கர்ப்பிணித் தாய்மார்கள் போசாக்குத் தொடர்பில் தெரிந்திருக்க வேண்டியவை

கர்ப்பவதியின் கருப்பையில் உள்ள சிசு தனது தேவைகளுக்கு தாயிடமுள்ள சத்துக்களிலேயே முற்றாகத் தங்கியுள்ளது. இதற்கு மாற்று வழியேதுமில்லை. ஆகவே சகல கர்ப்பவதிகளும் கர்ப்ப காலத்தில் (பாலூட்டும் காலத்திலும்) வழமையான தங்களது உணவிலும் விட மேலதிக அளவில் தரமான சத்துக்கள் அனைத்தையும் போதியளவிலும் சமவிகித அளவிலும் உள்ளெடுக்க வேண்டும்.

அப்படி உள்ளெடுக்காத போது தாயினதும் கருவிலுள்ள குழந்தையினதும் ஆரோக்கியம் பாதிக்கப்படும். இதனால்
ஏற்படும் பாதிப்புக்கள் குழந்தை பிறந்த பின்னர் பெரியவனாகியும் தொடரும்.

கீழே சில முக்கியமான சத்துக்கள் மற்றும் நுண்போசணைகள் பற்றிய முக்கிய மான தகவல்கள் தரப்படுகின்றன.

இரும்புச்சத்து (Iron)

உடலில் சகல பகுதிகளிலும் நடைபெறும் சக்திச் செயற்பாடுகளுக்கு வளியிலுள்ள ஒட்சிசன் அந்தந்தப் பகுதிகளுக்குக் கிடைப்பது மிக அவசியமானதாகும்.

சுவாசப்பைக்கு வெளியிலிருந்து உட்சுவாசம் மூலம் வரும் ஒட்சிசன் உடலின் சகல பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்பட வேண்டும். அதற்கு இரத்தத்தில் உள்ள குருதிச் செங்கலங்களிலுள்ள (Red blood cells RBC) ஈமோக்குளோபின் (Haemoglobin) என்ற புரதப்பதார்த்தம் அவசியமானதாகும்.

ஈமோக்குளோபினின் முக்கிய செயற்பாட்டுக்கான கூறாக இரும்பு உள்ளது. ஈமோக்குளோபினை உற்பத்தி செய்ய மிக அவசியமான போசணைக் கூறாக இரும்புச் சத்தைக் குறிப்பிடலாம். தேவையான அளவு இரும்புச்சத்து கிடைக்குமாயின் குருதியில் போதியளவு செங்கலங்களும் அவற்றில் போதிய அளவு ஈமோக்குளோபினும் இருக்கும். உடலின் சகல பகுதிகளுக்கும் ஒட்சிசனைக் கொண்டு செல்லும் பணி ஒழுங்காக நடைபெறும் போது அதன் மூலம் உடலின் சகல தேவைகளுக்குமான சக்தி உற்பத்தி தடையின்றி போதியளவு நிகழும். இதனால்
உடலில் சக்தி தேவைப்படும் சகல செயற்பாடுகளும் சரியான முறையில் நடக்க முடியும்.

உடலில் இரும்புச்சத்தின் அளவு குறைந்தால் இரத்தத்தில் ஈமோகுளோபினின் அளவு குறையும். இதையே குருதிச்
சோகை (Anaemia) எனச் சொல்கின்றோம். குருதிச் சோகையுள்ளவருக்கு உடலின் பகுதிகளுக்கு போதியளவு ஒட்சிசன் எடுத்துச் செல்லப்படுவதில் தடைகள் ஏற்படும்.

குருதிச்சோகை இரும்புச் சத்துக்குறைபாட்டாலேயே பெரும்பாலும் ஏற்படுகிறது. சிலவேளைகளில் போலிக்கமில குறைபாடு விற்றமின் பீ 12 (vitamin B12) குறைபாடு, நாட்பட்ட அல்லது அதிக குருதியிழப்பு, பரம்பரைக் குறைபாடுகள் மற்றும் சில அரிதான நோய் நிலைகள் போன்றவற்றாலும் குருதிச்சோகை ஏற்படலாம்.

குருதிச் சோகையால்,

 • இலகுவில் களைப்படைதல் அல்லது பலவீனமாக உணர்தல்.
 •  சிறிய வேலைக்கே அதிக மூச்சு வாங்குதல்.
 • தலைச் சுற்று, தலையிடி.
 • உடல் வெளிறல்.
 • நெஞ்சு நோ.
 • இலகுவாக அடிக்கடி நோய்த் தொற்றுக்கள் ஏற்படுதல்.
 • சோம்பல் தன்மை.
 • நெஞ்சுப் படபடப்பு, (குருதிச் சோகை கடுமையானால் இதயச் செயலிழப்புக் கூட ஏற்படலாம்.)
 • அவதானம் மற்றும் ஞாபக சக்தி போன்றவற்றில் குறைபாடு.

ஆகியன ஏற்படலாம். கர்ப்பவதிகளுக்கு குருதிச்சோகை ஏற்படும் போது மேலேயுள்ளவற்றுக்கு
மேலதிகமாக,

 • குறைமாதப் பிரசவம்.
 • பிரசவத்தின் போதான குருதிப்பெருக்கு.
 •  பிரசவத்துக்குப் பின்னான மன அழுத்தம்.
 • குழந்தைக்கும் குருதிச் சோகை.
 •  குழந்தைக்கு விருத்திக் குறை பாடுகள்.

போன்றன ஏற்படலாம் மேலும் கர்ப்பத்தில் இருந்த போது தாய்க்கு குருதிச்சோகை இருந்த பிள்ளைகளுள் பலர் பின்னர் ஆயுள் முழுவதும் கல்வியில் பின்தங்கியிருப்பது விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இப் பிள்ளைகள் கணித ஆற்றலில் குறைபாடுடையவர்களாக இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

இரும்புச் சத்துக் குறைபாடு ஏற்படுவதில் செல்வாக்கு செலுத்தும் காரணிகள்

 • அன்றாடம் நாம் உண்ணும் உணவில் இருந்து போதியளவு இரும்புச் சத்து இல்லாமை.
 • இரும்புச்சத்துள்ள உணவுகளை உட்கொண்ட போதிலும் கூட அவற்றில் அடங்கியுள்ள இரும்புச்சத்தானது போதியளவு குடலில் உறிஞ்சிக் கொள்ளப்படாமை.
 • இரத்தம் இழக்கப்படுவது காரணமாக. பல்வேறு விதமான தொற்று நோய்கள் (கொழுக்கிப்புழுத்தொற்று , மலேரியாபோன்றன.)
 • சில நாட்பட்ட தொற்றா நோய்கள்.

நாம் அன்றாடம் உண்ணும் உணவில் இருந்து கிடைக்கும் இரும்புச்சத்தின் அளவை எவ்வாறு
அதிகரிக்கலாம்?

 • எமது உணவுத் தெரிவின் போது இரும்புச்சத்து அதிகம் அடங்கியுள்ள உணவு வகைகளைத் தெரிவு செய்தல் வேண்டும். (கடும் பச்சை நிறக் கீரை வகைகள், பயறு வகைகள், கருவாடு, இறைச்சி, மீன் போன்றன.)
 • எமது குடலினால் இலகுவாக உறிஞ்சப்படக்கூடிய வடிவிலான இரும்புச்சத்து கீம் (Heam) வடிவமாகும். மீன் மற்றும் இறைச்சி வகைகளிலேயே இது உள்ளது.
 • தாவர உணவுகளில் உள்ள இரும்புச்சத்தின் அளவு விலங்குணவுகளிலும் விடக் குறைவாகும். இவற்றிலுள்ள இரும் புச்சத்தின் வடிவம் இலகுவில் உறிஞ்சப் படக் கூடியதுமல்ல. அதனால் இவை குடலில் உறிஞ்சப்படும் அளவும் குறைவானதாகும்.
 • குடலில் உணவுகளிலுள்ள இரும்புச்சத்து (குறிப்பாக தாவர உணவுகளிலுள்ளது). உறிஞ்சப்படுவதை அதிகரிக்க இரும்புச்சத்துள்ள உணவுடன் அமிலச்சுவையுள்ள உணவுகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக விற்ற மின் சீ அதிகமுள்ள சிற்ரஸ் வகைப் பழங்களை (தோடை , எலுமிச்சை) தக்காளியைச்சேர்த்து உண்ணலாம். அல்லது இறைச்சி வகைகளைச் சேர்த்து உண்ணலாம். (இறைச்சி வகைகளும் தாவர உணவிலுள்ள இரும்பு உறிஞ்சப்படுவதை அதிகரிக்கும்.
 • சமைத்து முடிந்து கறிகள் ஆறிய பின்பே தேசிக்காய் புளியைக் கறிக்கு சேர்க்க வேண்டும்.
 • இரும்புச் சத்து உறிஞ்சப்படுவதைத் தடுக்கும் உணவுகளான, கல்சியம் நிறைந்த உணவுகள் (பால் மற்றும் பாற்பொருட்கள்). கோப்பி, கோலா போன்ற பானங்கள் போன்றவற்றை இரும்புச்
  சத்துக்காக உள்ளெடுக்கும் உணவுகளுடன் சேர்த்து உண்பதைத் தவிர்த்தல், அதாவது குறைந்தது ஒரு மணித்தியால மாவது இடைவெளி விட வேண்டும்.
 • அப்பம் , தோசை என்பவற்றை எமது உணவிற்காக தயார் செய்யும் போது பின்பற்றப்படும் உணவை புளிக்க வைக்கும் முறையைப் பின்பற்றுதல் .
 • கடலை, பயறு போன்ற தானியங்களை 24 மணித்தியாலங்கள் நீரில் ஊறவைத்து முளையரும்பிய பின்னர் சமைத்தல். (உதாரணமாக இன்றைய காலை உணவு பயறாக இருந்தால் நேற்றுக் காலையிலேயே முழுப்பயற்றை நீரினுள் ஊற வைத்தல் வேண்டும். முளைவிட்ட பயறு வகைகளால் கிடைக்கப்பெறும் சத்தின் அளவானது நேரடியாகப் பயறு
  வகைகளை பாவிப்பதிலும் விட இரட்டிப்பாகும்.)

சுகாதார திணைக்களம்
யாழ்ப்பாணம்.