குழந்தைகளுக்கான உணவூட்டல் தொடர்பான மேலதிக 10 பிரதான செய்திகள்

 1. தனித் தாய்ப்பாலூட்டலை கேட்கும் போதெல்லாம் முதல் ஆறு மாதங்கள் முடியும் வரையும் வழங்குவது சிறப்பான வளர்ச்சியையும் விருத்தியையும் குழந்தை களுக்குத் தரும்.
 2. 6 மாதங்கள் முடிவடைந்த உடனே தாய்ப்பாலுக்கு மேலதிகமாக திடமான அல்லது அரைத் திடமான வேறு உணவுகளையும் கொடுக்கத் தொடங்குவதுடன் தாய்ப்பாலூட்டலை 02 வயது வரை அல்லது அதனிலும் அதிகமாகத் தொடர்வது குழந்தை நன்றாக வளர்வதற்கு உதவுகிறது.
 3. கரண்டியில் ஒழுகாது இருக்கக் கூடியளவு தடிப்பான நிலையில் உள்ள மேலதிக உணவு கூடுதலான சக்தியை குழந்தைக்கு வழங்குகின்றது.
 4. விலங்குணவுகளை மேலதிக உணவூட்டலைத் தொடங்கியதிலிருந்து வெகுவிரைவாகவே (ஒருகிழமை அளவில்) சேர்க்கத் தொடங்குவது பிள்ளைகள் பலமுள்ளவர்களாக, உயிரோட்டமுள்ளவர்களாக வளர விசேடமாக உதவுகின்றன.
 5. கடலை, அவரை, போஞ்சிபோன்ற அவரை வகைகளும் மற்றும் கச்சான், கஜூ,பாதாம் போன்ற எண்ணெய் விதைகளும் பலாக்கொட்டை போன்ற வித்துக்களும் படிப்படியாக பிள்ளைகளின் மேலதிக உணவில் சேர்க்கப்படவேண்டும்.
 6. கரும்பச்சை இலைகள், மஞ்சள் நிறக்காய்கறிகள், பழங்கள் என்பன குழந்தையின் ஆரோக்கியமான கண்களுக்கும், ஏற்படும் தொற்று நோய்களைக் குறைக்கவும் உதவுகின்றது.
 7. குழந்தை வளர வளர அதிகளவு உணவு தேவைப்படும். 7-8 மாத வளரும் குழந்தைக்கு ஒரு
  நாளுக்கு 2-3 பிரதானஉணவுகளும் இவற்றுக்கு மேலதிகமாக 1-2 சிற்றுண்டிகளும் தேவை.
  9-24 மாத வளரும் குழந்தைக்கு ஒரு நாளுக்கு 3 பிரதான உணவுகளும் இவற்றுக்கு மேலதிகமாக 1-2 தடவைகள் சிற்றுண்டியும் வழங்கவேண்டும்.
 8. வளரும் குழந்தைக்கு தேவையான உணவின் அளவுஅதிகரித்துச் செல்லும்.
  6-8 மாதங்கள் :- ஒருவேளைக்கு 2-3 தேக்கரண்டியாக தொடங்கி 200 மில்லி லீற்றர் கிண்ணம் ஒன்றின் அரைவாசி அளவுக்கு அதிகரிக்கவும்.
  9-11 மாதங்கள் :-முக்கால் கிண்ணம் (அதே 200 மி.லீகிண்ணத்தில்) அளவுக்கு
  12-23 மாதங்கள் :- ஒருகிண்ணத்திலும் சிறிது அதிகமாக படிப்படியாக உணவின் பதத்தையும் மாற்றவும். (நன்குமசித்த உணவு, பின்,சிறிதளவுமசித்த உணவு,பின் விரலால் பிடிக்கக்கூடிய உணவு, பின் குடும்ப உணவு என)
 9. ஒரு குழந்தை உண்பதை எப்படி வெவ்வேறு சுவைகளை உண்ணவும் வெவ்வேறு பதங்களிலான உணவுகளை உண்ணவும் கற்றுக் கொள்ளவேண்டியுள்ளது. ஏராளமான பொறுமையுடன் உதவியையும், உற்சாகப்படுத்தலையும் வழங்கவும்.
 10.  நோய்வாய்ப்பட்ட நிலையில் அதிகளவு உண்பதற்கு, குடிப்பதற்குபிள்ளையை ஊக்கப்படுத்தி, நோய் நீங்கியபின் விரைவாக பழைய நிலையை அடைவதற்கு மேலதிக உணவினையும் வழங்குங்கள்.

குறிப்பு

 • மேலதிக உணவூட்டலை ஆரம்பிக்கையில் பலரும் கடைகளில் விற்கும் கவர்ச்சிகரமான, பிரபல்யமானதயாரிப்பு களைப் பாவிக்கின்றனர். உதாரணமாக குழந்தை பிஸ்கற்றுக்கள், கடைகளில் விற்கும் பிரபல்யமான தானிய மாக்கலவைகள் போன்றவை. இவை குழந்தைகளுக்கு நல்லவையல்ல. குழந்தைகள் இவற்றின் அதீதசுவைக்கு இலகுவில் பழக்கப்பட்டு விடுவர்.(அடிமையாகிவிடுவர் என்றும்கூறலாம்.) இதன் காரணமாக குழந்தைகள் வீட்டு உணவுகளை குறிப்பாக பலர் மரக்கறிகள், பழங்களை உண்ண
  மறுப்பர். இந்தக் கடை உணவுகளால் ஏற்படும் தீய உணவுப்பழக்கங்களை குழந்தைகள் வளர்ந்த பின்னரும் மாற்ற முடியாது சிரமப்படுவர். ஆகவே எப்போதும் வீட்டில் தயாரிக்கப்படும் உணவுகளையே உண்ணக் கொடுங்கள்.
 • உப்பையும் சீனியையும் 01 வயது முடியும் வரையாவது குழந்தைகளின் உணவில் சேர்க்கவேண்டாம். உறைப்பையும் தவிர்க்கவேண்டும்.
 • குழந்தைகளுக்கு எப்போதாவது ஒருதடவை சொக்கிளேற் போன்ற இனிப்புக்களை வழங்குவதில் தவறில்லை. ஆனால் அவற்றை மதிய நேர பிரதான உணவின் பின் உடனடியாக வழங்குங்கள். உணவின் பின் வாயில் அதிகளவு எச்சில் சுரந்துகொண்டிருக்கும் என்பத னால் இவை விரைவாக கழுவப்பட்டுவிடும்.

சுகாதாரதிணைக்களம்
யாழ்ப்பாணம்.