வடஇலங்கையில் நீரிழிவு நோய் அதிகரிக்கக் காரணம் என்ன? சி.சிவன்சுதன்

உலகுடன் ஒப்பிடும்பொழுது இலங்கையில் குறிப்பாக வட பகுதியில் இதன் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது. இலங்கையிலே நாடளாவிய ரீதியில் செய்யப்பட்ட ஆய்வுகளின்படி 10.3 வீதமான மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த ஆய்வில் நாட்டின் வடக்கு கிழக்குப்பகுதிகள் உள்ளடக்கப்படவில்லை.

யாழ்ப்பாணத்திலே மேற் கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படிவளர்ந்தவர்களில் 16.4 வீதமானவர்கள்.நீரிழிவுநோயினால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. இலங்கையில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி 2030 ஆம் ஆண்டளவில் 13.5 வீதமான மக்களுக்கு நீரிழிவு ஏற்படும் ஆபத்து இருக்கிறது என்று எதிர்வுகூறப்படுகின்றது.ஆனால்யாழ்ப்பாணத்தில் நீரிழிவு நோயாளர்களின் தற்போதைய விகிதாசாரம் 16.4 வீதமாகும்.

இவ்வாறாக வடபகுதியிலே நீரிழிவு நோயாளர்களின் வீதம் ஒப்பீட்டளவில் அதிகரிக்கக் காரணம் என்ன? இதற்கு பல காரணங்கள் உள்ளன.

முதியவர்களின் எண்ணிக்கை

எமது பகுதியில் வாழும் முதியவர்களின் எண்ணிக்கைஒப்பீட்டளவில் அதிகமாகும். அதாவது வடபகுதியில் வாழும் மக்களின் சராசரி வயது இலங்கையில் ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடும்பொழுது அதிகமாகும். காரணம் பல இளம் சமூகத்தினரை போரால் இழந்து விட்டோம். பல இளம் தலைமுறையினர் இடம்பெயர்ந்து பிற நாடுகளுக்குச் சென்றுவிட்டனர். சென்றுகொண்டும் இருக்கிறார்கள்.எனவே இங்கு வயது கூடியவர்களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுவதால் நீரிழிவுநோயாளர்களின் வீதமும் அதிகரித்துக் காணப்படுகிறது.

ஆரோக்கியமற்ற உணவுமுறை

அத்துடன் வடபகுதி மக்களுக்குத்தான் பிறநாடுகளில் வசிக்கும் உறவினர்கள் அதிகமாக இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு தடவையும் இலங்கைக்கு வரும் பொழுது கிலோக் கணக்கில் சொக்லேட்டுக்களையும் இனிப்பு வகைகளையும் எடுத்து வருகிறார்கள். இதன் காரணமாக ஆண்டுதோறும் பல்லாயிரம் கிலோ கண்டோஸ், இனிப்பு வகைகள் வடபகுதிக்கு வந்தவண்ணம் இருக்கின்றன. இவற்றை வீணாக்கக்கூடாது என்ற நோக்கில் எமது மக்கள் அவற்றை உண்டு நோயாளிகள் ஆகிக் கொண்டிருக்கிறார்கள். இதுவும் இங்கு நீரிழிவு அதிகரிக்கக் காரணமாக அமைகிறது.

இதற்கு மேலதிகமாக நாம் ஆரோக்கியமற்ற உணவு முறைக்கு பழ்க்கப்பட்டிருக்கிறோம். வெள்ளை அரிசிச் சோறு, பொங்கல், அவல், பிரசாதம், பாயாசம், கற்கண்டு. மோதகம், றொட்டி, மென்பானங்கள் என சீனி, மா என்பவை அதிகமுள்ள உணவுமுறைக்கு அடிமைப்பட்டிருக்கிறோம்.

உடற்பயிற்சிக்கு என்று நேரம் ஒதுக்குவதில்லை. இவை காரணமாக அதிகரித்துவரும் நீரிழிவுநோயாளர்களின் எண்ணிக்கை ஒரு பெரும் பிரச்சினையாக உருவெடுத்து இருக்கிறது.

எனவே நீரிழிவு தடுப்பு நடவடிக் கைகள் அனைத்து மட்டங்களிலும் உத்வேகம் பெற வேண்டிய தேவை இருக்கிறது.

சி.சிவன்சுதன்
வைத்திய நிபுணர்
யாழ் போதனா வைத்தியசாலை