பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய தோல்நிற மாற்றங்கள். Dr.ந.ஸ்ரீசரணபவாந்தன்.

புதிதாய் பிறந்த குழந்தையானது, பொதுவாக இளஞ்சிவப்பு நிறமாகக் காணப்படும். ஆனால் சில காரணங்களால் அவர்களின் தோல் சாதாரண இளஞ்சிவப்பு நிறத்தைவிட வேறு நிறங்களாக மாற்றமடையலாம்.

அதிகளவு மெலனின் (Melanin) எனப்படும் நிறப்பொருள் தோலில் இயற்கையாகவே காணப்படின் ( உதாரணம் ஆபிரிக்க குழந்தைகள்) அவர்கள் கடும் நிறம் ( Dark complexion) உள்ளவர்களாக இருப்பார்கள்
தோலில் பிளிறூபின் (Bilirubin) எனப்படும் மஞ்சள் பதார்த்தம் படியுமானால் தோல் மஞ்சள் நிறமடையும். இந்த நிலையைப் பற்றி கீழ் வரும் பந்திகளில் விளக்கப்பட்டுள்ளது.
குருதியில் ஈமோகுளோபின் (Haemoglobin) எனப்படும். சிவப்பு நிறத்துக்கான காரணி குறைவடைந்தால், தோல் வெளிறிக் காணப்படும் இதை நாம் குருதிச்சோகை (Anaemia) எனக் கூறுவோம்.
அதேபோல் குருதியில் ஈமோகுளோபினால் கொண்டுசெல்லப்படும் ஒட்சிசனின் அளவு குறைவடைந்தால், தோல், வாய், உதடு என்பன நீல நிறமடைந்து (Cyanosis) காணப்படும்.
சிலவேளைகளில் குருதியிலுள்ள செங்குருதிக் கலங்களில் (Red Blood Cells) சாதார அளவைவிட அதிகரிப்பின் தோல் கடுஞ்சிவப்பு (Plethoric) நிறமடையலாம்.

மேற்கூறியவற்றில் கடைசி 4 நிலைகளும், பச்சிளம் பாலகர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை. எனவே இந்த மாற்றங்களைப் பெற்றோர் அவதானிப்பின் உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லவேண்டும்.

இனி தலைப்பில் மஞ்சள் எச்சரிக்யென ஏன் குறிப்பிடப்பட்டது என்பதைப் பார்ப்போம். எல்லோருக்கும் சிவப்பு நிறம் ஆபத்தைக் குறிக்கும் என தெரியும் (Red Alert) அதேபோல் பிறந்த குழந்தைகளை எடுத்துக் கொண்டால் தோல் மஞ்சள் நிறமாவதும் ஆபத்தானதே ( Yellow Alert) மஞ்சள் நிறத்துக்கான பிளிறூபின் (Bilirubin) எனப்படும் பதார்த்தம் குருதியில் அளவிற்குகதிகமாகச் சேர்ந்தால் அது தோல் கண், மூளை மற்றும் உடல் உறுப்புக்களில் படியும். முக்கியமாக மூளையில் பிளிறூபின் படியுமானால் கேனிப்ரறஸ் ( Kernicterus) எனும் நிலை உருவாகி பிள்ளையின் மூளை பாதிப்படையலாம். அப்படியான சந்தர்ப்பத்தில் குழந்தை சாந்தமடையாது. உரத்த சத்தத்துடன் அழுது கொண்டேயிருக்கும். அது மட்டுமல்லாது சில சமயங்களில் வலிப்பு ஏற்படுவதோடு, தலையையும் முதுகையும் பின்புறமாக வளைத்த நிலையில் ( Opisthotonus) காணப்படலாம். தோல் மஞ்சள் நிறமடைதலை வேளைக்கே கண்டுபிடித்தால் நிச்சயமாக இந்த நிலை ஏற்படுவதைத் தடுக்க முடியும்.

பொதுவாக பிறந்த குழந்தைகளில் ஏற்படும் தோல் மஞ்சள் நிறமடைதல் (Neonatal Jaundice) நிலையை அது ஏற்படும் காலத்தைப் பொறுத்து மூன்று வகையாக வகைப்படுத்தலாம்.

பிறந்து 24மணி நேரத்துக்குள் மஞ்சள் நிறமடைதல் – இந்த நிலை எப்போதும் ஆபத்தானது. குழந்தை பிறந்து 24 மணி நேரத்துக்கு மஞ்சள் நிறமாக காணப்படின் உடனடிச் சிகிச்சை தேவை.
பிறந்த 24 மணிநேரம் தொடக்கம் 14 நாள்கள் வரை – இந்தக் காலப்பகுதியில் சாதாரணமாக அனைத்து குழந்தைகளுமே சிறிதளவு மஞ்சள் நிறமடைவார்கள். இது சாதாரணமானது (Physiological Jaundice) பிறந்த குழந்தைகளில் அதிகளவில் காணப்படும் செங்குருதிக் கலங்களில் சில அழிவடைவதலே இதற்கு காரணம். இந்த நிலை அதிகளவில் ஏற்படினோ அல்லது வேறு பல காரணங்களாலோ தோல் மஞ்சள் நிறமடைதல் அதிகரிப்பின் அதற்குச் சிகிச்சை தேவைப்படும்.
பிறந்தபின் 14 நாள்களின் பின்னரும் தோல் மஞ்சள் நிறமடைந்து காணப்படல் – இப்படியான சந்தர்ப்பத்திலும் அதற்கான காரணியை கண்டறிந்து தகுந்த சிகிச்சையளிக்க வேண்டும்.

தோல் மஞ்சள் நிறமடைவதற்கான காரணங்கள்

அடிப்படையில் இரு காரணங்கள் பிளிறூபின் எனப்படும் பதார்த்தம் குருதியில் அதிகரிக்கலாம்.

அதிகளவில் பிளிறூபின் உருவாக்கப்படல். – குருதியில் உள்ள செங்குருதிக் கலங்கள் அதிகளவில் உடைந்து. அதிலுள்ள ஈமோகுளோபின் (Haemaglobin) பிளிறூபினாக மாற்றமடையும். இதற்கான மிகப் பொதுவான காரணம் தாயின் இரத்த வகையும், குழந்தையின் இரத்த வகையும் ஒத்துவராத நிலை. உதாரணமாக Rh வகை குருதி வகைப்படுத்தலில் தாய் Ra (-) வர்க்கமாகவும் குழந்தை Ra(+) வர்க்கமாகவும் காணப்படினும் அல்லது A, B, O குருதிவகைப்படுத்தலில் தாய் O வர்க்கமாகவும் குழந்தை A அல்லது B வர்க்கமாகவும் காணப்பட்டால் இரத்த ஒற்றுமை ஏற்படாது. குழந்தையில் அதிகளவிற்கு செங்குருதிக் கலங்கள் அழிய வாய்ப்புண்டு.
பிளிறூபின் (Bilirubin) பதார்த்தம் உடலிலிருந்து வெளியேற முடியாத சந்தர்ப்பங்கள். – உடலில் உருவாகும் பிளிறூபின் பதார்த்தம் ஈரலில் மாற்றமடைந்து பித்தமாக குடலினூடாக மலத்துடன் வெளியேறும். எனவே ஈரல் கலங்களிலோ அல்லது பித்தக் குழாய்களிலோ பிரச்சினை இருப்பின் பிளிறூபின் வெளியேற்றப்பட முடியாமல் உடலில் தேங்க வாய்ப்பு ஏற்படும். குழந்தை பிறந்த பின் 14 நாள்களின் பின்னரும் தோல் மஞ்சள் நிறமாகவும், மலம் மஞ்சள் நிறம் குறைந்து வெள்ளையாகவும் காணப்படின் இந்த நிலைக்கான பரிசோதனைகள் செய்யப்படும். தகுந்த சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். மேலே குறிப்பிட்ட அடிப்படைக் காரணிகளைவிட உடலிலுள்ள தைரொக்சின் (Thyroxine) எனும் ஓமோன் (Hormone) குறைபாட்டினாலும் குழந்தைக்கு கிருமித்தொற்று ஏற்பட்டாலும் தோல் மஞ்சள் நிறமடைதல் ஏற்படும்.

தோல் மஞ்சளாவதற்கான சிகிச்சை முறைகள்

பொதுவாக குருதியிலுள்ள பிளிறூபின் அளவைச் சோதித்து சிகிச்சை தேவைப்படின் நீல நிற ஒளியின் கீழ் குழந்தையை வளர்த்தி, உடலிலுள்ள பிளிறூபின் பதார்த்தத்தை குறைக்க முடியும். இதை ஒளிச்சிகிச்சை (Phototherapy) என்பார்கள்.
சில வேளைகளில் பிளிறூபினினளவு மிக அதிகமாயின், குழந்தையினுடைய குருதியை, புதிதாய் பெறப்பட்ட வேறு ஒருவரின் குருதியினால் மாற்றவேண்டிய தேவை ஏற்படலாம் (Exchange Transfusion) இந்தச் சிகிச்சையை முறையை மிக அவதானத்துடன் அதற்கான வசதியுள்ள வைத்தியசாலைகளிலேயே அளிக்க முடியும்.

எனவே தோல் மஞ்சள் நிறமடைதல் என்பதும் ஆபத்தின் அறிகுறியே. இந்த நிலை காணப்படின் உடனடியாக வைத்தியசாலைக்கு குழந்தையைக் கொண்டு சென்று அதற்கான சோதனைகளையும் சிகிச்சையும் பெற்றுக்கொள்ள வேண்டும். பெரும்பாலான, தோல் மஞ்சள் நிறமாவதற்கான காரணிகளிற்கு சிகிச்சை உண்டு. உரிய வேளையில் தாமதமின்றி சிகிச்சையளிப்பின் குழந்தைக்கு மூளையைப் பாதிக்கக்கூடிய ஆபத்திலிருந்து பாதுகாக்க முடியும். எனவே தான் இந்த நிலையை மஞ்சள் எச்சரிக்கை என அழைக்கலாம்.

Dr.ந.ஸ்ரீசரணபவாந்தன்.
குழந்தை வைத்திய நிபுணர்