குழந்தைகளுக்கு மேலதிக உணவூட்டல் (Complementary Feeding)

மேலதிக உணவூட்டல் என்பது தாய்ப்பாலுடன் சேர்ந்து ஆகாரங்களையும் படிப்படியாக சேர்த்துக் கொள்வது. எப்போது கொடுக்கப்பட வேண்டும்? 06 மாதங்கள் (180 நாட்கள்) முடிந்தவுடன் மேலதிக உணவூட்டல் தொடங்க வேண்டும்.

எமது பகுதியில் சமய நம்பிக்கைகளுக்காக (“சோறு தீத்தல்”) மேலதிக உணவூட்டலை ஆரம்பிப்பதைப் பிற்போடும் தவறான வழக்கம் உள்ளது. அதே போல் இச்சமயச் சடங்கைச் செய்ய காலதாமதமாவதால் அதுவரை வீட்டில் சமைத்த உணவை வழங்காமல் கடைகளில் விற்கும் விசேட உணவுகளை வழங்கும் தவறும் பெருமளவு நடைமுறையில் உள்ளது.

இப்பழக்கம் தவிர்க்கப்பட வேண்டும். குழந்தையின் நலனுக்காக சமயச் சடங்கை முன்னதாக, உரிய காலத்தில், அதாவது 6 மாத முடிவில் செய்து சரியான மேலதிக உணவூட்டலை ஆரம்பிக்க அனைவரும் முன்வர வேண்டும்.

ஏன் கொடுக்கப்பட வேண்டும்?

 1. 6 மாதத்தின் பின் வளருகின்ற குழந்தையின் சக்தி மற்றும் போசணைத் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய அளவில் தாய்ப்பாலிலுள்ள சத்துக்கள் போதாது. மேலும் தாய்ப்பாலில் இல்லாதவையும் கர்ப்ப காலத்தில் தாயிலிருந்து குழந்தைக்கு கிடைத்த போது மேலதிகமாக சேமிக்கப்பட்டிருந்தவையுமான போசணைகள் இவ்வயதில் முடிவுக்கு வரத் தொடங்கிவிடும். இதனால் மேலதிக உணவூட்டல் தொடங்க வேண்டும்.
 2.  வெவ்வேறு விதமான மனித உணவுப்பழக்கங்களுக்கு குழந்தையை பழக்கப்படுத்துவதற்கும் எமது குடும்ப உணவுக்கு தயார்ப்படுத்துவதற்காகவும் மேலதிக உணவூட்டலை தொடங்க வேண்டும்.

மேலதிக உணவின் போசாக்குத்தரத்தை எவ்வாறு அதிகரிக்கலாம்?

 • ஒவ்வொரு வேளை உணவிலும் பல வகையான உணவுகள் வழங்குவதை உறுதி செய்யுங்கள்.
 • உணவூட்ட ஆரம்பித்த சில நாள்களிலேயே விலங்கு உணவு, பருப்பு , கீரை, ஈரல், முட்டை, பயறு, கௌப்பி, கடலை, சோயா, பசளி , வல்லாரை போன்றவற்றை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்க்கத் தொடங்குங்கள்.
 • முளைவிட்ட அவரையின் விதைகளை சேருங்கள்.
 • விற்றமின் Aயை அதிகமாக கொண்ட உணவுகளான ஈரல்,முட்டை மஞ்சட்கரு,கரட், பப்பாசி , மாம்பழம், கடும் பச்சையான இலைகள் போன்றவற்றை அதிகம் சேருங்கள்.
 • தினமும் உள்ளு;ரில் கிடைக்கின்ற பழங்களை ஒரு வேளையாவது சேருங்கள்.
 • உணவு சமைக்கும் போது தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெய், மாஜரின் அல்லது நல்லெண்ணெய் 1-2 தேக்கரண்டி சேருங்கள்.
 • தானியங்களை அடிப்படையாகக் கொண்டு வீட்டில் தயாரிக்கும் சிற்றுண்டிகளை கொடுங்கள். பல்வேறு தானியங்களைக் கலக்கும் போதும் அவற்றுடன் முளைவிட்ட பயறு வகைளை சேர்க்கும் போதும் போசணைத் தரம் அதிகரிக்கும்.

எப்படி மேலதிக உணவுகளை கொடுக்கலாம்?

 • குழந்தைக்கு உணவூட்டுவதற்கான நேரங்களை இயலுமானவரை நியமமாகத்கடைப்பிடியுங்கள்.
 • குழந்தைக்கு உணவூட்டும் வேளைக்கு முன்னதான ஒரு மணி நேரத்துக்கு உணவோ, பானங்களோ தாய்ப்பாலோ கொடுக்க வேண்டாம்.
 • ஆரம்பத்திலிருந்து பிள்ளைக்கு உணவை ஒரு இடத்தில் (வீட்டில் அனைவரும் உணவருந்தும் இடம் பொருத்தமானது) இருத்தி வைத்து ஊட்டிப்பழக்கவும். (கொண்டு திரிந்து பராக்குக் காட்டி
  ஊட்டுவது நல்லதல்ல. நீண்ட காலத்துக்கு இம்முறை வெற்றியளிக்க போவது மில்லை.)
 • மிகவும் ஆரம்பத்தில் களித்தன்மையாக உணவைக் கொடுங்கள். (நீர்த்தன்மையாக இல்லை)
 • உணவு வேளைக்குப் பிள்ளைக்குப் பசியில்லை என்றால் குழந்தைக்கு பசிவரும் வரை காத்திருந்து உணவூட்டுங்கள்.
 • குழந்தை நித்திரைத் தூக்கத்தை அடைய முன்னர் உணவூட்டுங்கள்.
 • பிள்ளை ஒரு நேர உணவை உண்ண மறுத்தால் அதற்குப் பதிலாக மாற்று உணவோ,பானங்களோ அல்லது தாய்ப்பாலோ கொடுக்க வேண்டாம்.அந்த உணவு வேளையை கைவிடுங்கள். அடுத்த உணவு வேளை வரை அல்லது சிற்றுண்டி வேளை வரை அல்லது பான
  வேளை வரை காத்திருங்கள்.
 • கடையில் வாங்கும் குழந்தை களுக்கான செயற்கை உணவுகள், பிஸ்கட்டுக்கள் போன்றவை குழந்தையின் உடல் ஆரோக்கியத்துக்கும் அதனது உணவுப் பழக்கங்கள் ஆரோக்கியமாக
  உருவாவதற்கும் தீங்கை விளைவிக்கும்.
 • எப்போதும் வீட்டில் சமைத்த உணவையே ஊட்டுங்கள்.

பிள்ளைகளுக்கான மேலதிக உணவூட்டல்?

 1.  நன்கு மசிக்கப்பட்ட உணவு – கப் (100 மி.லீ) 6 ஆம் மாத முடிவில் இருந்து (181 வது நாளிலிருந்து) 3 வேளை பிரதான உணவு கள்.
 2. சிறு துணிக்கைகள் உள்ள உணவு 3⁄4 கப் (150 மி.லீ) 8 ஆம் மாதத்தில் 3 வேளை பிரதான
  உணவுடன் 1-2 வேளை சிற்றுண்டிகள், பழங்கள் யோகட் போன்றன.
 3.  விரல்களால் பிடித்து உண்ணும் உணவு கப் (150 மி.லீ) 11 ஆம் மாதம் முடியும் வரை 3 வேளை
  பிரதான உணவுடன் 1-2 சிற்றுண்டிகள் பழங்கள், யோகட் போன்றன.
 4.  குடும்ப உணவு 1 கப் (200 மி.லீ) 12 ஆம் மாதம் தொடக்கத்திலிருந்து 3 வேளை பிரதான உணவுடன் 1-2 சிற்றுண்டிகள், பழங்கள், யோகட் போன்றன.

குழந்தைகளுக்கு ஒரு வயது வரும் வரை சீனி, உப்பு என்பவற்றைத் தவிருங்கள்.

சுகாதாரத் திணைக்களம்,
போதனா வைத்தியசாலை,
யாழ்ப்பாணம்.