வாழ்வில் வெற்றிபெற்றிட …. 1 : Dr.சி.சிவன்சுதன்

வெற்றி இலக்கை நோக்கி வாழ்வை அமைதியாக நகர்த்திச் செல்வதற்கு நாம் என்ன செய்யவேண்டும்? தோல்விகள்
எம்மை தொடராமல் இருக்க என்ன செய்யலாம்? வாழ்வில் எமது வெற்றி இன்னொருவரின் தோல்வியாக அமைந்து விடாமலிருக்க என்ன நடவடிக்கைகள் எடுக்க முடியும்? என்பது போன்ற தொடரான கேள்விகள் எம்முள்ளே எழுந்து கொண்டே இருக்கின்றன.

மனிதன் என்றால் யார்? என்று ஒரு இளம் மனிதனிடம் வினவியபொழுது ‘காலையில் சேவல் போல எழுந்து மற்றவர்களையும் கூவி எழுப்பி காகம் போல குளித்துவிட்டு குரங்குபோல லபக் லபக் என்று உண்டு விட்டு பந்தயக் குதிரைபோல வேகமாக ஓடி வேலைக்குப் போய் மாடுமாதிரி உழைத்து வீடுவந்து குடும்பத்தவருடன் நாய் போலக் குரைத்து விட்டு அன்றாட விடயங்கள் தெரியாமல் ஆந்தைபோல முழித்து இரவு உணவை முதலைபோல உண்டுவிட்டு எருமை மாடு போலத்தூங்குபவன் தான் மனிதன்’ என்று கருத்துப்பட வரைவிலக்கணப்படுத்த முயன்றான்.

இந்த வரைவிலக்கணம் விசித்திரமாக இருந்தாலும் எம்மில் பலருக்கு பொருந்தக் கூடியதாக இருக்கிறது. இது சம்பந்தமாக சிந்திக்கும் பொழுது சிந்திப்பதற்கும் ஓய்வுக்கும் நேரமின்றி மனநிறைவு, மன மகிழ்ச்சி என்பவற்றை கருத்தில் எடுக்காது ஒரு இயந்திர வாழ்க்கை வட்டத்துக்குள் சிக்கி எந்தவித திட்டமிடலும் இன்றிவாழ்வு தானாக நகர்ந்து சென்றுகொண்டிருக்கிறதா என்று எண்ணத்தோன்றுகிறது.

இதனை நெறிப்படுத்திவழிப்படுத்துவது எவ்வாறு? மிருகங்களை ஒத்தவாழ்க்கை முறையிலிருந்து மனிதத்துவமான வாழ்க்கை முறைக்கு எம்மை நாம் எப்படி மாற்றிக் கொள்ள முடியும். இவற்றினூடே வெற்றி இலக்கைநோக்கி நாம் எவ்வாறு நகர முடியும்.

நாம் எவருக்கும் தாழ்ந்தவர்கள் அல்ல. அதே சமயம் நாம் மற்றவர்களிலும் பார்க்க உயர்ந்தவர்களும் அல்ல. அத்துடன் எம்மைப் போன்றும் வேறுயாரும் இல்லை. எனவேநாம் ஒவ்வொருவரும் தனித்துவமான தன்னிகரில்லாத தனிமனிதர்கள்.
இந்த அடிப்படையிலேயே நாம் எமது வெற்றிப் பாதையை செப்பனிடவேண்டியிருக்கிறது. வாழ்வின் வெற்றிக்கு மனமகிழ்வு, அமைதி, மன நிறைவு என்பனவே அடிப்படையாக அமைவதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே இந்த அடிப்படைகளை இலக்கு வைத்து நாம் நகரவேண்டிய தேவை இருக்கிறது. எமது வாழ்வின் தராதரம் எமது சிந்தனையின் தராதரத்தில் தங்கிநிற்கின்றது.

எமது முயற்சிகள் வெற்றிபெறலாம். பெற்றால் மகிழ்ச்சி. அவைவெற்றி பெறாவிட்டால் அவற்றிலிருந்து கற்றுக்கொள்ளலாம். தோல்வி போன்ற அந்ததோற்றப்பாடுகள் தான் உண்மையில் நாம் கற்றுக்கொள்வதற்கு கிடைத்த சந்தர்ப்பங்கள். அவற்றை வாழ்வின் தோல்வி என்று கருதி விடமுடியாது. வாழ்வில் ஏற்படும் பின்னடைவுகள், தடங்கல்கள் மனிதனைபக்குவப்படுத்தும், நெறிப்படுத்தும் பலவற்றைகற்றுக் கொடுக்கும்…

தொடரும்…

Dr.சி.சிவன்சுதன்
பொதுவைத்தியநிபுணர்.