கதாநாயகர்களாக ஆகும் கனவில் வில்லன்களாக மாறிய.. : Dr.சி.சிவன்சுதன்

புகைத்தலுக்கும் போதைப்பொருட்கள் மற்றும் குடிவகைகளுக்கும் அடிமையாகி வருகின்றவர்களின் எண்ணிக்கை எமது பிரதேசங்களில் வேகமாக அதிகரித்து வருவதற்கு என்ன காரணம்? ஒரு காலத்தில் கல்வியிலும் கலை, கலாசாரத்திலும் நற்பண்புகளிலும் வீரத்திலும் பெயர் பெற்றிருந்த எமத சமூகம் ஒரு பிழையான திசையை நோக்கி செல்ல தலைப்படுகிறதோ என்ற ஏக்கம் எழுந்திருக்கின்றது.

புகையிலையானது ஆபத்தான உயிர்க்கொல்லி, மனிதனின் ஆழுமையையும், ஆரோக்கியத்தையும் ஆட்டம் காணச்செய்து அழித்துவிடும் ஓரு ஆயுதம். ஆண்டுதோறும் 60 லட்சம் மக்கள் உலகளாவிய அளவில் புகையிலையின் தாக்கத்தால் மரணித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது ஒரு வேதனையான உண்மை.

50க்கும் அதிகமான ஆபத்தான இரசாயன பொருட்கள் கொண்டுள்ள இந்த புகையிலையானது பாரிசவாதம், மரடைப்பு, நுரையீரல் பழுது, பலவகையான உடல் புற்றுநோய்கள், உயர் குருதி அமுக்கம், மனக்குழப்பங்கள், ஆண்மைக்குறைவு, பல தொற்றுநோய்கள் போன்ற பல சுகாதாரப் பிரச்சினைகளுக்கு வித்திட்டு தாம் எரிவது போலவே மனிதனின் சுகத்தையும் எரித்து சாம்பலாக்கும் ஒரு பொது எதிரி என்பது நாம் அனைவரும் அறிந்த விடயம்.

குடிக்கும் ஒவ்வொரு சிகரெட்டுக்களும் மனிதனின் வாழ் நாளில் 12 நிமிடங்கள் குடித்து விடுகின்றன என கணிக்கப்படுகிறது. புகைத்தலுக்கும் போதைப்பொருட்கள் மற்றும் குடிவகைகளுக்கும் அடிமையாகி வருகின்றவர்களின் எண்ணிக்கை எமது பிரதேசங்களில் வேகமாக அதிகரித்து வருவதற்கு என்ன காரணம்?

மிருகங்களிலும் பார்க்க கேவலமான விடயங்களையும் செய்யத்துணியும் மனிதர்கள் கூட்டம் எமது சமூகத்திலிருந்தும் உதித்திருக்கிறார்கள் என்ற உண்மை எம் அனைவருக்கும் தலை குனிவை ஏற்படுத்தி நிற்கிறது.

மக்கள் இவ்வாறான தீய பழக்க வழக்கங்களிற்கு அடிமையாகி போவதற்கான அடிப்படை காரணங்கள் என்ன? இவ்வாறான மனிதர்கள் எதிர்காலத்தில் தோன்றாமல் இருக்க என்ன செய்யலாம்? புகைத்தலுக்கும், போதைப் பொருட் பாவனைக்கும், குடிவகைகளுக்கும் அடிமையாகிப் போகும் சந்தர்ப்பங்கள் வேண்டுமென்றே தோற்றிவிக்கப்படுகின்றனவா? இவ்வாறான நிலைமைகளை எவ்வாறு எதிர் கொள்ளப் போகின்றோம்?

புகையிலை பயிர்ச்செய்கை, சிகரெட் உற்பத்தி, விற்ப்பனை போன்றவற்றின் மூலம் கிடைக்கும் வருவாயில் பல குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அது பல கம்பனிகளுக்கும் அரசாங்கங்களுக்கும் பெரும் வருவாயை
ஈட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. நாம் நோயை விலை கொடுத்து வாங்குவதற்கு ஆர்வமாக இருக்கின்றோம். மனித உயிர்களின் மீதும் ஆரோக்கியத்தின் மீதும் இந்த வியாபாரம் தொடர்கின்றது. இதனை முடிவுக்கு கொண்டு வர எங்கே தொடங்கி எங்கே முடிப்பது?

திரைப்படங்களில் குடித்து, புகைத்து இன்னும் பல வில்லத்தனங்கள் செய்பவர்கள் தான் கதாநாயகர்களாக சித்திரிக்கப்படுகின்றார்கள். இந்த திரைப்படங்களை பார்க்கும் சின்னஞ்சிறுசுகளின் மனத்திலே இவ்வாறான செயல்கள் செய்வது ஒரு பெருமைக்குரிய வீரச் செயல் என்ற தப்பான அபிப்பிராயம் ஆழமாகப்பதிந்துவிடுகின்றது. இந்த மாயையை நம்பி எமது இளம் சந்ததியினர் தாம் கதாநாயகர்களாக நினைத்து வில்லன்களாக மாறி வில்லங்க
விளைவுகளுக்கு ஆளாகி விடுகின்றனர். இத்தகைய சிக்கலான நிலைமையில் இருந்து மீட்சிபெற நாம் ஒவ்வொருவரும் என்ன செய்யலாம் என்று சிந்திக்க வேண்டிய தேவை இருக்கின்றது.

சிறுவர்களை சரியான முறையில் வழி நடத்துவதற்கு பெற்றோரினதும் ஆசிரியர்களினதும் பங்களிப்பு முக்கியமாகின்றது. மக்களை ஆரோக்கியமான திசயில் வழி நடத்த சமூக பெரியவர்களின் பங்களிப்பு அதிகமாக தேவைப்படுகின்றது. மனிதர்கள் இறை நம்பிக்கை உள்ளவர்களாகவும் சமூக பொறுப்புள்ளவர்களாகவும் வளர்த்தெடுக்க சமூக பெரியவர்களின் பெரு முயற்சி தேவையாகி நிற்கின்றது.

தீய விடயங்களுக்கு மக்கள் அடிமையாகாமல் தடுக்கும் மருத்துவதுறையினரின் தெடர்ச்சியான விழிப்புணர்வு நிகழ்வுகள் முக்கிய தேவையாக விளங்குகின்றன.

மக்களின் மன நிலையில் மாற்றம் ஏற்பட ஊடகத்துறையினரின் பங்களிப்பு முக்கியம் பெறுகின்றது. அரசமட்டத்திலும், நிர்வாகத்துறை, காவற்றுறை மட்டத்திலும், சில தீர்க்கமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய தேவை இருக்கிறது. கலைத் துறையினர் சமூக சீரழிவு திரைப் படங்கள், நாடகங்களுக்கு மாற்றீடாக ஆரோக்கியமான கலைப் படைப்புகளை உருவாக்க வேண்டும்.

எனவே அனைத்து தரப்பினரதும் ஒன்றுபட்ட கூட்டு முயற்சியின் மூலம் நாம் ஆரோக்கியமான திசையை நோக்கி நகரமுடியும்.

Dr.சி.சிவசுதன்

பொது வைத்திய நிபுணர்.