பெண்களைத் தாக்கும் புற்று நோய்

உலகளாவிய ரீதியிலும் இலங்கையிலும் பெண்களைத் தாக்கும் புற்று நோய்களில் முக்கியமானவையாக மார்பகப்புற்றுநோய், கருப்பைக் கழுத்துப் புற்று நோய் என்பன காணப்படுகின்றது. இலஙகையில் புற்றுநோயின் தாக்கத்தால் ஆண்களைவிட பெண்களே அதிகம் பாதிக்கப்படுவதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் புள்ளிவிபரங்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது.

மேலும் இலங்கையில் ஒட்டுமொத்த புற்றுநோய்களின் தாக்கத்தில் கருப்பைக்கழுத்துப் புற்றுநோய் என்பது மூன்றாவது இடத்திலும் பெண்களைத்தாக்கும் புற்றுநோய்களில் இந்தப்புற்றுநோய் இரண்டாவது இடத்திலும் இருப்பதாகவும் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றது. இது சுகாதாரத் துறையினருக்குப் பெரிய சாவாலையும், சுமையையும் ஏற்படுத்துகின்றது.

உலக சுகாதார நிறுவனத்தின் கணிப்பின்படி இலங்கையில் ஒவ்வொரு வருடமும் ஆயிரம் புதிய கருப்பைக் கழுத்துப் புற்று நோயாளிகளை அடையாளம் காண்பதாகவும், 800 பெண்கள் இதனால் இறப்பதாகவும் கணிக்கப்பட்டிருக்கின்றது.

எல்லாப்புற்றுநோய்களையும் வசிட கருப்பைக்கழுத்துப் புற்றுநோயை இலகுவாக ஆரம்பத்திலேயே கண்டறிந்து குணப்படுத்த முடியும் அல்லது தீவிர நிலைக்குச் செல்லாமல் தடுக்க முடியும். அப்படியிருந்தும் இந்த நோயால் அதிகளவானோர் பாதிக்கப்படுவதும் இறப்பு ஏற்படுகின்றமையும் வருத்தத்திற்குரியதாகும். எனவேதான் இது பற்றிய விழிப்புணர்வைப் பெண்கள் மத்தியில் ஏற்படுத்துவது அவசியமாகிறது.

கருப்பைக் கழுத்துப் புற்றுநோய் எவ்வாறு தோன்றுகிறது

இது பரம்பரையாக தோன்றும் ஒரு நோய் அல்ல. மனித பபிலோமா வைரஸ் (Human Papiloma Virus) என்ற நுண்கிருமி பெண்களின் கருப்பைக் கழுத்தில் நீண்ட நாள்களாக இருப்பதால் இந்தப் புற்றுநோய்க்கு வழிகோலுவதாக அமைகின்றது. ஒரு பெண் தனது வாழ்க்கையில் பாலியல் ரீதியான உறவில் ஈடுபட ஆரம்பிக்கும் போது இத்தொற்று ஏற்படுவதற்கான சாத்தியமுள்ளதாகவும் இளவயது பெண்களை அதிகளவில் தாக்குவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தக்கிருமித் தொற்றே பிற்காலத்தில் கருப்பைக் கழுத்துப் புற்றுநோய் ஏற்படப் பெரும் சாத்தியமாக விளங்குகின்றது. ஆனாலும் வயது வித்தியாசமின்றி எல்லாப் பெண்களுக்கும் கருப்பைக் கழுத்துப் புற்றுநோய் வரும் அபாயம் உள்ளது. அதனாலேயே பெண்கள் இது பற்றிய வழிப்புணர்வுடன் கூடுதலான வரை பாதுகாப்பாக இருப்பது சிறந்தது.

கருப்பைக் கழுத்துப் புற்றுநோயின் அறிகுறிகள்

நோயின் முதற்கட்ட நிலையில் எதுவித அறிகுறிகளும் காணப்படமாட்டாது. முதற்கட்ட நிலையைத் தாண்டிய பின்னர் பின்வரும் நோய் அறிகுறிகள் காணப்படும்.

உடலுறவின் பின்னர் யோனி வழியினூடாக குருதி வெளியேறல்
யோனி வழியினூடாக ஒழுங்கற்ற குருதிப் பெருக்கு 2 மாதவிடாய்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் ஏற்படும்.
யோனி வழியினூடாகக் குருதி கலந்த இளஞ்சிவப்பு வர்ணத்தில் கசிவு வெளியேறல் பின்னர் இது குருதிப் பெருக்காக மாறல்.
துர்நாற்றமான யோனிவழிக் கசிவு வெளியேறல்.
மாதவிடாய் நிறுத்தத்தின் பின்னரும் அசாதாரணமான குருதிப் பெருக்கம் ஏற்படல்.

இவ்வறிகுறிகள் புற்றுநோய் தவிர ஏனைய பெண் நோயியலுக்கும் பொதுவான அறிகுறிகளாக இருந்த போதும் அசட்டை செய்வது நன்றன்று.

கருப்பைக் கழுத்துப் புறந்றுநோய் அதிகமாகத் தாக்க்கப்படும் அபாய நிலையில் உள்ளவர்கள்

மிக இளவயிதிலேயே பாலியல் நடவடிக்கைகளை ஆரம்பித்தவர்கள்.
மனித பபிலோமா வைரஸ் தொற்றுடைய பெண்கள்.
ஒன்றுக்கு மேற்பட்ட பாலியல் துணைகளைக் கொண்டுள்ளவர்கள்.
புகைப்பழக்கம் உள்ள பெண்கள் அல்லது புகைப்பவர்களுக்கு அருகில் இருப்பவர்கள்.
சில நோய்களுக்காக நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் மருந்து வகைகளை உள்ளெடுப்பவர்கள்.
கடந்த காலங்களில் பாலியல் ரீதியான தொற்றுநோய் வரலாறு உடையவர்கள்.

இது தவிர உடற்பருமன் கூடிய நிலை மாதவிடாய் சாதரணமாக நிற்க வேண்டிய காலத்தை விட காந்தாழ்த்தி மாதவிடாய் நிற்றல். முதலாவது பிரசவம் 30 வயதுக்கு மேற்பட்டிருத்தல் போன்ற காரணங்களும் அடங்கும்.

கருப்பைக் கழுத்துப் புற்றுநோய் ஆரம்பத்தில் கண்டுபிடிக்கக் கூடியதா?

ஏற்கனவே கூறியது போன்று இந்தப் புற்றுநோயானது தடுக்கப்படக்கூடியது. எப்போதெனில் ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கக் கூடுமாயின் ஆம்! இந்தப் புற்றுநோயானது மிக மெதுவாகவே புற்று நோயாக பரிணமிக்கின்றது. புற்று நோயாக பரிணமிப்பதற்கு முன்னர் இந்த நோயை கண்டறிய முடியுமாயின் முழுமையாக கருப்பைக் கழுத்துப் புற்றுநோயாக உள்நோக்கிப் பரவி உருவெடுப்பதை முற்றாகத் தவிர்க்கலாம்.

நீங்கள் எதிர்காலத்தில் இந்தப் புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்துக்காரணிகளைத் கொண்டவரா என எவ்வாறு தெரிந்துகொள்ளலாம்?

பப் (pop) பரிசோதனை என்றழைக்கப்படும் கருப்பைக் கழுத்துப் பாயப் பூச்சுப் பரிசோதனையின் மூலம் நீங்கள் எதிர்காலத்தில் இந்தப் புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்துக் காரணிகளைக் கொண்டவரா என்பததை் தெரிந்து கொள்ளலாம்.

இந்தப் பரிசோதனை மூலம் கருப்பைக் கழுத்துப் புற்றுநோயாக உருவெடுக்கக் கூடிய மிக மிக ஆரம்ப நிலையிலுள்ள கருப்பைக் கழுத்து இழைய மாற்றங்களை கண்டறிய முடியும். இந்த பப் பரிசோதனையானது யோனி மார்க்கத்தினுள் ஒரு சிறிய உபகரணத்தை (Spatula) உட்செலுத்தி எடுக்கப்படும் ஒர் சிறு பரிசோதனையாகும். உட்செலுத்தப்படும் உபகரணத்தின் உதவியுடன் கருப்பைக் கழுத்துப் பகுதியிலுள்ள பாயம் போன்ற திரவம் மெல்லிய தடவல் மூலம் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்படுகின்றது, இது புற்று நோய்க்கு முந்திய நிலையை அடையாளம் காண உதவுகின்றது.

இந்தப் பரிசோதனையைச் செய்து கொள்ளுமாறு அதிகம் பரிந்துரை செய்யப்படுவோர் . பப் பரிசோதனையானது ஆரோக்கியமாக வாழும் பெண்களுக்கு மேலும் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தி மேம்படுத்த செய்யப்படும் பரிசோதனையாகும்.

இந்தப் பரிசோதனையானது பொதுவாக முதலாவது தாம்பத்திய பாலியல் நடவடிக்கைகளை ஆரம்பித்து 5 வருடங்களின் பின்னர் எல்லாப் பெண்களுக்கும் பரிந்துரை செய்யப்படுகின்றது. எமது நாட்டின் சுகாதார சேவையினரால் நாடளாவிய ரீதியில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினூடாக நடத்தப்படும் சுகவனிதையர் மருத்துவச் சிகிச்சையில் (Well women clinic) இந்தப் பரிசோதனைசெய்யப்படுதல் ஒரு முக்கிய செயற்பாடு ஆகும்.இங்கு 35 வயதிற்கு மேற்பட்ட எல்லாப் பெண்களும் இந்தப் பரிசோதனையை செய்து கொள்ளலாம். நாட்டிலுள்ள ஒவ்வொரு பெண்களும் அவர்களது 35 ஆவது வயதிலிருந்து ஒவ்வொரு 5 வருடங்களுக்கு ஒரு முறையாவது இந்தப்பரிசோதனையை செய்திருத்தல் வேண்டும் என்பது எமது சுகாதார சேவையின் இலக்காகும்.

நீங்கள் உங்கள் அருகாமையிலுள்ள சுகவனிதையர் மருத்துவ சிகிச்சை பற்றிய தகவல்களை உங்கள் பிரதேச மருத்துவ மாது அல்லது குடும்ப நல சேவை உத்தியோகத்தர் மூலம் அறிந்து கொள்ளலாம். இதனைத் தவிர அரச வைத்திய சாலைகளில் நடைபெறும் எல்லா சுகவனிதயர் கிளினிக்குகளிலும் பெண் நோயியல் கிளினிக்குகளிலும் செய்து கொள்ளலாம்.

பரிசோதனையின் முடிவுகள் உங்கள் பகுதி மருத்துவ மாது மூலமாகவே அறிந்து கொள்ளலாம். பரிசோதனை முடிவுகள் சாதாரணமானது எனில் இதுவே மிகவும் வேண்டப்படும் செய்தியும் இன்பமான செய்தியுமாகும். நீங்கள் 5 வருடங்களின் பின் இந்தப் பரிசோதனையை மீள செய்து கொள்ளலாம். பரிசோதனை முடிவு அசாதாரணமானது எனில் கண்டறியப்பட்ட மாற்றத்தை உறுதிப்படுத்த நீங்கள் மேலதிக பரிசோதனைக்கும் வைத்திய ஆலோசனைக்கும் பரிந்துரைக்கப்படுவீர்கள்.

இந்த பரிசோதனையை சுகவனிதையர் மருத்துவ சிகிச்சை மூலம் கடந்த சில ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்ட போதும் நாடளாவிய ரீதியில் மிகக் குறைந்த பெண்களே இதன் மூலம் பயன்பெறுகிறார்கள். அதிலும் குறிப்பாக அண்மைக்கால புள்ளி விவரங்களின் படி வடமாகாணத்தில் இப் பப் பரிசோதனை மூலம் பயன்பெறு வீதமானது இலங்கையின் ஏனைய மாகாணங்களின் பயன் பெறு வீதத்தினை விட குறைவாகவே காணப்படுகின்றது.

நோய் வந்த ஒருவரே வைத்திய சாலையையோ வைத்திய உதவியையோ நாடுவார் என்ற தவறான அபிப்பிராயம் எம்மவர்கள் மத்தியில் வேரூன்றி இருக்கின்றது.இதனால் இப் பப் பரிசோதனை போன்ற பல்வேறு நோய் வருமுன் காக்கும் நடவடிக்கைகளில் (Preventive Measures) பயன்பாட்டை முழுமையாக செய்யாது தள்ளி நிற்கின்றது. அத்துடன் பெண்கள் இயல்பாகவே பயந்த சுபாவமும் கூச்ச சுபாவமும் உள்ளவர்களாகக் காணப்படுவதாலும் இந்தப் பரிசோதனையின் தேவை பற்றி அறிந்திருந்தும் அதன் பயன்பாட்டைத் தவிர்க்கிறார்கள். உண்மையில் இந்தப் பரிசேதனையை செய்வதற்கு 5 நிமிடங்கள் தொடக்கம் 10 நிமிடங்கள் மட்டும் போதுமானது மாதவிடாய் பெருக்கு அல்லாத ஒரு நாளில் இந்தப் பரிசோதனையைச் செய்யலாம். வலி ஏற்படுத்தப்படும் விதத்திலோ பயப்படத்தக்க வித்திலோ எந்தச் செயற்பாடுகளும் இல்லை. உங்கள் அந்தரங்கம் பேணப்படும். எப்போதும் உங்கள் நலனில் உங்களை விட அக்கறையுள்ள உங்கள் பகுதி மருத்துவ மாது மற்றும் பொதுச் சுகாதார தாதிய சகோதரி போன்றோர் உங்களுக்குப் பக்க பலமாக பரிசோதனை நடைபெறும் வேளையில் இருப்பார்கள்.

எனவே இந்தப்பரிசோதனை பற்றிய உங்கள் எதிர்மறையான எண்ணக்கருக்கள் நிலைப்பாடுகள் ஏதேனுமிருப்பின் அவற்றை மாற்றுங்கள். ஆரம்பத்திலேயே கண்டறிந்து தடுக்க் கூடிய ஒரு நோயான இந்தக் கருப்பைக்கழுத்துப் புற்றுநோயை வருமுன் தடுப்பதற்கு தயாராகுங்கள். ஆரோக்கியமான பெண்களே நாட்டினதும், வீட்டினதும் ஆரோக்கியத்தின் மூலதனமாகும்.

தற்போது கருப்பைக்கழுத்துப் புற்றுநோய்க்கு ஏதுவான மனித பப்பிலோமா வைரஸ் இதற்குரிய தடுப்பூசியானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தற்போது தனியார் வைத்திய சாலைகளிலேயே பெற்றுக்கொள்ளலாம். எனினும் இது பாலியல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு முன்னராகவே பெற்றுக் கொள்வதன் மூலமாகவே இதன் உச்சப்பயன் பாட்டைப் பெற்றுக் கொள்ளலாம்.

எனவே கருப்பைக்கழுத்துப் புற்றுநோயின் அறிகுறிகள் தோன்றும் வரை காத்திராது எமக்கு இலவசமாகவும் இலகுவாகவும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள “பப்” பரிசோதனை சேவையை நேரத்தோடு பயன்படுத்தி உங்கள் ஆரோக்கியமான வாழ்வை உறுதி செய்து கொள்ளுங்கள்.

திருமதி சாந்தலோஜினி
PHNS Trainee