உருளைக்கிழங்கை சுவையாக உண்டு ஆரோக்கியம் பேணுவதற்கு…..

உருளைக்கிழங்கை விரும்பி உண்ணாதவர்கள் எவருமே இருக்கமாட்டார்கள். சுவையில் மட்டுமல்ல போசணையிலும் உருளைக்கிழங்கு சிறந்த உணவாகும். நீரிழிவு மற்றும் இருதய நோய் உடையவர்களும் உடல் எடையைக் குறைக்க விரும்புவோரும் உருளைக் கிழங்கு ஒரு எட்டாக்கனியாக இருப்பதாக எண்ணி வருந்தத் தேவையில்லை. நீங்களும் உங்கள் உணவில் உருளைக்கிழங்கைச் சேர்த்துக் கொள்ளலாம். எவ்வாறு?

எமது பிரதேசத்தின் பிரதான உணவான அரிசியைச் சோறாகவும், அதன் மாவினைப் பிட்டு, இடியப்பமாக ஆக்கியும் நாம் உண்கிறோம். அரிசியிலுள்ள பிரதான உணவுக்கூறு காபோவைத ரேற்று. உருளைக்கிழங்கிலுள்ள பிரதான உணவுக்கூறும் காபோவைத ரேற்றே ஆகும்.

ஒருவர் ஒரு நேர உணவின்போது சராசரியாக உண்ணும் அவித்த உருளைக்கிழங்கிலுள்ள காபோவைதரேற்றின் அளவான 1/3 டம்ளர் சமைத்த குத்தரிசிக்கு அண்ணளவாகச் சமனாகிறது. எனவே, நாம் உருளைக் கிழங்குக் கறியை எமது உணவில் சேர்க்கவிரும்பினால் 1/3 டம்பளர் சோற்றைக் குறைத்து அல்லது ஒரு இடியப்பத்தைக் குறைத்து உண்ணலாம். இதன்மூலம் நாம் மேலதிகமாக எடுக்கும் காபோவை தரேற்றுத் தவிர்க்கப்படுகிறது.

மேலும், அவித்த உருளைக்கிழங்கிற்கும் குத்தரிசிச் சோறு மற்றும் தீட்டாத அரிசி மா போன்றவற்றிற்கும் கிளைசீமிக் இன்டெக்ஸ் (Glycaemic index) என்று சொல்லப்படுகின்ற அதாவது, உண்டபின் குருதியில் குளுக்கோஸ் அதிகரிப்பு ஏற்படும் வீதம் அண்ணளவாகச் சமனாக உள்ளது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்ததாக உள்ளது. கிளைசீமிக் இன்டெக்ஸைக் குறைப்பதற்கு நீரிழிவு நோயாளிகள் இவ்வுணவுடன் மரக்கறி வகைகள் மற்றும் இலைக்கறி வகைகளையும் சேர்த்துக் கொள்ளலாம். தீட்டாத, அரிசியுடன் (Brown rice) ஒப்பிடும் போது உருளைக்கிழங்கு குறைந்தளவு கொழுப்புச்சத்தைக் கொண்டுள்ளது. அரிசியில் காணப்படாத சில கனியுப்புக்களைக் கொண்டுள்ளது. இவற்றைவிட உருளைக்கிழங்கு மிகவும் குறைந்த அளவிலேயே சோடியத்தைக் கொண்டுள்ளது. எமது குருதியமுக்கத்தைச் சரியான முறையில் பேணுவதற்கு சோடியம் உப்புக் குறைவான உணவுகளும் உதவிபுரிகின்றன.

இவ்வாறு பல நன்மைகள் அவித்த உருளைக்கிழங்கில் இருப்பினும் கறியாகச் சமைக்கும்போது அதில் சேர்க்கப்படும் தேங்காய்ப்பால், உப்பு, எண்ணெய் என்பன உருளைக்கிழங்கின் ஆரோக்கியமான போசணைக் கூறுகளை மாற்றியமைத்து விடுகின்றன. எனவே, உருளைக்கிழங்கை உணவில் சேர்த்துக்கொள்ளும்போது மேற்கூறப்பட்ட விடயங்களைக் கருத்திற் கொண்டால் சுவையாக உண்டு ஆரோக்கியமாக வாழலாம்.

டாக்டர். யயோஜனி லக்ஸ்மன்,