வாழ்வில் வெற்றிபெற்றிட …. 4 : Dr.சி.சிவன்சுதன்

வாழ்க்கை உண்மையில் எளிமையானது. நாமே அதனை சிக்கல்கள் நிறைந்ததாக மாற்றிக்கொள்கிறோம். சிக்கல்களை ஏற்படுத்துவதற்கு எமது வாதிடும் குணாதிசயமும் கோபப்படும் தன்மையுமே பிரதானமான காரணமாக அமைகின்றது.

ஒரு விடயத்தை உணரக்கூடிய திறமைசாலிகள் என்று நாம் கருதுபவர்களுடன் மட்டும் வாதிடுவோம். எமது கருத்துக்களை வலியுறுத்திச் சொல்லுவோம். அவ்வாறானவர்கள் அல்ல என நாம் கருதுபவர்களுடன் வாதிட்டு நாமும் காயப்பட்டு மற்றவர்களையும் காயப்படுத்தும் முயற்சி எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.

அமைதியாக இருப்பது ஆமோதிப்பது என்று அர்த்தப்படாது. பேசிப்பயன்தராது என்று நினைக்கின்றபொழுது அல்லது
உண்மை துலங்க காலம் கனிய வேண்டும் என்ற நிலை இருக்கும்பொழுது அமைதிசிலசமயம் மிகப்பொருத்தமான ஆயுதமாக இருக்கலாம்.

எமது இலக்கை நோக்கிய பாதையில் நின்று குரைக்கும் ஒவ்வொரு நாய்களுக்கும் கல்லெறிய முற்படுவோமாயின் எமது பயணம் முற்றுப்பெறமாட்டாது என்று அறிஞர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதேபோலத்தான் வாழ்வில் ஏற்படும் இடையூறுகள் ஒவ்வொன்றுடனும் மோத முற்படுவோமாயின் எமது இலக்கை அடையமுடியாது.

இன்று ஒருவன் பலம் பொருந்தியவன் போலத்தோற்றப்படலாம். ஆனால் காலச்சக்கரத்தின் கரங்கள் மிகமிகப் பலமானது. காலம் மாற, காலம்கனிய கனகாலம் ஆகாது.

விடயங்களை அமைதியாகவும் உணர்வு பூர்வமாகவும் அணுக பழகிக்கொள்ளும் பயிற்சி பயனுடையதாக அமையும். அந்தப்பயிற்சி அமைதியான முன்னோக்கிய பயணத்திற்கு உறுதுணையாக அமையும்.

எமது பயணத்தின்பொழுது எம்மீது கல்லெறிகள் விழலாம். அவற்றை எடுத்து திருப்பி எறிந்து அந்தக் கற்களை வீணடிப்பது புத்திசாதுரியம் ஆகாது. அந்தக் கற்களைக் கொண்டே எமது பாதையை செப்பனிட முயலுவோம். எமது பாதைக்கு உரம் சேர்ப்போம்.

எந்தப்பாதையில் பயணிப்பது என்ற தடுமாற்றம் தேவை அற்றது. மன உறுதியும் மனச்சாட்சியுடன் கூடிய உழைப்பும் இருக்குமாயின் நாம் பயணித் துக்கொண்டிருக்கும் பாதையே சரியான பாதையாக அமையும்.

எமது பயணத்தின் பொழுது காலம் பலவற்றை எமக்கு கற்றுத்தரும் நாம் எப்பொழுதும் கற்பதை நிறுத்தி விடமுடியாது. அதுவே எமது முன்னேற்றத்தின் உயிர் மூச்சு. இது புத்தகக் கல்வி என்று அர்த்தப்படாது. ஏமாற்றங்கள், இழப்புகள்,வறுமை,ஏன் பசிகூட எமக்கு பலவற்றை கற்றுத்தரும். எம்மை பக்குவப்படுத்தும்.

எமது இலக்கை அடைய அதிககாலம் எடுப்பது தோல்வி என்று ஆகிவிடாது. எமது உண்மையான நோக்கங்களை நோக்கி அமைதியாக எடுத்துவைக்கும் ஒவ்வொரு காற்தடங்களும் வெற்றிக்கான பதிவுகளே. வாழ்க்கை குறுகியது. இந்தக் குறுகிய வெளியில் பகைவளர்த்து நேரத்தை வீணடிப்பது வெற்றிக்கு இடையூறாக அமையும்.

தொடரும்.

Dr.சி.சிவன்சுதன்
பொதுவைத்தியநிபுணர்.