ஆற்றல்மிக்க மனம் – Dr.க.மனோகரன்

எமது மனமும் அதில் ஊற்றெடுக்கும் எண்ணங்களும் எத்தனை ஆற்றலுடையது என்பதை எம்மில் பலர் அறிந்திருப்பதில்லை.

ஒன்றன் பின் ஒன்றாக ஊற்றெடுக்கும் ஒவ்வொரு எண்ணங்களும் ஏதோவொரு வகையில் எமக்கே தெரியாமல் எமக்கும் எம்மை சுற்றியிருப்பவர்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. அதன் சாதக பாதக விளைவுகள் அவ்வெண்ணங்களின் தன்மைக்கேற்ப மாறுபடும்.

பொதுவாக நல்லதை நோக்காக கொண்ட எண்ணங்கள் நன்மையையும் தீமையை நோக்காக கொண்ட எண்ணங்கள் தீங்கையும் ஏற்படுத்தக்கூடியவை.

மேலும் நல்ல எண்ணங்களை கொண்ட மனம் தீய எண்ணங்களை கொண்ட மனதை விட ஆரோக்கியமானதாகவும், வலிமையானதுமாக காணப்படும். அத்தோடு மனமானது ஒருமுகப்பட்டிருக்கும் போது அதில் தோன்றும் எண்ணங்கள் மிக வலிமையானவை. அதாவது ஒரு காரியத்தில் நாம் மனமொன்றி ஈடுபடும் போது அக்காரியத்தை எம்மால் சுலபமாக நிறைவேற்றக் கூடியதாக இருப்பதுடன் அக்காரியம் மிகுந்த வெற்றி அளித்திருப்பதையும் சிலர் உணர்ந்திருப்பீர்கள். அதற்கான காரணம் எமது எண்ணங்கள் வலிமை அடையும் போது அதனால் ஏற்படுத்தப்படும் தாக்கத்தின் வலிமையும் அதிகரிக்கின்றது.

அந்த வகையில் நாம் ஒரு நோயின் தாக்கத்திற்கு உள்ளாகும் போது அந்நோய் எம்மை எவ்வளவு தூரம் பாதிப்பிற்குள்ளாக்குகின்றது என்பதும் அதிலிருந்து நாம் எவ்வளவு விரைவாக விடுபடுகின்றோம் என்பதும் எமது உடல் ஆரோக்கியம் மட்டும் சார்ந்த ஒரு விடயமல்ல. அது எமது மனது எத்தனை ஆராக்கியமானது வலிமையானது என்பதிலும் பெருமளவு தங்கியுள்ளது.

உதாரணத்திற்கு தனக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்த ஒருவர், அதனால் தான் விரைவில் இறந்து
விடுவேன் என்று பயம் கொண்டு தன் மன நிம்மதியை இழந்து அல்லலுறும் போது அவருக்கு புற்றுநோயின் தாக்கம் அதிகரித்து உண்மையிலேயே எதிர் பார்த்ததை விட மிக விரைவிலேயே அவர் இறந்து விடக் கூடும்.

இதற்கு எதிர்மறையாக மேலே குறிப்பிட்டவரின் புற்றுநோயை விட ஆபத்தான நோயுடைய, இன்னும் சில சொற்ப காலமே உயிரோடு இருப்பார் என்று எதிர்வு கூறப்பட்ட ஒருவர் மிகுந்த மன உறுதியுடன் அந்நோயை எதிர்கொள்ளும் போது அந் நோயின் தாக்கம் மிகக் குறைவடைந்து எதிர்பார்த்ததை விட அதிக காலம் உயிரோடு வாழக்கூடும்.

இவ்விடயங்கள் பல ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்ட உண்மைகளாகும். இவை எல்லா நோய்களுக்கும் பொதுவானது.

ஆகவே நாம் உடலைப் பராமரிப்பது போன்று எமது மனதையும் பராமரிக்க வேண்டும். தீய எண்ணங்களை தவிர்த்து
நல்லவற்றை மட்டும் நினைக்க பழகிக் கொள்ள வேண்டும். அந்த வகையில் எமது வாழ்க்கையின் பரிமாணங்கள் எமது எண்ணங்களின் பரிமாணங்களை அடிப்படையாகக் கொண்டது என்பதை நாம் உணர்வோம். அதாவது கீதையில் கூறப் பட்டது போன்று நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய்.

Dr.க.மனோகரன்
போதனாவைத்தியசாலை
யாழ்ப்பாணம்.