்க முன்பு இருந்தே போலிக்அசிட் எனப்படும் விற்றமின்களை எடுக்க வேண்டும்.
 5. ஒழுங்கான உணவுப் பழக்கங்களும், ஓரளவு உறக்கமும் இக்காலத்தில் கடைப்பிடிப்பது அவசியமாகும்.

வலிப்பு நோய் உடையவர்கள் தொழில் பார்ப்பதில் ஏற்படும் பிரச்சினைகள் எவை?

சாதாரண தொழிலாளர் போல் இவர்கள் வேலை பார்க்கலாம். ஆனால் நீங்கள் வேலையைத் தெரியும் முன் பின்வருவனவற்றை கருத்தில் கொள்ள வேண்டும்

 1. வலிப்பு ஓரளவுக்கேனும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவேண்டும்.
 2. பின்வரும் சந்தர்ப்பங்களை தவிர்த்தல் வேண்டும்
  • ஆபத்தான இயந்திரங்களுடனான வேலை
  • நெருப்புடனான வேலை
  • உயரமான இடத்தில் இருந்து செய்யும் வேலை
  • இரவு நேர வேலைகள்

வலிப்பினை இனங்காணும் பொழுது எவ்வாறான முதலுதவிகளை வழங்கலாம்?

வலிப்பு ஏற்படுகின்ற பொழுது உடலிலுள்ள தசைகள் இறுக்கமடையும் அதேவேளையில் குரல்வளை யிலுள்ள தசைகளும் இறுக்கம் அடைகின்றன. இதன் பொழுது தற்காலிகமான மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புண்டு. ஆனால் வலிப்பு அசாதாரணமாக நீண்ட நேரத்திற்கு நீடிக்குமாயின் இறப்பும் நிகழலாம். எனவே நோயாளி உபாதைக்கு உட்பட்டிருக்கும் நேரத்தில் உரிய முதலுதவிச் சிகிச்சையளிப்பது இன்றியமையாதது.

 1.  முதலுதவி வழங்குபவர் பதற்றம் அடையாது இருத்தல் வேண்டும்
 2. வலிப்பு நோயாளியின் சுற்றுப் புறத்திலுள்ள நோயாளிக்கு ஆபத்து விளைவிக்கும் பொருட் களை அகற்ற வேண்டும்
 3. நோயாளிக்கு வலிப்பு ஆரம்பித்த நேரத்தினை குறித்துக் கொள்ள வேண்டும்
 4. நோயாளிக்கு வலிப்பு நோய் முற்று முழுதாக நிற்கும்வரை நோயாளியுடன் இருத்தல்வேண்டும்
 5. வலிப்பின் பொழுது தலை அடிபடுதலை தலையனை ஒன்றைப் பயன்படுத்தி தவிர்த்துக் கொள்ள முடியும்.
 6. எக்காரணம் கொண்டும் உடலில் அல்லது கை கால்களில் ஏற்படும் வலிப்பின் போதான உதறல் களை நிறுத்த முற்படக் கூடாது.
 7. வலிப்பின் பொழுது நோயாளியின் வாய்க்குள் திண்ம அல்லது திரவப் பதார்த்தங்களை விடு வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
 8. மீண்டும் ஒருமுறை வலிப்புநீடிக்கும் நேரத்தை அவதானிக்கவும்.
 9. வலிப்பு 5 நிமிடங்களை விடக் கூடிய நேரம் நீடிக்குமாயின் உடனடியாக வைத்தியசாலையின் அவசரப் பிரிவிற்கு நோயாளியை அனுமதிப்பது அவசியம்.
 10. கைகால் உதறல்கள் குறையுமிடத்து நோயாளியை இடது அல்லது வலது புறமாக பாதி திரும்பிய நிலையில் வைத்து சீரான சுவாசம் ஏற்படுகின்றதா என்பதை உறுதிப்படுத்துவது அவசியம். இதன் பொழுது சுவாசக் குழாயினுடைய தொழிற்பாட்டை திண்ம உணவுப் பதார்த்தங் கள், கட்டுப்பற்கள் அல்லது அது போன்ற வேறு ஏதேனும் பொருட்கள் இடையூறு விளைவிக்கின்றதா என வாய்க்குளிக்குள்சோதித்தல் வேண்டும்.
 11. சுவாச வீதமானது ஏதாவது காரணத்தினால் குறைவடையும் போது உடனடியாக வைத்திய உதவியை நாடுதல் அவசியம்.

வலிப்பு நோயாளர்கள் பின்பற்ற வேண்டிய உணவுப்பழக்க முறைகள் யாவை?

இதெற்கென பிரத்தியேகமான உணவு முறைகள் எதுவுமில்லை. இருப்பினும் வயதிற்கேற்ற வகையில் நேரந்தவறாது உணவு உட்கொள்ளுதல் இன்றியமையாதது ஆகும்.

“காக்கைவலிப்பு உங்கள் வாழ்க்கையை இருள் மயமாக்காது தைரியத்துடனும் விவேகத்துடனும் அதற்கு முகங்கொடுங்கள்”

திருமதி.அஜந்தா கேசவராஜ்
விசேட நரம்பியல் நிபுனர்.