மனச்சோர்வால் பீடிக்கப்பட்ட ஒருவருக்கு நாம் எவ்வாறு உதவலாம்?

மனச்சோர்வு என்றால் என்ன அதிலிருந்து எவ்வாறு மீளலாம் என்ற அறிவு எமக்கு இருப்பின் மற்றவர்களுக்கும் நாம் உதவிசெய்யலாம். தொடர்ச்சியான கவலையும் வழக்கமாகச் சந்தோசப்படும் விடயங்களில் கவனம் செலுத்தமுடியாமல் இருப்பதும் நாளாந்த வாழ்க்கையை கிரமமாக நடத்த முடியாமல் இருப்பதும் இவ் அறிகுறிகளாக ஆகக் குறைந்தது இருவாரங்களுக்கு நீடித்திருப்பதும் ஒருவர் மனச்சோர்வால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதைத் தெரியப்படுத்தும்.

மனச்சோர்வால் பீடிக்கப்பட்ட ஒருவருக்கு நாம் எவ்வாறு உதவலாம் எனப் பார்ப்போம். முதலில் அவருடன் நேரம் செலவழித்து அவர் சொல்வதைச் செவிமடுத்து மனச் சோர்வுக்குரிய காரணங்களைக் கண்டுபிடித்தல் உளநல வைத்திய சேவை ஏற்கனவே பெறுபவராயின் தொடர்ந்து அந்தச்சேவையைப் பெற்றுக்கொள்ள ஊக்கமளித்தல் புதிய வராயின் அந்தச்சேவையினுள் அறிமுகப்படுத்திவிடல் அவரது உணவு மற்றும் நித்திரைப் பழக்கமுறையை சீராகப் பேண உதவிசெய்தல், வழக்கமான உடற்பயிற்சி மற்றும் சமூக செயற்பாடுகளைத் தொடர்ந்தும் பேண ஊக்கமளித்தல் நேரான சிந்தனைகளை மட்டும் மனதில் வைக்குமாறு ஊக்கமளித்தல் தம்மைத் தாமே காயப்படுத்தும் வ(ப)ழக்கம் உடையவராயின் தனிமையில் விடாதிருத்தல் வேண்டும். இவ்வாறானவருக்கு நாம் உதவி செய்யும் போது எம்மைப் பற்றிக் கவனமெடுக்கவும் மறக்கக் கூடாது.

குழந்தைப் பிறப்பின் பின்னர் தாயிற்கு மனச்சோர்வு ஏற்படுவது பொதுவான விடயமாகும் ஆறு தாய்மாரில் ஒரு வருக்கு என்றரீதியில் ஏற்படுகிறது. இவ்வாறான தாய்மார் வெளிப்படையாக சொல்லும்படியான காரணமெதுவுமின்றி அழுதபடி இருப்பர் பிள்ளையுடன் அரவணைப்பை தவிர்க்க முனைவர் தன்னையோ தன் பிள்ளையோ கவனிக்கத் தனக்கு ஆற்றல் இருக்கின்றதா எனச் சந்தேகம் கொள்வர். இவ்வாறானவர்களுக்கு உளவளத்துணை மற்றும் பாலூட்டும் காலத்தில் எடுக்கக்கூடிய பாதுகாப்பான மருந்துகளும் உதவி செய்யும். இவ்வாறான தாய்மார் தாம் ஓய்வெடுக்கவிரும்பும் நேரத்தில் தம் பிள்ளையை பராமரிக்க இன்னொருவரை எதிர்பார்ப்பார் மற்றைய தாய்மாருடன் கதைப்பதன் மூலம் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுவர்.

இவர்கள் தம்பிள்ளையைக்கையில் தாங்கியபடி திறந்த காற்றோட்டமுள்ள பாதுகாப்பான வெளியில் நடந்து திரிவதன் மூலம் மனதளவில் ஆறுதலை உணரலாம். தன்னையோ தன் குழந்தையையோ காயப்படுத்தும் எண்ணம் உடையவராயின் அருகில் இருக்க வேண்டும்.

சிறுவனொருவன் மனச்சோர்வால் பாதிக்கப்பட்டுள்ளான் என்பதை எவ்வாறு அறியலாம். இவ்வாறானவர்கள் மற்றைய சிறுவர்களுடன் சேராமல் பின்வாங்குவர் அடிக்கடி விம்மி விம்மி அழுவர் பாடசாலைக்கு போவதையோ அல்லது பாடசாலை நேரத்திலோ ஆர்வம் காட்டமாட்டார்கள் உணவுக்கான பசி மற்றும் நித்திரை கொள்ளும் நேரம் கூடுதலாக அல்லது குறைவாகக் காணப்படும் இளம் சிறுவர்கள் விளையாட்டுக்களில் குறைந்தளவில் ஆர்வத்தைக் காட்டுகையில் மூத்த சிறுவர்கள் புதிதாக ஏதேனுமொரு சவாலை மேற்கொள்ள (உதாரணத்துக்கு மரமேறி மாங்கப் பறித்தல்) எத்தனிப்பர். இவ்வாறு மனச்சோர்வுடன் காணப்படும் சிறுவர்களில் நாம் கவனம் செலுத்தவேண்டும் வீட்டில், பாடசாலையில் மற்றும் பாடசாலைக்கு வெளியில் நடக்கும் என்ன சம்பவங்களால் மனச்சோர்வு ஏற்படுகிறது என கண்டுபிடிக்க வேண்டும். ஒர் பிள்ளையானது புதிதாக பாடசாலை வாழ்க்கையைத் தொடங்கும் போது அல்லது பூப்பெய்த காலத்தில் இன்னும் அவர்களை அவதானிக்க வேண்டும் மேலும் அவர்களுக்குப் போதுமான அளவு நித்திரை கொள்ளவும் வழக்கமான சாப்பாட்டு முறையையும் நாளாந்த உடல் செயற்பாடுகளையும் மேற்கொள்ள ஊக்குவிக்க வேண்டும் எமது பிள்ளை மனச்சேர்வால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை நாம் தெரிந்து கொண்டால் அவர்களுடன் கதைத்து அவர்களின் கவலையை அறிந்து தேவைப்படின் உளநல வைத்திய உதவியைப் பெறவேண்டும் என் பதை மறக்கக் கூடாது.

பதினெட்டு மற்றும் இருபது வயதுடையவர்கள் பரவலாகவே எல்லா இடங்களிலும் தென்படுவர். அதாவது புதிய மனிதரைச்சந்திப்பதற்கு அவர்கள் அதிக வாய்ப்புக் கொண்டிருப்பர். புதிய இடங்களுக்குச் செல்வர் வாழ்க்கையில் புதிய ஒரு திசையைத் தெரிந்தெடுப்பார். இவ்வாறான காலப்பகுதி இவர்களுக்கு நெருக்கீட்டானதாகும். இதே வேளை இவ்வாறானவர்களுக்கு மனச் சோர்வு இவர்கள்திறனற்றுக் காணப்படுவர். பசிப்போக்கில் மாற்றம் ஏற்படும் கூடுதலாக அல்லது குறைவாக நித்திரை கொள்வர் குறைவான அவதானமாய் இருப்பர். பரபரப்புடன் காணப்படுவர். தம் நிலை பெறுமதியற்றது போல் உணர்வர் குற்ற உணர்வு அல்லது நம்பிக்கையின்மையைக்கொண்டிருப்பர் வயது அதிகரிக்கையில் சந்திக்கும் வாழ்க்கை மாற்றங்களும் மனச்சோர்வை ஏற்படுத்தும் உதாரணமாக இதயவருத்தங்கள், சலரோகம், நாட்பட்ட உடல் உபாதை வாழ்க்கைத்துணை மற்றும் பிள்ளைகளின் இழப்புதன் இளமைப் பருவத்தில் செய்த விடயங்களைத் தன் தற்போதைய முதுமைப்பருவத்தில் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கத்தினாலும் மனச்சோர்வு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு இவ்வாறானவர்களுக்குத் தற்கொலை புரியும் எண்ணம் அதிகமாகக் காணப்படும்.

இவ்வாறானவர்கள் தம் உணர்வுகளை மற்றையவருடன் பகிர்ந்து கொள்ள உதவி செய்ய வேண்டும். குறிப்பிட்ட இடை வெளியில் தம் உணவை எடுத்தல் மற்றும் போதுமான நேரம் நித்திரைக்காக ஒதுக்குதல் போன்றவற்றுக்கு உதவி செய்ய வேண்டும். மதுபாவனையைத் தவிர்த்து வைத்திய ஆலோசனையைப் பெறல் நல்லது.

ச.சஸ்ரூபி