தைரொக்ஸின் குளிசையைக் கர்ப்பகாலத்திலும் உட் கொள்ளவேண்டுமா?

கேள்வி: எனது வயது 28 ஆகும் எனக்கு தைரொயிட் பிரச்சினை இருப்பதால் தைரொக்ஸின் குளிசையை (75 மில்லிகிராம்)கடந்த 3 வருடங்களாகப்பாவித்து வருகின்றேன். நான் இப்பொழுது கர்ப்பமாக இருப்பதை(Urine) பரிசோதனை மூலம் உறுதிப்படுத்திக்கொண்டேன். நான் தைரொக்ஸின் குளிசையைக் கர்ப்பகாலத்திலும் உட் கொள்ளவேண்டுமா? இது பற்றி விளக்கிக் கூறவும்?

பதில்: உங்களுக்கு தைரொக்ஸின் குறைவாகச் சுரக்கின்ற பிரச்சினை (Hypothyroidism) இருக்கின்றது. கர்ப்பம் தரித்த பெண்ணொருவர் தைரொக்ஸின் குளிசையினை நிறுத்தாமல் தொடர்ந்து பயன்டுத்துதல் அவசியமாகும். கருப்பையில் வளரும் சிசுவின் மூளை வளர்ச்சி மற்றும் உடல் வளர்ச்சி என்பன தாயானவர் உள்ளெடுக்கும் தைரொக்ஸினிலேயே தங்கியிருக்கிறது. கர்ப்பம்தரித்த பெண்ணொருவர் உண்மையில் தான் வழமையாக உள்ளெடுக்கும் அளவினை விடக்கூடுதலான அளவு தைரொக்ஸினை கர்ப்பகாலத்தில் எடுக்க வேண்டியிருக்கும். நீங்கள் தற்போது கர்ப்பமாக இருப்பதால் தற்போது எடுக்கும் அளவை விட (75 mg) 25 mg அதிகமாக எடுக்கவேண்டியிருக்கும் (1OOmg) இதற்கு முன்னர் உடனடியாக வைத்திய ஆலோசனைப்படி தைரொயிட் ஹோர்மோன் அளவைப் (Free T4TSH) பரிசோதித்துப் பார்ப்பது அவசியமாகும். கர்ப்பகாலத்தில் தைரொக்ஸின் குளிசையினைத் தேவையான அளவில் எடுக்காதவிடத்து சிசுவின் உடல் மற்றும் மூளை வளர்ச்சி என்பன பாதிக்கபட நேரிடலாம். எனவே குறிப்பிட்ட காலத்துக்கொருமுறைதைரொயிட்ஹோர்மோனைப் பரிசோதித்து வைத்திய ஆலோசனைப்படி குளிசையின் அளவை (Dose) மாற்றுவது அவசியமாகும். எனவே நீங்கள் உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெற்றுத்தேவையான அளவுதைரொக்ஸினை உள்ளெடுப்பது இன்றியமையாததாகும்.