வாழ்வில் வெற்றிபெற்றிட …. 5 : Dr.சி.சிவன்சுதன்

எம்மிடம் இருந்தவற்றை நாம் இழந்து விடும் பொழுது வேதனைப்படுகிறோம். கோபப்படுகிறோம். மனவிரக்தி அடைந்து தோல்வி மனோநிலைக்கு ஆட்படுகிறோம். ஆனால் அவை எம்மிடம் இருந்த காலத்தில் அவற்றை எண்ணி மகிழ்ச்சி அடைந்திருக்கிறோமா என்று எண்ணிப்பார்ப்போமாக இருந்தால் அந்தக் காலத்திலே அவை சம்பந்தமாக நாம் அக்கறை அற்ற வர்களாக இருந்திருப்பது புலப்படும்.

எம்மிடம் இருப்பவற்றை எண்ணி மகிழ்ச்சி அடையத்தெரியாமல் அவற்றை இழக்கும்பொழுது மட்டும் வேதனைப்படும் மனநிலை விசித்திரமானது. எம்மிடம் இருப்பவற்றை எண்ணி மகிழ்ச்சியும் திருப்தியும் அடையும் மனநிலையை வளர்துக்கொள்ளும் பயிற்சி வெற்றிக்கு வித்திடும்.

எமது சிந்தனை இலக்கு மற்றவர்களிலும் பார்க்க நாம் சிறந்தவர்களாக மாறுவது எவ்வாறு என்று அமைந்திருப்பது
ஆரோக்கியமானதாக அமையாது. இதற்குப்பதிலாக நாம் முன்பு இருந்ததிலும் பார்க்க சிறந்தவனாக வளர என்ன செய்யலாம் என்றவாறாக அமைந்திருப்பது ஆரோக்கியமான பாதையை எமக்கு காட்டிநிற்கும்.

இறைவனிடம் எதனை கேட்கவேண்டும்? மகிழ்வான,மனநிறைவான வாழ்வு எமக்கு கிடைக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்வதிலும்பார்க்க கஷ்டங்களையும், சவால்களையும் மனோதிடத்துடன் எதிர்கொள்ளும் வல்லமையை வேண்டிநிற்பது வாழ்வின் வெற்றிக்கு வழிசமைக்கும்.

வாழ்வில் பல நிரந்தரமான முடிவுகளை சில தற்காலிக காரணங்களுக்காக எடுத்துவிட்டு கஷ்டப்படுகின்றோம். உணர்ச்சி வசப்படடு இருக்கும் சந்தர்ப்பங்களில் முடிவெடுப்பதை தள்ளிப்போடுவது நல்லது. மனம் உணர்ச்சிவசப்படடு அங்கலாய்த்து இருக்கும்பொழுது நாம் எமது உண்மையான தன்னம்பிக்கையை இழந்துவிடுகின்றோம். தினமும் 18 மணிநேரம் தூங்கும் சிங்கங்கள் காட்டின் மன்னனானது எவ்வாறு? அதன் அலட்டிக்கொள்ளாத, அங்கலாய்க்காத மனப்போக்கும் தன்னம் பிக்கையுமே அதன் பலம்.

நாம் உணர்ச்சிவசப்பட்டதாலோ தவறாக வழிநடத்தப்பட்டதாலோ எடுத்த தவறான முடிவுகளை சரிசெய்துகொள்வது தோல்வி என்று அர்த்தப்படாது. சிலரை தவறாக புரிந்துகொண்டு பிரிந்துவிடுகிறோம்.வேறு சில தவறானவர்களை சரியாகப் புரிந்து கொள்ளாததால் அவர்களுடன் நெருங்கி அதன்காரணமாக நொந்து போகிறோம். இவை காலம் எமக்கு கற்றுக்கொடுக்கும் பாடங்கள். எமது துயர்களை நாமே எமது கைகளால் துடைத்து மற்றவர்களுக்கும் கைகொடுத்து எமது வெற்றிப்பாதையை செப்பனிடும் பணியை நாமே முன்னெடுத்து நம்பிக்கை ஒளியில் வெற்றி இலக்கைநோக்கி பயணித்து ஆகவேண்டி இருக் கிறது. எமது அறிவு மங்கிவிடவில்லை. சிந்தனை ஓட்டங்கள் சிதறிவிடவில்லை. மனதினதும் உடலினதும் பலம் அற்றுப்போகவில்லை. அதற்காக சந்தோசப்படுவோம்.

தொடரும்.

Dr.சி.சிவன்சுதன்
பொதுவைத்தியநிபுணர்.