பெண்களுக்கு விசேட சிகிச்சை நடத்தப்படுவது அவசியமா?

ஆம். பெண்களுக்கான விசேட கவனிப்பை வழங்குவதன் பொருட்டே “சுகவனிதையர் சிகிச்சை” ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. பெண்கள் நடுத்தர வயதை அடையும் போது பல்வேறு நோய்களுக்கு உட்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றன. இந்தநோய்களை முந்திய (ஆரம்ப) நிலைகளில் இனங்கானப்பட்டால் அவற்றை கட்டுப்படுத்துவது இலகுவானது.

பெண்களின் 35 ஆவது வயதிலிருந்து தொற்றா நோய்களுக்கான ஆரம்ப பரிசோதனை சேவையைத் தொடர்ச்சியாக வழங்குவதன் மூலம் நோய்நிலமைகளை முன்கூட்டியே இனங்கண்டு உரிய சிகிச்சைகளின் பால் வழிப்படுத்துவதன் மூலமும் அவர்களைச் சிறந்த சுகாதார நிலமைகளுக்குக் கொண்டுவருவதே இந்த சிகிச்சைநிலையத்தின் நோக்கமாகும்.

அண்மித்த காலங்களில் தொற்றாநோய்களின் தாக்கமும் அதனால் ஏற்படும் இறப்புக்களும் அதிகரித்து வரும் அதே வேளையில் இவற்றில் இருதயநோய், மார்பகப்புற்றுநோய், கருப்பைக் கழுத்துப்புற்று நோய் போன்றவற்றின் தாக்கமும் அதனால் ஏற்படும் இறப்புவீதமும் பெண்களில் அதிகமாகக் காணப்படுகின்றது. பெண்களின் உடலில் பூப்படைந்ததிலிருந்து மாதவிடாய் நிற்கும்வரை சில ஓமோன்களின் செயற்பாடுகள் நடைபெறும். மாதவிடாய் நின்றபின் இந்த ஓமோன்களின் சுரப்பு இல்லாமல் போவதனால், அந்தக்காலத்தில் இதய நோய், மூட்டுநோ. சில வகையான புற்றுநோய் போன்ற நோய்நிலைக்கு உள்ளாகின்றனர். இவை ஆண்களைவிட பெண்களிலேயே அதிகமான தாக்கத்தை உருவாக்குவதாக ஆய்வுகள்மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

“சுகவனிதையர்சிகிச்சையின்” போது வழங்கப்படும் சேவைகளின் விவரம்.

  • பொதுவான உடல்சார் சோதனை
  • குருதியமுக்கசோதனை
  • சிறு நீரில் சீனி அடங்கியுள்ளதா என சோதித்தல் ( நீரிழிவு நோயை அடையாளம் காணல்)
  • மார்பக பரிசோதனை சுய மார்பக பரிசோதனை ஆகியன பற்றி விழிப்பூட்டல்
  • வெறுங்கண்ணால் கருப்பைக்கழுத்தை அவதானித்தல்
  • கருப்பைக்கழுத்து சுரப்பு சோதனை (பெப்பரிசோதனை)
  • ஆரோக்கியமான வாழ்வுக்கான வழிமுறைகளைப் புகட்டல்
  • தேவைப்படும் நேரங்களில் சந்தர்ப்பங்களில் குடும்பத்திட்ட சேவையை வழங்குதல்
  • மாதவிடாய், மாதவிடாய் நிறுத்தம் சார்பான பிரச்சினைகளைக் கலந்தாலோசித்தல்

உயர்குருதியமுக்கம்

ஒருவரின் குருதியமுக்கம் 140/90 (mmHg) மில்லிமீற்றர் இரசத்திலும் உயர்வாக காணப்படுமாயின் அது உயர்குருதியமுக்கம் எனக்கருதப்படும். இந்த நிலமையை உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மன அழுத்தங்களை குறைத்தல் என்பனவற்றின் மூலம் தவிர்த்துக்கொள்ளலாம்.

இந்த நிலமையைக் கட்டுப்படுத்தத் தவறினால் அவை மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரகம் செயலிழப்பு நரம்பு சம்பந்தமான நோய்கள், பார்வைக்கோளாறு போன்ற பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்த வழிகோலக்கூடும்.

நீங்கள் சுகதேகியாக இருக்கும் பட்சத்தில் ஆகக்குறைந்து வருடத்துக் கொருமுறையாவது குருதியமுக்கத்தை சரிபார்த்துக் கொள்ளல்வேண்டும்.

நீரிழிவுநோயை அடையாளம்காணும் பரிசோதனை

10 தொடக்கம் 12 மணித்தியாலங்கள் சாப்பிடாமல் இருந்து செய்யப்படும் குருதிப்பரிசோதனையின் போது (பட்டினி நிலை) குருதியில் இருக்கும் குளுக்கோஸின் அளவு 126மில்லிகிராமை விட அதிகமாகக் காணப்படும் போது நீரிழிவு நோய் உள்ளவர்களாக கருதப்படுவார்கள்.

100 தொடக்கம் 126mgக்கு இடையில் இருக்கும் போது நீரிழிவுக்கு முந்திய நிலை (Prediabetes) என அழைக்கப்படும். உணவு உட்கொண்டு இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் செய்யும் இரத்த பரிசோதனைடு குருதியிலுள்ள குளுக்கோஸின் அளவு மூலமும் நீரிழிவு இருக்கின்றதா இல்லையா என்பதைக்கண்டறிந்து கொள்ளமுடியும். இந்த நிலமையை கட்டுப்பாடான ஆகாரம், உடற்பயிற்சி மன அழுத்தங்களை குறைத்தல் என்பவற்றின் மூலம் கட்டுப்படுத்தலாம்.

அதிகரித்ததாகம், உடல்நிறைகுறைதல், ஒருநாளில் சிறுநீர் கழிக்கும் எண்ணிக்கை அதிகரித்தல் மற்றும் காயம் ஏற்பட்டால் குணமாக நாள் எடுத்தல் என்பன நோய்க்கான அறிகுறிகளாகும் நீரிழிவு நோயானது எந்தவொரு அறிகுறியும் இல்லாமலும் வெளிப்படலாம்.

இவ்வியாதியைக் கட்டுப்படுத்த தவறினால் பார்வைக்கோளாறு, இதயநோய்கள் சிறுநீரகக செயலிழப்பு நரம்புத்தளர்ச்சி போன்ற பாரதூரமான விளைவுகளுக்கு இட்டுச் செல்லும். அதாவது ஒருவர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டால் அவரது உடல் உறுப்புக்கள் அனைத்தும் பாதிப்புறுவதற்கான சாத்தியம் அதிகமாக இருக்கும்.

மார்பகப்புற்றுநோயும் சுயமார்பகப்பரிசோதனையும்

மார்பகப் புற்றுநோய் பெண்கள் மத்தியில் காணப்படும் மிகப்பொதுவான புற்று நோயாகும். இதனை முதற்கட்டத்திலேயே இனங்கண்டு சிகிச்சை அளிக்கத்தவறின் இந்தப்புற்றுநோய் நிணநீர்தொகுதியினுடாக ஏனைய பகுதிகளுக்கு பரவும் அபாயம் உள்ளது. குடும்பத்தில் யாராயினும் மார்பகப்புற்று நோயினால் பாதிக்கப்பட்டிருப்பின் அந்தக்குடும்பத்திலுள்ள ஏனையோருக்கும் இந்தப்புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகமாக இருக்கும்.

ஆனால் இந்தப்புற்று நோயானது மார்பகத்தில் ஏற்படும் சில அவதானிக்கத்தக்க (சுயமாக) மாற்றங்களை தவறாது கண்டறிவதன் மூலம் ஆரம்பநிலைகளிலேயே கண்டுபிடிக்கலாம். மார்பகத்தில் ஏதும் மாற்றம் ஏற்படுமாயின் அதனை இட்டு மிகவும் அவதானமாக இருப்பதோடு அதுகுறித்து உரிய நேரத்தில் சுகாதாரப் பகுதியினருக்குத் தெரிவிப்பதன் மூலமாக உரிய சிகிச்சை நடவடிக்கைகளை பெற்றுக் கொள்ள முடியும். இதற்கு இலகுவான முறையில் வழியமைக்கும் முகமாகவே இந்த சுகவனிதையர் சிகிச்சையின் போது பெண்களுக்கு சுயமார்பகப் பரிசோதனை செய்யும் முறைகளை கற்றுத்தருவதோடு சிகிச்சை நிலையத்தில் பரிசோதனையும் செய்யப்படுகிறது.

நீங்கள் வீட்டிலிருந்தவாறே சுயமார்பக பரிசோதனையும் கிரமமாகச் செய்வதன்மூலம் ஆபத்து அறிகுறிகளைக் கண்டறியும் பட்சத்தில் நீங்கள் நேரடியாக ”சுகவனிதையர் சிகிச்சைபிரிவினரின்” உதவியை பெற்றுக்கொள்ள முடியும்.

இவற்றைத் தவிர “பப்” பரிசோதனை எனப்படும் கருப்பைக்கழுத்து புற்று நோயின் முந்திய நிலையை அடையாளம் கண்பதற்கான கருப்பைக் கழுத்து பாயப்பூச்சு பரிசோதனையானது இந்தச்சிகிச்சை நிலையத்தினால் வழங்கப்படும் முக்கியமான சேவைககளில் ஒன்றாகும்.

இலங்கைப் பெண்களில் காணப்படுகின்ற புற்று நோய்களில் இந்தக்கருப்பைக் கழுத்துப்புற்று நோய் இரண்டாம் இடத்தைப் பெறுகின்றமையால், இந்த நிலமையை இனங்கண்டு சிகிச்சை செய்வது புற்றுநோய் நிலை ஏற்படுவதை தவிர்ப்பதற்கு ஏதுவாக அமையும். புற்று நோய் என முழுஉரு எடுத்த பின்கண்டுபிடிக்கப்பட்டால் கூடிய காலம் வைத்தியசாலையையும் கடுமையான சிகிச்சை முறைகளையும் அணுக வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகவேண்டும். குடும்பத்தில் ஒருவருக்குப் புற்றுநோய் வந்தால் அது முழுக் குடும்பத்தையே நிலைகுலைவைத்துவிடும். அதிலும் குடும்பத்தை தலைமை தாங்கும் பெண்களின் முடக்கம் என்பது எவ்வளவு பாரதூரமான விளைவுகளைக் கொண்டு வரும் என்பது யாவரும் அறிந்ததே. எனவே இந்தப் பரிசோதனையானது பெண்களில் 35ஆவது வயதிலிருந்து ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கு ஒரு முறையும் செய்யப்படுதல் அவசியமாகும்.

மேலும் இந்தச் சிகிச்சைநிலையத்துக்கு வருகைதருவதன் மூலம் மாதவிடாய் நிறுத்தத்தின் போது எற்படும் பிரச்சினைகள் சம்பந்தமான ஆலோசனைகள், ஆரோக்கியமான வாழ்வுக்கான வழிகாட்டல்கள், தேவைப்படும் தம்பதியினருக்கு தேவைப்படும் சந்தர்ப்பத்தில் குடும்பத்திட்ட தேவைகளை வழங்குதல் மற்றும் நோய்நிலைககளின் ஆரம்பக்கட்டங்களில் இனங்காணப்பட்டவர்களை உரிய சிகிச்சை நிலையங்களுக்கு வழிப்படுத்தல் போன்ற பயன்பாட்டைப் பெற்றுக்கொள்ளலாம்.

இலங்கையில் 1996ஆம் ஆண்டிலிருந்து இந்தச்சேவையானது நாடளாவியரீதியில் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டுவருகின்றது. தெற்காசிய பிராந்தியத்திலேயே இவ்வாறானதொரு சிகிச்சைச்சேவையை வழங்கி வருகின்ற ஒரு முன்னோடி நாடு எமது இலங்கை என்பது பெருமைக்குரிய விடயமே.

இந்தச் சிகிச்சையின் சேவைகள் யாவும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையிலுள்ள ஆரம்ப சுகாதார ஊழியர்கள் அனைவரதும் ஒத்துழைப்புடனும் சிறப்பாக பயிற்றுவிக்கப்பட்ட மருத்துவ மற்றும் பொதுச்சுகாதார தாதிய சகோதரி(PHNS) ஆகியோரினால் வழங்கப்படுகிறது.

எனினும் மாவட்டரீதியாக மாகாணரீதியாக பார்க்கும்போது எமது பிரதேசங்களில் பயன்படுத்து வோர் வீதம் மிக மிக குறைவாகவே காணப்படுகிறது. இந்தச் சேவையை பெற்றுக் கொள்ளவிரும்பும் பெண்கள் உங்கள் பகுதியிலுள்ள குடும்ப நல சேவை உத்தியோகத்தரை நாடுவதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

எமக்கு இலகுவாக இலவசமாகக்கிடைத்த சேவையைபயன்படுத்துவோம் பயன்பெறுவோம் நாட்டில் ஆரோக்கியமான பெண்கள் சமுதாயத்தை உருவாக்க உதவி புரிந்து முழு சமுதாயத்தினதும் ஆரோக்கியத்தை உறுதிசெய்வோமாக.

திருமதி.U.சாந்தலோஜினி
PHNS Trainee
NIHS