உயிர்களையும் உரிமைகளையும் காக்க நாம் என்ன செய்யலாம? : Dr.சி.சிவன்சுதன்

ஓர் உயிரின் முடிவிலே எவ்வளவு துயரங்கள்? எத்தனை கனவுகளின் சிதைவுகள்? இந்த துயரங்களையும் சிதைவுகளையும் தடுத்து நிறுத்த நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?

எத்தனை இறப்புக்களை வைத்தியசாலைகள் கண்டிருக்கும். உயிர் பிரியும் தறுவாயிலும் அதன் பின்னரும் சுற்றி
நின்று கதறும் சுற்றத்தினதும் உறவுகளினதும் வேதனையை ஜீரணித்துக் கொள்ள எத்தனை நெஞ்சுரம் வேண்டும். நித்தமும் நடக்கும் இந்த நிகழ்வுகள் எதனைச் சொல்கின்றன? இவற்றிலே தவிர்க்கப்பட்டிருக்கக் கூடிய இறப்புக்கள் எத்தனை? இவற்றை எம்மால் ஏன் தவிர்க்க முடியாமல் போனது?

இளம் மனைவியையும் பிஞ்சுக் குழந்தைகளையும் தவிக்க விட்டு மாரடைப்பால் மரணித்துக் கொண்டிருப்பவர்கள் எத்தனை பேர்? ஈரல் நோய் காரணமாக இரத்த வாந்தியுடன் அனுமதிக்கப்பட்டு இறந்தவர்கள் எத்தினைபேர்? தீடிரென்று ஏற்ப்பட்ட பாரிசவாதத்தினால் மறைந்து போனவர்கள் எத்தனை பேர்? தொழிலுக்கு போகும் பாதையிலே வாகனத்தால் மோதுண்டு மடிந்து போனவர்கள் எத்தனை பேர்? சமூக விரோத கும்பல்களினால் சட்டத்துக்குப்
புறம்பான விதத்திலே கொல்லப் பட்டவர்கள் எத்தனை பேர்? உடல் பருத்து நீரிழிவு , உயர்குருதி அமுக்கம் ஏற்பட்டு மரணிப்பவர்கள் எத்தனை பேர்? கலாசார சீர்கேடுகள் காரணமாக சிக்கல்களுக்கு ஆட்பட்டு மனவேதனை யுடன் மரணிப்பவர்கள் எத்தனை பேர்? சுற்றாடல் மாசடைவதால் தொற்று நோய்கள் மற்றும் புற்று நோய் என்பன ஏற்பட்டு இறந்து கொண்டிருப்பவர்கள் எத்தனை பேர்? வாழ்க்கையில் பற்று அற்றுப்போய் இயந்திர வாழ்வு வாழ்ந்து
இறந்து போனவர்கள் எத்தனை பேர்? வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உறவினர்களின் ஆதரவோ அரவணைப்போ இன்றி அன்புக்கு ஏங்கி மரணித்துப்போகும் முதியவர்கள் எத்தனை பேர்? முடிவின்றி தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த இறப்புக்களுக்கு எல்லாம் யார் பொறுப்பு? யார் மீது குற்றம் சுமத்துவது?

சோறு தீத்துவதை ஒரு சம்பிரதாய சடங்காகவே கொண்டாடி எம்மை சோற்றிற்கும் மாப்பொருளுக்கும் அடிமையாக்கி நோயாளியாக்கிய எமது சமுதாயத்தின் குற்றமா? மக்களுக்கு போதுமான மருத்துவ சுகாதார அறிவை புகட்டத்தவறிய மருத்துவத் துறையினரின் குற்றமா? ஆரோக்கியமற்ற உணவுப் பொருள்களையும் பானங்களையும் அருமருந்து போல போலியாக விளம்பரம் செய்ய இடமளித்த ஊடகத்துறையினரின் குற்றமா?

உடற்பயிற்சி ஓர் உயிர்க்காப்பு பயிற்சி என்பதை சிறுவர்கள் மனதிலே பதிப்பிக்கத் தவறிய பெற்றோர்களின் குற்றமா? நோயுற்று வைத்தியசாலைக்கு வரும் பொழுது அதி உச்சக் கவனிப்பு வசதிகளையும் கவனிப்பையும் உறுதிப்படுத்தாத சுகாதாரத் துறையினரின் குற்றமா? உயிர் கொல்லிகளான சிகரெட், சுருட்டு, பீடி போன்றவற்றை கடைகளிலே விற்பனை செய்வதற்கு அனுமதித்தவர்களின் குற்றமா? போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த முடியாது போன பொலிஸாரின் குற்றமா? தீய பழக்கங்களையும் சமுதாய சீரழிப்பு நடவடிக்கைகளையும் எம்மிடையே பரப்ப அனுமதித்துக் கொண்டிருக்கும் எமது சமுதாயக் கட்டமைப்பின் குற்றமா? ஒருவரை பசியாத பொழுதும் உண்ணுமாறு வற்புறுத்துவதை ஓர் உபசரிப்பு முறையாகக் கருதும் எமது கலாசாரத்தின் குற்றமா?

எமது மக்களிடையே அன்பு, அமைதி, ஆதரவு, மன்னிக்கும் மனோபாவம், துயர் துடைப்பு, தியானம் போன்ற நல்ல விடயங்களை வேரூன்ற வைக்கத் தவறிய எமது மதங்களின் குற்றமா? பொன்கொழிக்கும் விளைநிலத்திலே உயிர் கொல்லிகளான புகையிலையை பயிரிட்டும் நஞ்சு தெளிக்கப்பட்ட மரக்கறி, பழ வகைகளை சந்தையிலே விற்பனை
செய்தும் வருகின்ற விவசாயிகளின் குற்றமா? சந்து பொந்துகள் எங்கும் சாராயக்கடைகள் திறக்க அனுமதித்தவர்களின் குற்றமா? சுற்றாடல் பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தத்தவறிய கற்றறிந்தவர்களின் குற்றமா?

சமுதாய சீர்கேடுகளுக்கு வழிகோலும் ரி.வி தொடர் நிகழ்ச்சிகளுக்கு அடிமையாகி இளம் சமுதாயத்தினரையும் அதற்கு பலிகொடுத்துக் கொண்டிருக்கும் குடும்பத்தவர்களின் குற்றமா? தெருவிலே வாகனம் செலுத்து வதற்கு தகுதி அற்றவர்களையும் தகுதி அற்ற வாகனங்களையும் தொடர்ந்து அனுமதித்துக் கொண்டிருக்கும் வீதி ஒழுங்குக்குப் பொறுப்பானவர்களின் குற்றமா?

தொடர்ந்து இவ்வாறு எமது மனதில் எழும் கேள்விகளுக்குவிடை காண வேண்டிய கடமையும் உரிமையும் எம் அனைவருக்கும் இருக்கிறது.

மனிதனது மூளையில் சிந்தனை ஓட்டமும் தொழிற்பாடும் வடிவமைக்கப்பட்டிருக்கும் விதம் உண்மையிலேயே விசித்திரமானது. மனித மனமானது பிறர்விடும் தவறுகளை துல்லியமாக அடையாளப்படுத்துவதில் நிபுணத்துவம் மிக்கதாகவும், தான் விடும் தவறுகளை புரிந்து கொள்ளும் அல்லது ஏற்றுக் கொள்ளும் வல்லமையில் பின்தங்கியதாகவுமே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இது இயற்கை பூமியில் தன்னை நிலை நிறுத்துவதற்கும், நல்ல
முறையில் தப்பிப் பிழைப்பதற்கும்தான் செய்வது சரி என்று நிறுவவேண்டிய தேவை இருக்கிறது. இதனை உயிர்களின் கூர்ப்பின் தக்கனப்பிழைத்தல் என்ற கோட்பாட்டின் மூலம் உறுதி செய்ய முடியும்.

இதனை மனித வாழ்க்கைக்கான போராட்ட யுத்தி என்றும் சொல்லலாம். மனிதனுக்கு இயற்கையாகவே அமைத்து விட்ட இந்ததான் விடும் தவறுகளை தானே புரிந்து கொள்ளத் தெரியாத தன்மையே சுகாதார மேம்பாட்டுக்கும் மனிதகுல மேம்பாட்டுக்கும் பெரும் தடைக்கல்லாக இருக்கிறது.

மதக்கோட்பாடுகளும் மனித நாகரிக வளர்ச்சியும் மனிதனை சரியான, நீதியான முறையிலே சிந்திக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வருகின்றன.

நாம் விடும் தவறுகளை நாமே அடையாளப்படுத்தி எம்மை நாமே திருத்திக் கொள்ள முயலும் பயிற்சியானது உண்மையிலேயே மிகவும் கடினமானது. ஆனால் இதுதான் மனிதனை மனிதத்துவம் மிக்கவனாக மாற்றும் ஒரு முக்கியமான இயல்பாக அமையும். இந்த மனிதத்துவ இயல்பு எம்மிலே வளர்ச்சி காணும் பொழுது பல முடிச்சுக்கள் தாமாகவே அவிழ்ந்து விடும்.

அந்த வகையிலே நாம் சிந்திக்கும் பொழுது தவிர்க்கப்படக் கூடிய மரணங்களை தவிர்ப்பதற்கும் நாம் ஒவ்வொருவரும் எம்மை மாற்றிக் கொள்வதற்கு நிறைய இடம் இருக்கிறது என்பது புலப்படுகிறது. நாம் மற்றவர்களை திருத்த முயல்வது போலவே எம்மையும் சற்று மாற்றிக் கொள்ள முயல் வோம்.

அதன் மூலம் பல அநியாயமரணங்களை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து தவிர்க்க முடியும். இந்தப் போராட்டத்தின் வெற்றிக்காக நாம் அனைவரும் சிந்திப்பதற்கும் செய்வதற்கும் நிறையவே இருக்கின்றன.

நாம் அனைவரும் ஆரோக்கியத்துடன் வாழும் உரிமையைகாக்க எம்மை நாமே சரியான திசையில் மாற்றிக் கொள்ள முயல்வோம்.

Dr.சி.சிவன்சுதன்
பொது வைத்திய நிபுணர்.