வாழ்வில் வெற்றிபெற்றிட …. 2 : Dr.சி.சிவன்சுதன்

நாம் எமது உண்மையான சிந்தனைகளுக்கும் நாம் செய்யும் தொழிலுக்கும் தலைவணங்குவோமாயின் பிறரிடம் மண்டியிடவேண்டியதேவை இருக்காது.ஆனால் எம் மனச்சாட்சிக்கு எதிராக சூழ்நிலைகளுக்கும் அழுத்தங்களுக்கும் மண்டியிடுவோமாக இருந்தால் ஒவ்வொருவரிடமும் மண்டியிட்டு வாழ வேண்டிய பரிதாப நிலை ஏற்படலாம். அப்படியாயின் நாம் யார் சொல்லைகேட்பது? எதன்படி நடப்பது?

பெரியவர்கள் சொல்லுவார்கள்

மனிதன் சொல்ல இறைவன் கேட்பது திருவாசகம்

இறைவன் சொல்ல மனிதன் கேட்பது கீதை

மனிதன் சொல்ல மனிதன் கேட்பது குறள்

மகன் சொல்ல மகேசன் கேட்பது பிரணவம்

ஞானிகள் சொல்ல ஞானிகள் கேட்பது திருமந்திரம்

எம்மனம் சொல்வதை நாம் கேட்பது வாழ்க்கை.

எமது மனச்சாட்சியை புறக்கணித்து நாம் செய்யும் செயல்கள் வெற்றிக்கு வழிவகுக்காது. நாம் எமது மனச்சாட்சி சொல்வதைக் கேட்டு வாழ்க்கையை நெறிப்படுத்தி ஆகவேண்டும். காலநடைமுறைகள் எம்மை ஏளனம் செய்யக்கூடும், புறக்கணிக்கக்கூடும், நோகடிக்கக்கூடும், மோதக்கூடும், இதனூடேநாம் தடம் மாறாது பயணித்து ஆக வேண்டும்.

எமக்குள்ளேயும் எம்மவருக்குள்ளேயும் யாராலும் கண்டுகொள்ள முடியாத பல திறமைகள் புதையுண்டு கிடக்கின்றன. அதனை அடையாளப்படுத்த முயற்சி எடுப்போம். அதைஅத்திபாரமாகக் கொண்டு முயற்சியை தொடருவோம். எமது இலக்கை நோக்கியநகர்வுகள் தான் முக்கிய மானவை. அதனை அடைய நாம் அதிக காலம் எடுப்பதுதோல்வி என்று அர்த்தப்படாது. வாழ்வில் ஒவ்வொருதடங்கலும் ஏற்படும் பொழுது எம் நிலையைமீளாய்வு செய்து நாம் விட்டதவறுகளை அறிந்து திருத்தி எமது வாழ்க்கை பயணத்தை தொடர்வது ஆரோக்கிய நகர்வாக அமையும்.

நாம் செய்யும் அல்லது செய்த தவறுகளை நாமே அடையாளப்படுத்திக் கொள்வது உண்மையிலே கடினமானது. ஆனால் அதுதான் எமது வெற்றிப் பாதையின் பிரதான படிக்கல்லாகவும் அமைகின்றது. பிறர் விடும் தவறுகளை இலகுவில் அடையாளப்படுத்திக் கொள்ளும் திறமை எம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. ஆனால் நாம் விடும் தவறுகளை நாமே அடையாளப்படுத்தி திருந்திக் கொள்ள முயலும் மனநிலை எம்மிடம் இல்லை.அதனை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. இந்த முயற்சி எம்மைவாழ்வின் வெற்றிக்கு இட்டுச்செல்லும் படிக்கற்களாக அமையும்.

நாம் சாம்பலாகிவிடவில்லை, கல்லறைக்குள் இல்லை, கடுமையாகநோய் வாய்ப்பட்டு கட்டிலில் கிடக்கவில்லை, அறிவு மங்கவில்லை, சிந்தனை ஓட்டங்கள் சிதறிப் போகவில்லை. இருந்தும் நாம் அடிக்கடிசோர்ந்துபோக காரணம் என்ன?

தொடரும்.

Dr.சி.சிவன்சுதன்
பொதுவைத்தியநிபுணர்.