எமக்கு உடல் நலக்குறைவு ஏற்படும் போது… -Dr.சி.சிவன்சுதன்

ஒவ்வொரு தடவையும் எமக்கு உடல்நலக்குறைவு அல்லது ஒரு நோய் நிலை ஏற்படும் பொழுது மனத்தைரியத்துடன் அதனை எதிர்கொண்டு அதிலிருந்து மீள்வதற்கு முயற்சி எடுத்தல் அவசியமாகும்.

தடிமன், தசை நோ, வயிற்றுக்குழப்பம் போன்ற இயற்கையாக மாறக்கூடிய நோய்நிலைகளுக்கு மருந்து பாவிக்க வேண்டிய அவசியம் இல்லை. வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய ஒரு நிலை ஏற்படும் பொழுது நாம் எமது மருத்துவம் சம்பந்தமான குறிப்புக்கள், துண்டுகள், புத்தகங்கள், சோதனை முடிவுகள் அனைத்தையும் எம்முடன் எடுத்துச் செல்ல வேண்டும். அவை எமக்குப் பொருத்தமான மருத்துவப் பராமரிப்பை தீர்மானிப்பதற்கு பெரிதும் உதவியாக இருக்கும். இவற்றை எடுத்துச் செல்ல நாம் தவறினால் எமக்குப் பொருத்தமான சிகிச்சையை ஆரம்பிப்பதில் தாமதங்கள் ஏற்படலாம். சில முக்கியமான ஆவணங்களை போட்டோ பிரதி எடுத்து வைத்துக் கொள்வது எமது மருத்துவ தகவல்கள் தொலையும் சந்தர்ப்பங்களில் மிகவும் பயனுடையதாக அமையும்.

மருத்துவப் பராமரிப்பு சம்பந்தமான சகல ஆவணங்களையும் பைல்கவரில் போட்டு பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியமாகும்.வைத்தியர் சோதிக்கும் கருவியை (ஸ்ரெதஸ்கோப்) காதில் மாட்டியிருக்கும் பொழுது அவருடன் பேசுவதைத் தவிர்த்தல் வேண்டும். காரணம் அந்தச் சந்தர்ப்பத்தில் நாம் கதைப்பது வைத்தியருக்கு கேட்காது. நாம் கதைத்துக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் இந்தக் கருவியினால் உங்களை சோதித்துப்பார்ப்பதும் கடினமாக இருக்கும்.

எமது நோய் நிலை சம்பந்தமாக நாமே வைத்தியருக்கு விபரிப்பது நல்லது. எமக்கு இருக்கும் உண்மையான சரியான அறிகுறிகளை எம்மால் மட்டுமே முழுமையாக விபரிக்க முடியும். அதாவது ஒரு நோயாளியின் நோய் நிலை சம்பந்தமாக அவரின் குடும்ப உறுப்பினர்கள் விபரிப்பதிலும் பார்க்க அந்த நோயாளியே நேரடியாக வைத்தியருக்கு சொல்வது சிறந்தது. நோயாளிக்கு பேசும் ஆற்றலில் அல்லது சிந்திக்கும் ஆற்றலில் தடுமாற்றங்கள் இருந்தால் அல்லது மயக்க நிலை, வலிப்பு நிலை ஏற்பட்டால் குடும்ப உறுப்பினர்கள் அவரின் நிலை சம்பந்தமாக விபரிக்க வேண்டிய தேவை ஏற்படலாம். நாம் பாவித்துக் கொண்டிருக்கும் மாத்திரைகளின் பெயர்களை அறிந்து வைத்திருப்பது மிகவும் அவசியமாகும். மாத்திரைகளின் நிறத்தையும் வடிவத்தையும் சொல்லி அதனை அடையாளப்படுத்த முனைவது சில சமயம் ஆபத்திலும் முடியலாம்.

ஒவ்வொரு வகையான மாத்திரைகளும் பல்வேறுபட்ட வடிவங்களிலும் நிறங்களிலும் உற்பத்தி செய்யப்படுகின்றன. எனவே நீங்கள் குறிப்பிடும் வடிவத்தையும் நிறத்தையும் வைத்து நீங்கள் என்ன மாத்திரை பாவித்துக்கொருக்கிறீர்கள் என்பதை வைத்தியரினால் கண்டறி வது சிரமம்.

வைத்தியரைச் சந்திக்கும் போது நாம் எமது நோய் நிலை சம்பந்தமான சகல தகவல்களையும் கேட்டுத் தெரிந்து கொள்வது அவசியமாகும். உதாரணமாக எமக்கு என்ன நோய்கள் இருக்கின்றன? எங்கள் குருதி அமுக்கம் எவ்வளவு? ஒவ்வொரு மாத்திரைகளும் எதற்காக தரப்படுகின்றன? அவற்றின் பெயர் என்ன? செய்யப்பட்ட சோதனையின் முடிவு என்ன? உணவு முறை எப்படி அமைய வேண்டும்? என்னவகையான உடற்பயிற்சிகள் செய்ய முடியும் போன்ற வினாக்களுக்கான விடைகளைத் தெரிந்து கொள்வது எமது உரிமையும் கடமையுமாகும்.

சிறிய மருத்துவப் பிரச்சினைகளுக்கும் மருத்துவ நிபுணரை சந்திக்க வேண்டும் என்ற அவசியமில்லை. எமது வீட்டின்அருகில் உள்ள அரசாங்க வைத்தியசாலையில் வைத்தியரை சந்திக்க முடியும். தேவை ஏற்படின் மேலதிக சிகிச்சைகக்கான ஒழுங்குகளை அந்த வைத்தியர் செய்துதருவார்.

வைத்தியர் கூறும் சிகிச்சை முறைகளையும் ஆலோசனைகளையும் ஏற்றுக் கொள்வது எமக்கு கஷ்டமாக இருந்தால் அதனை திறந்த மனதுடன் வைத்தியருக்கு நாம் தெரியப்படுத்த வேண்டும். அப்படியான சந்தர்ப்பங்களில் மாற்று வழிகள் பற்றி ஆராய்வார். வைத்தியர் கூறுவது ஆலோசனையே தவிர உத்தரவு அல்ல. எமது விருப்பத்திற்கு அமைவாகவும் எமது அனுமதியுடனும் மட்டுமே சிகிச்சை முறை இறுதியில் வடிவமைக்கப்படும். எனவே வைத்தியரின் ஆலோசனையைக் கேட்டபின் எமது விருப்பத்தையும் தீர்மானத்தையும் வைத்தியருக்கு தெரியப்படுத்துவது எமது உரிமையும் கடமையும் ஆகும்.

மருந்துகளை மருந்தகங்களில் வாங்கும் போது அதனைப்பாவிக்கும் முறை பற்றியும் கேட்டறிதல் வேண்டும். மருந்து காலாவதியாகும் திகதியையும் பார்த்து வாங்குதல் வேண்டும். எமக்கு இருக்கும் அறிகுறிகளை கூட்டியோ மறைத்தோ, அல்லது குறைத்தோ வைத்தியருக்கு தெரியப்படுத்தினால் அது எமது வைத்திய முறையில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

எனவே வைத்தியரை எமது நண்பராக கருதி உண்மை நிலையை அவருக்கு தெரியப்படுத்துவது நல்லது. எமது மருத்துவத் தகவல்களின் இரகசியத்தன்மை எப்பொழுதும் வைத்தியர்களால் பேணப்படும்.

ஒவ்வொரு நோயுடனும் போராடி வெற்றி பெற்று ஆரோக்கியமாக வாழ முயற்சி எடுப்போம்.

Dr.சி.சிவன்சுதன்
பொது வைத்திய நிபுணர்.