நீரிழிவு நோய்க்கு அதிகம் உள்ளாகுபவர்கள் யார்? Dr.ந.சுகந்தன். பொது வைதித்திய நிபுணரும், சிரேஷ்ட விரிவுரையாளரும்

புள்ளி விபரங்களின் படி நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கையானது மிக வேகமாக அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இவ் அதிகரிப்பானது அபிவிருத்தியடைந்த மற்றும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளை பொருளாதார ரீதியாகவும் பாதிப்படையச் செய்கின்றது. 26 மில்லியன் நீரிழிவு நோயாளர்கள் தற்போது அமேரிக்காவில் இருக்கிறார்கள். இது அந்த நாட்டின் மொத்த சனத்தொகையின் 8.3 வீதமாக இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட தொகையானவர்கள் நீரிழிவு நோயின் குணங்குறிகளின்றித் தமக்கு நீரிழிவுநோய் இருப்பதென்று தெரியாமல் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். மேலும், நீரிழிவு நோய் ஆனது உடலின் எல்லாப் பகுதிகளையும் பாதிப்படையச் செய்வதால் ( உதாரணமாக பாரிசவாதம், இருதய நோய், சிறுநீரக வருத்தம், கண்பார்வை அற்றுப் போதல்) இது பெரும்பாலானவர்களின் வாழ்க்கைத்தரத்தைப் பாதிப்பது மட்டுமன்றி, அவர்களின் இறப்புக்கும் காரணமாக அமைகிறது.

நீரிழிவு நோய்க்கு அதிகம் உள்ளாகுபவர்கள் யார்?

பின்வரும் காரணிகள் உடையவர்கள் நீரிழிவு நோயற் பாதிக்கப்படுகின்றமைக்கான சந்தர்ப்பம் அதிகமாகக் காணப்படுகின்றது. அவையாவன.

குளுக்கோசின் அளவு இரத்தத்திற் சற்று அதிகமாக இருத்தல், 45 வயதிற்கு மேற்ப்பட்டவர்கள், நெருங்கிய குடும்ப உறவினர்களுக்கு நீரிழிவு இருத்தல், உடல் நிறை அதிகமாக இருத்தல், உடற்பயிற்சி செய்யாமை, கர்ப்பகாலத்தில் நீரிழிவு நோய் வந்திருத்தல்,

நீரிழிவு நோய்க்கு முந்திய நிலை ( Pre Diabetes)

இது நீரிழிவு நோய்க்கு முந்திய நிலையாக இருந்த போதும் இந்த நிலையானது உடம்பின் உறுப்புக்களைக் கருதத்தக்க அளவுக்குப் பாதிப்படையச் செய்கின்றது.

உதாரணமாக நீரிழிவு நோய்க்கு முந்திய நிலை உடைய ஒருவருக்கு இருதயய வருத்தம் (Heart Attack) வருவதற்காகன சந்தர்ப்பம் சுகதேகியுடன் ஒப்பிடும்போது ஒன்றறை மடங்கு அதிகமாகும். எனவே இந்த நிலையைப் புறக்கணிக்காது உரிய முறைகளைக் கையாண்டு சீனியின் அளவைக் கட்டுப்படுத்த வேண்டும்.

இவ்வாறு கட்டுப்படுத்துவதன் மூலம் நீரிழிவு நோய் வருவதை 58 வீதத்தால் தடைசெய்யவோ அல்லது பிற்போடவோ முடியும்.

எவ்வாறு நீரிழிவுக்கு முந்திய நிலையை உறுதிப்படுத்துவது.?

இரத்தத்தில் உள்ள குளுக்கோசின் அளவை அளப்பதன் மூலம் இதை உறுதி செய்ய முடியும்.

Fasting Plasma Glucose <100mg/dl –Normal Fasting Plasma Glucose >100 – 126mg/dl – Pre diabetes

Fasting Plasma Glucose > 126mg/dl – Diabetes mellitus

நீரிழிவு நோய் வராது தடுப்பது அல்லது பிற்போடுவது எவ்வாறு?

நீரிழிவு நோய் இல்லாமல் ஆனால் நீரிழிவு நோய்க்கான காரணிகளைக் கொண்டவர்கள் நீரிழிவுக்கு முந்திய நிலை வராமலும் அதேபோல நீரிழிவுக்கு முந்திய நிலையை உடையவர்கள் நீரிழிவு நோய் வராமல் தடுப்பதற்கும் அல்லது பிற்போடுவதற்கும் பின்வரும் முறைகளைக் கையாள வேண்டும்.

உடற் பருமன் கூடியவர்கள் நிறையைக் குறைத்தல் வேண்டும்.
உணவுப் பழக்கத்தில் மாற்றங்களைக் கொண்டுவருதல்
ஒழுங்காக உடற்பயிற்சியில் ஈடுபடுதல்
உடற்பயிற்சி

பல முறைகளில் உடற்பயிற்சிகளைச் செய்யமுடியும். அவற்றுள் சில வேகமாக நடத்தல், ஓடுதல், விளையாடுதல், நீந்துதல், யோகா செய்தல், பாரந்தூக்கல் போன்ற சிலவாகும். மேலும் ஒரு நாளைக்கு அண்ணளவாக 30 நிமிடப்படி ஆகக் குறைந்தது ஒரு வாரத்தில் ஐந்து நாள்களாவது செய்ய வேண்டும்.

உணவுப் பழக்கம்

உணவுப் பழக்கத்தில் மாற்றங்களைக் கொண்டு வருவதன் மூலம் சுகதேகியாக நீண்ட நாள்கள் நோய் இன்றி வாழமுடியும். உதாரணமாக பின்வரும் உணவுகளை இயன்றவரை குறைப்பது நல்லது.

சீனியை அதிகம் கொண்ட உணவுகள் – இனிப்புப் பண்டங்கள்
உடம்புக்குக் கேடான – கொழுப்பைக் கொண்ட உணவுகள் – பட்டர், ஆடை நீக்காத பால், மாட்டிறைச்சி, தேங்காய் எண்ணெய்
அதிக உப்புக் கொண்ட உணவுகள்
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

உங்கள் வயது 45 க்குமேல் அல்லது உங்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான காரணி / காரணிகள் இருப்பின் உடனடியாக உங்களுடைய குளுக்கோசின் அளவை இரத்தத்தினை சோதியுங்கள் குளுக்கோசின் அளவு சாதாரண அளவு எனின் மீண்டும் நீங்கள் இதே பரிசோதனையை 3 வருடத்தால் திருப்பிச் செய்ய வேண்டும்.

உங்களுடைய குளுக்கோசின் அளவு நீரிழிவுக்கு முந்திய நிலையில் இருந்தால் நீங்கள் இப்பரிசோதனையை மீண்டும் 1- 2 வருடத்தில் திருப்பிச் செய்ய வேண்டும். அதே நேரம் நீங்கள் எல்லோரும் நல்ல உணவுப்பழக்கத்தையும், ஒழுங்கான உடற்பயிற்சியையும் தொடர்ந்து கடைப்பிடிப்பதன் மூலம் நீரிழிவு நோயில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

Dr.ந.சுகந்தன்.
பொது வைதித்திய நிபுணரும், சிரேஷ்ட விரிவுரையாளரும்
யாழ் போதனா வைத்தியசாலை