வாழ்வில் வெற்றிபெற்றிட …. 3 : Dr.சி.சிவன்சுதன்

நாம் பலவற்றை கற்றுக் கொண்டே இருக்கின்றோம்.கருவறையில் கருக்கொண்ட காலத்திலிருந்து நாம் கற்றுக்கொண்டே இருக்கின்றோம். வாழ்வில் பலவற்றை யாராலும் கற்பிக்க முடியாது. நாமாகத் தான் கற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது. வாழ்வின் வெற்றிக்கானபாதையை எவ்வாறு செப்பனிடுவது என்பதையும் நாமாகத்தான் கற்றுக் கொள்ளவேண்டும்.

வாழ்வின் வெற்றிக்கான அடிப்படைவிடயங்களாகிய மகிழ்வு, மனநிறைவு,ஆன்ம திருப்தி என்பன எதிலிருந்து எமக்கு கிடைக்கப் பெறுகின்றன? இவை பணத்திலோ ,வசதிகளினாலோ அல்லது பட்டங்களினாலோ, அந்தஸ்த்தினாலோ அல்லது பிறர் தருவதினாலோ கிடைக்கப்பெறுவது அல்ல. அவை எமது உள்ளுணர்விலிருந்து ஊற்றெடுத்துவரும் தன்னம்பிக்கை உணர்வில் தங்கியிருக்கிறது.

நாம் விழுந்து போகும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் சுமந்து நிற்கும் தன்னம்பிக்கை உணர்வு தான் எம்மை தாங்கிநிறுத்துகிறது. தன்னம்பிக்கை உணர்வும் அனுபவ முதிர்ச்சியும் எம் மனதை அமைதிப்படுத்தும் சோர்வை நீக்கும். எம் செயற்திறனையும் வல்லமையையும் பெருக்கும். இந்த அனுபவ முதிர்ச்சி வயதினால் அல்லது வயது போவதனால் ஏற்படுவது அல்ல.

அவை எமது வாழ்வில் தோல்விகள் போலவும் கஸ்டங்கள் போலவும் தோற்றப்படும் நிகழ்வுகளினாலேயே ஏற்படுகிறது. எமது அனுபவ முதிர்ச்சியை வளர்த்துக் கொள்வதற்கு உதவும் இந்த சம்பவங்களை எமது வாழ்வின் தோல்விகளாக கருதி விட முடியாது.

பின்னோக்கி இழுக்கப்பட்ட அம்புகள் தான் முன்னோக்கிப் பாயும். இது ஒரு இயக்கவியல் தத்துவம். பூமியின் உண்மையான இயற்கையான அழகான இடத்திற்குச் செல்ல வேண்டுமாயின் கடினமான பாதையினூடே சென்று ஆகவேண்டும். இது ஒரு இயற்கையின் தத்துவம். வாழ்வின் தத்துவமும் இதுவே.

என்றும் அன்றாட வாழ்வில் பொதிந்திருக்கும் நல்ல விடயங்களை அடையாளப் படுத்துவதில் கவனம் செலுத்துவோம். அவற்றை பாராட்டும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்வோம். இதன் பொழுது மகிழ்வும் நட்பும் தானாகப் பெருக்கெடுக்கும். அது பிறரை நல்லவற்றை செய்வதற்கு ஊக்கப்படுத்தும் .எதிலும் குற்றம் குறைகாணும் எண்ணம் எம்முள்ளே குடிகொண்டிருக்குமாயின் நாம் அமைதியாக வாழ முடியாது. மனதில் மகிழ்வு இருக்காது.அடிக்கடி கோபப்பட வேண்டிய சூழ் நிலைகள் ஏற்படும்.
ஒவ்வொரு தடவையும் கோபப்படும் பொழுது நாம் தோற்றுவிடுகிறோம். கோபத்தை ஏற்படுத்திய அந்தச் சூழ்நிலை எம்மை வெற்றி கொள்கிறது. கோபமான நிலையில் எமது புத்தி மங்கி சாதுரியம் குன்றி மனதாலும், உடலாலும் பிழையான தீர்மானங்கள் எடுக்கும் ஒரு பலவீனமான நிலைக்குத்தள்ளப்படுகிறோம்.

தொடரும்.

Dr.சி.சிவன்சுதன்
பொதுவைத்தியநிபுணர்.