பளிச்சிடும் பற்களின் ஆரோக்கியம் பற்றி சிந்தித்திடுவோம் : திருமதி .சுரேஸ் குயிலினி

பற்கள் எமக்கு அழகைக் கொடுப்பதுடன் , சரியான உச்சரிப்புக்கும் , உணவினை மென்று உண்பதற்கும் மிகவும் முக்கியமானவை. இப்படிப்பட்ட முக்கியம் வாய்ந்த பற்களின் ஆரோக்கியத்தைப் பற்றி நாம் சிந்திக்கவேண்டாமா?

 1. குழந்தை பிறந்து முதலாவது பல்தென்படத் தொடங்கிய நாளிலிருந்து ஒருவர் தனது வாழ்நாள் வரை நாள் ஒன்றுக்கு இரண்டு தடவைகளாவது பல்துலக்குதல் வேண்டும்.
 2. குறிப்பாக வாய்க்குழிக்குள் நான்குபற்கள் தோன்றிய நாளிலிருந்து கட்டாயமாக பற்தூரிகையைப் பயன்படுத்தி பல் துலக்க வேண்டும்.
 3. குழந்தைகள் ஒரு வயதினை அடைந்த பின்பு புளோரைட் அடங்கிய பற்பசையினை சிறியளவில் தூரிகையிலிட்டு துலக்குதல் ஒவ்வொரு பெற்றோரினுடைய முக்கிய கடமையாகும்.
 4. தினமும் ((Fluride ) குறைந்தது இரண்டு தடவைகளாவது புளோரைட் அடங்கிய பற்பசை கொண்டும், பற்தூரிகை கொண்டும் பற்களை சரியான முறையில் பற்சுத்தம் செய்வது ஒவ்வொருவரினதும் இன்றியமையாத கடமையாகும். குறிப்பாக இரவில் படுக்கைக்குச்செல்லும் முன்னர் கட்டாயமாக பல்துலக்க வேண்டும்.
 5. உணவு அருந்தியவுடன் பல்துலக்குவது தவறான ஒரு முறையாகும். ஏனெனில் உணவருந்தியவுடன் எமது வாயில் அமிலத்தன்மை காணப்படும். இவ் அமிலத்தன்மை ஆனது எமது வாய்க்குழியை மென்மையாக்க வல்லது. உணவருந்திய உடனே பல்துலக்குகையில் பல் மிளிரிகழர ஏதுவாகஅமையும் எனவே தான் சாப்பிட்டு ஒரு மணித்தியாலத்தின் பின் பற்களை பற்தூரிகை கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
 6. உணவருந்தியவுடன் ஒவ்வொரு தடவையும் வாயினை நன்றாக நீர்கொண்டு கொப்புளித்தல் வேண்டும்.
 7. பற்களை புளோரைட் அடங்கிய பற்பசை கொண்டு துலக்கிய பின் கடுமையாக  கொப்புளிக்கக்கூடாது. ஏனெனில் பற்பசையில் இருக்கும் புளோரைட் ஆனது பற்சூத்தை வராமல் பாதுகாப்பளிக்கும்.இது பல்துலக்கிய 1மணித்தியாலம் தொடக்கம் 2 மணித்தியாலங்கள் வரை பற்களில் படிந்து பற்களுக்கு பாதுகாப்பைஅளிக்கின்றது.  கடுமையாக கொப்புளிப்பதன் காரணமாக பற்களிலிருந்து கழுவிச் செல்லப்படுவதால் புளோரைட் பற்களிலிருந்து அகற்றப்படும்.
 8. மிகவும் சூடான, மிகவும் குளிரான பானங்கள் பற்களின் ஆரோக்கியத்திற்கு உகந்தவையல்ல. இயன்றவரை மிகவும் சூடான, மிகவும் குளிரான பானங்கள் அருந்துவதைத் தவிர்த்தல் வளமான பற்களின் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.
 9.  ஊட்டச்சத்துமிக்க ஆரோக்கிய மான உணவுகளை உட்கொள்ளுதல் பற்களின் ஆரோக்கியத்திற்கு பக்கபலமாக அமையும். அதாவது பால், முட்டை, பழங்கள், பச்சைக்காய்கறிகள்,  பருப்பு, கீரை வகைகள் பற்களுக்கு மட்டுமல்ல எமது உடலையும் ஆரோக்கியமாக வைக்கத்தக்க உகந்த உணவுகளாகும்.
 10. ஒட்டும் தன்மையான உணவுகளைத் தவிர்ப்பதன் வாயிலாக பற்களின் ஆரோக்கியத்தை மேலும் வளமாக்கலாம். அதாவது கடலை, ஐஸ்கிறீம் , முந்திரிப்பருப்பு, சொக்லேட் வகைகள் , கேக் போன்ற உணவுகள் இவ்வகையான உணவுப்பொருட்கள் உண்டவுடன் உடனடியாக
  வாயினை பற்தூரிகை கொண்டு சுத்தம் செய்யவேண்டும். மிகவும் இனிப்புத் தன்மையான உணவுகளும் பற்களின் ஆரோக்கியத்துக்கு உகந்தவையல்ல. இனிப்புப் பண்டங்கள் உண்டபின் நீரினை அருந்த வேண்டும்.
 11. வெற்றிலை, பாக்கு உபயோகித்தல் பற்களின் ஆரோக்கியத்திற்கு உகந்தவையல்ல. இது வாய்ப் புற்றுநோயையும் ஏற்படுத்தவல்லது. எனவே இவ்வாறான பழக்கங்களில் இருப்பவர்கள் இன்றிலிருந்தே விடுபடல் நன்மை பயக்கும்.
 12. பல் ஈறுகளுக்கிடையில் அடைந்திருக்கும் உணவுப்பொருட்களை கூரான ஊசி,குச்சி கொண்டகற்ற எத்தனிக்கக் கூடாது. பற்தூரிகையின் உதவியுடன் மெதுவாக எடுக்கவேண்டும். வாயினை நன்றாக கொப்புளித்தல் மூலமும் வெளியேற்றலாம்.
 13.  அடிக்கடி சிற்றுண்டி (snacks) எடுத்தலை குறைத்துக் கொள்ளல் நன்று. அதாவது பிஸ்கட் வகைகள் ,சிப்ஸ் (Chips) போன்றவை.
 14. மூன்று மாதங்களிற்கு ஒருமுறையாவது பற்தூரிகைகள் மாற்றப்பட வேண்டும். அதேநேரம் ஒரே வகையான fluride அடங்கிய பற்பசைகளைத் தொடர்ந்து பாவிக்காமல் அடிக்கடி fluride
  அடங்கிய பற்பசைகளை மாற்றிமாற்றிப் பாவித்தல் நன்மை பயக்கும்.
 15. புளோரைட் அடங்கிய சுத்தமான நீரை அருந்துதல் பற்சூத்தை வராமல் பாதுகாப்பளிக்க ஏதுவாகும்.
 16. புதிதாகப் பறிக்கப்பட்ட பழவகைகள், மரக்கறிவகைகள் வாயில் உமிழ் நீர்ச்சுரப்பியைத் தூண்டத்தக்கவை. இவையும் சீனிசேர்க்கப்படாத காப்பி, தேநீர் சீனி சேர்க்கப்படாதகப் ((sugar –free gum) உணவுப் பொருட்கள் பற்களில் ஒட்டுப் பட்டிருப்பதை அகற்றவல்லன.
 17. பல் வைத்தியரை கிரமமான முறையில் அணுகி பற்களின் ஆரோக்கியத்தை உறுதிசெய்வது ஒவ்வொரு வருடையதும் அத்தியாவசியக் கடமையாகும். பல் வைத்தியரின் ஆலோசனைப் படி சிகிச்சை தேவைப்படுபவர்கள் அதனை முழு ஈடுபாட்டுடன் முழுமையாகப் பெற்றுக்
  கொள்ளல் பற்களின் ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும். பல்துலக்கிய பின்னரே உணவு உண்ணலோ பானங்கள் அருந்தலோ வேண்டும்.
 18.  ஆரோக்கியமான பற்சுகாதாரம் ஒருவரின் நலமான வாழ்விற்கு பக்க பலமாக அமையும். எனவே இன்று முதல் பற்களின் ஆரோக்கியத்தில் பங்கெடுத்து அழகான முத்துப் போன்ற பற்களை பேணிடுவோம். பிணிநெருங்காது எம்மை காத்திடுவோம்.

திருமதி .சுரேஸ் குயிலினி
தாதிய உத்தியோகத்தர்
போதனா வைத்தியசாலை,
யாழ்ப்பாணம்.